Thursday, November 4, 2010

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் சம்பந்தன் எம்.பியுடன் சந்திப்பு தமிழர்களின் உடனடி பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதில் ஒரே நிலைப்பாடு.

Thursday, November 4, 2010
தமிழ்க் கட்சிகளின் அரங்கப் பிரதிநிதிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இனப்பிரச்சினைத் தீர்வு, தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் அதன் சாத்தியப்பாடுகள் குறித்து நேற்றைய சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம். கே. சிவாஜிலிங்கம் தினகரனுக்குத் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள சம்பந்தன் எம்.பி.யின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் ஈ. பி. ஆர். எல். எப். பத்ம நாபா அணிச்செயலாளர் ஸ்ரீதரன், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம். கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நேற்றைய சந்திப்புத் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த சிவாஜிலிங்கம், தமிழர்களின் உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் விடயத்தில் தமிழ் கட்சிகள் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை இரண்டு தரப்பும் ஏற்றுக் கொண்டது.

தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்து அரங்கத்தில் அங்கம் வகிக்கும் 10 கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டு கடந்த ஜுலை மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அனுப்பி வைத்த கடிதத்தின் பிரதியையும் நேற்று சம்பந்தனிடம் கையளித்தோம். தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இணைந்துகொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான திகதி, நேரம் மற்றும் இடம் பற்றி அறிவிக்குமாறு அவரிடம் நாம் கோரிக்கை விடுத்தோம் என்றார்.

இதேவேளை, கொழும்பில் உள்ள ஈ. பி. டி. பி. அலுவலகத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் தமிழர்களின் உடனடிப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பது தொடர்பான மகஜரொன்றை அரசாங்கத்திடம் கையளிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த சிவாஜிலிங்கம், இந்த மகஜரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

மகஜரில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்கு தமிழ்க் கட்சிகளின் அரங்கம் எதிர்வரும் 13ஆம் 14ஆம் திகதிகளில் கூடவுள்ளது.

ஜனாதிபதியைச் சந்தித்து மகஜர் கையளிக்கப்பட்ட பின்னர் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஆராய்ந்து டிசம்பருக்குள் திட்ட வரைபொன்றை தயாரிப்பது பற்றியும் நேற்றைய அரங்கக் கூட்டத்தில் ஆராய்ந்தோம்.

இரண்டாம் கட்டமாக மலையகக் கட்சிகளை அரங்கத்தில் இணைத்துக் கொள்வது பற்றியும் கலந்துரையாடி யிருந்தோம் என்றார்.

நேற்றைய சந்திப்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்த சங்கரி, ஈ. பி. ஆர். எல். எவ். நாபா அணிச் செயலாளர் தி. ஸ்ரீதரன், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், ஆர். ராகவன், எஸ். சதானந்தன், தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் எம். கே. சிவாஜிலிங்கம், துணைச் செயலாளர் ப. நித்தியானந்தம், சிறி ரெலோ சார்பில் ப. உதயராசா, கு. சுரேந்திரன், ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் என். குமரகுருபரன், ஈழமக்கள் ஏதிலியர் அமைப்பின் சார்பில் செ. சந்திரஹாசன், ரெமிஜியஸ் சிறிகுமார், டி மாணிக்கவாசகர், மனித உரிமைகள் இல்லத்தைச் சேர்ந்த மேகலா சண்முகம், யாழ். மாநகர சபை மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, சந்திரமோகன், அங்கயற்கன்னி ஆகியோர் பங்குகொண்டனர்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive