Thursday, November 18, 2010

ஜனாதிபதியின் பிறந்த தினம் ஜனாதிபதியின் பிறந்த தினம் நாடு முழுவதும் வைபவங்கள்!

Thursday, November 18, 2010
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளையொட்டியும் இரண்டாவது பதவிப் பிரமாணத்தை முன்னிட்டும் நாடு முழுவதும் மத வழிபாடுகளுடன் கூடிய நிகழ்வுகள் கோலாகலமாக நடைபெறுகின்றன.

ஜனாதிபதியின் இரண்டாவது பதவிப் பிரமாணத்தையொட்டி உலகத் தலைவர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். தவிரவும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். அதேநேரம், நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளையும் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

சர்வ மத வழிபாட்டுத் தலங்களிலும் விசேட பூஜைகளும் பிரார்த்தனைகளும் நடைபெறுகின்றன. இதற்கான ஒழுங்குகளை அரசியல், தொழிற்சங்க அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன.

ஜனாதிபதியின் பிறந்த நாளை யொட்டி இன்று (18) மாகம்புர (அம்பாந்தோட்டை) துறைமுகத்தில் முதலாவது கப்பல் நங்கூரமிடும் நிகழ்வு காலை 10.30 மணிக்கு ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறுகிறது. இன்றைய தினம் நாட்டு அபிவிருத்தியைப் பொன்னெழுத்துக்களால் பதியப்படும் ஒரு நாளாகுமென அரசியல் தலைவர்கள் பலர் அபிப்பிராயம் வெளி யிட்டுள்ளனர்.

நாளை 19 ஆம் திகதி இரண்டாவது பதவிப் பிரமாண நிகழ்வு ஜனாதிபதி செயலக வளாகத்தில் நடைபெறுகிறது.

நாளை காலை 10 மணிக்குள்ள சுபவேளையில் ஜனாதிபதி பதவி ஏற்பதற்கான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி காலி முகத்திடல் விழாக்கோலம் பூண்டுள்ளது. முப்படையினரினதும் பொலிஸாரினதும் அணி வகுப்பு மரியாதை மற்றும் போர்த்தளபாட பேரணியும் நடைபெறும்.

இந்த விழாவையொட்டி கொழும்பு கோட்டைக்கான பொதுப் போக்குவரத்து நாளை காலை 6 மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரை தடை செய்யப்படுமெனப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதனை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொழும்பின் சில பகுதிகளிலுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நாளைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பிறந்த தினத்தையொட்டி தேசத்துக்கு நிழல்தரும் 11 இலட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு கடந்த 15 ஆம் திகதி நடைபெற்றது. சில பிரதேசங்களில் தொடர்ந்தும் மரம் நடுகைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொழும்பு 7, சுதந்திர சதுக்கத்தில் ‘சுதந்திரம்’ எனும் தொனிப் பொருளிலான கலாசார கண்காட்சி பிரதமர் டி. எம். ஜயரட்ன தலைமையில் நேற்று (17) ஆரம்பமானது.

பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை நான்கு நாட்களுக்குக் கண்காட்சி நடை பெறும். இந்தக் கண்காட்சியின் விசேட அம்சமாக ஏழாயிரம் கிலோ அரசியில் பிரமாண்டமான பாற்சோறு தயாரிக்கப்படுகின்றது. 65 ஆயிரம் பேர் உண்ணக்கூடிய இந்தப் பாற்சோற்றை உலக சாதனைக்காக 500 பேர் சேர்ந்து தயாரிக்கிறார்கள்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளைய தினம் இந்தக் கண்காட்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார். நாளை மறுதினம் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் கலந்து கொள்வர்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive