Wednesday, January 12, 2011

நாடு கடந்த தமிழீழ அரசு என்பது ஒரு கோமாளித்தனமே; புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு துன்பம் தரக் கூடாது-வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்!

Wednesday, January 12, 2011
நாடு கடந்த தமிழீழ அரசு என்பது ஒரு கோமாளித்தனமே; புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு துன்பம் தரக் கூடாது!

நாடு கடந்த தமிழீழ அரசு என்பது ஒரு கோமாளித்தனமானது. இதனைத் தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். பணத்துக்காகவும் பதவிக்காகவும் வர்த்தக நோக்கங்களுக்குமாகவே இந்தத் தமிழீழ அரசு செயற்படுகிறது.

கடந்த 30 வருடங்களாக புலிகள் பண பலத்தையும் ஆயுத பலத்தையும் வைத்துப் போராடித் தோற்றுப் போன நிலையில் இந்த நாடு கடந்த தமிழீழ அரசினால் எதனைத்தான் சாதிக்க முடியுமெனக் கேள்வி எழுப்புகிறார்.

வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சரும் பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் தலைவருமான வரதராஜப் பெருமாள். இன்றைய அரசியல் நிலை தொடர்பில் எமது இணையத்தளத்துடன் இன்று கருத்துப் பரிமாற்றம் செய்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது,

தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் இன்று அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதனை நாம் வரவேற்கிறோம். ஆனால், ஏனைய தமிழ்க் கட்சிகளுடனும் பேசினால் நன்றாகவிருக்கும்.


அதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மட்டும் பேசக் கூடாது என்பதல்ல கருத்து. யார் குற்றினாலும் அரிசியானால் சரியே. இன்றைய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணுமா என்று நாம் கேட்டபோது, அரசியலில் சாத்திரம் சொல்வது சரியல்ல.. என்று பதிலளித்தார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழான மாகாண சபைகள் ஊடான ஆட்சி முறை தமிழ் மக்களின் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வாக அமையுமா என்று நாம் கேட்போது, இல்லை எனப் பதிலளித்த அவர், நிறைந்த அதிகாரத்தைக் கொண்ட மாநில சுயாட்சி அமைப்பே இங்கு உருவாக்கப்பட வேண்டும் எனப் பதிலளித்தார்.

மாகாண சபை மூலமான அதிகாரப் பகிர்வு போதாது என்பது கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டில் செயற்படும் மாகாண சபைகளின் செயற்பாடுகள் மூலம் உணர்த்தப்பட்டுள்ளது. தமிழர்கள் மட்டுமல்ல.

சிங்களவர்களும் இதனையே இன்று தெரிவிக்கின்றனர். ஆகவே, தமிழ் மக்களுக்கான தீர்வாக மட்டுமல்லாது சிங்கள மக்களின் பிரச்சினைக்குத் தீர்வாகவும் நிறைந்த அதிகாரத்தைக் கொண்ட மாநில சுயாட்சி அமைப்பே இலங்கைக்கு இன்று தேவை. என்றார்.

புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்பில் நாம் எழுப்பிய வினாவுக்குப் பதிலளித்த வரதராஜப்பெருமாள், அவர்கள் இலங்கையில் வாழும் தமிழர்களுக்குத் துன்பம் தரக் கூடியவர்களாகச் செயற்படக் கூடாது.

இங்கு வாழும் தமிழ் மக்களுக்குப் பலமானவர்களாகவும் வளம் சேர்ப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்றார். புலம்பெயர் தமிழர்களில் பெரும்பாலானோர் இலங்கை அரசுக்கு எதிராகச் செயற்படுகிறார்களே எனக் கேட்டபோது பதலளித்த அவர், அது அவர்களின் ஜனநாயக உரிமையல்லவா? எனப் பதிலளித்தார்.

இலங்கையில் எத்தனையோ கட்சிகள் அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படுகின்றனவே எனக் கூறினார். ஆனால், நாடு கடந்த தமிழீழ அரசு என்பது ஒரு கோமாளித்தனமானது.

இதனைத் தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். பணத்துக்காகவும் பதவிக்காகவும் வர்த்தக நோக்கத்துக்குமாகவே இந்தத் தமிழீழ அரசு செயற்படுகிறது எனவும் குற்றஞ்சாட்டினார்

No comments:

Post a Comment

Followers

Blog Archive