Sunday, June 19, 2011

இலங்கைத் தமிழர்களுக்கு இன்று அரசியற் தலைமை இல்லை (பகுதி 3) (அ. வரதராஜப்பெருமாள்)

Sunday, June 19, 2011
திரு. ஆனந்த சங்கரி அவர்கள் ஐம்பது வருடங்களுக்கு மேல் அரசியலி;ல் இருக்கிறார். பல தடவை சுதந்திரமாக தேர்தல்களிலும் வென்று பரந்துபட்ட கிளிநொச்சி மக்கள் பல்லாயிரம் பேரின் அன்பைப் பெற்றவர். அவர் இன்னமும் தமிழர்களுக்காக அரசியலில் இருக்கிறார். அவர் தனது மனச்சாட்சிக்கு உண்மை என்று பட்டவற்றை எந்த சங்கடங்களையும் நட்டங்களையம் பார்க்காமல் துணிந்து சொல்லுபவர். ஆனாலும் கடந்த இரண்டாண்டுகளில் அவரால் யாழ்ப்பாண மாநகர சபைக்கான தேர்தலிற் கூட ஓர் உறுப்பினராக வெல்ல முடியவில்லை. மக்களால் அவர் தலைவராக அங்கீகரிக்கப்படாதவரை அவர் மக்களின் அங்கீகாரம் பெற்ற தலைவராக நெஞ்சை நிமிர்த்தி மற்றவர்களின் முன்னால் செயற்பட முடியாது. இலங்கையின் ஜனாதிபதி திரு..ஆனந்த சங்கரி அவர்களை நீண்டகால அனுபவங்கள் நிறைந்த ஒரு முதிய அரசியல்வாதி என்ற அடிப்படையில் அழைத்துப் பேசலாம், இலங்கையின் முதிய அமைச்சர்களும் மற்றும் பெரும் அரசியற் தலைவர்களும் அவரைக் கௌரவித்து அவரது அபிப்பிராயங்களைக் காது கொடுத்துக் கேட்கலாம். ஆனாலும் அவரை மக்களின் அங்கீகாரம் பெற்ற பிரதிநிதியாக யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதேபோல இந்திய அரசோ அல்லது இலங்கை அரசோ தமிழர்களின் பிரச்சினைக்கான தீhவு தொடர்பாக ஏதோ ஒரு வகையாக மரியாதைக்காக பேசினாலும் தமிழரசுக் கட்சிக் காரர்களுடன் பேசும் அளவுக்கு இவருடன் முன்னுரிமை கொடுத்துப் பேசத் தயாராக இல்லை என்பதையும் நாம் நடைமுறையில் காண்கிறோhம்.

தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவர் சித்தார்த்தன் அவர்களைப் பாருங்கள் அவருக்கும் தமிழர்களின் போராட்டத்துக்கும் 40 ஆண்டுகளுக்கு மேற்பட்ட உறவு உள்ளது. தமிழரசுக்கட்சி, தமிழ் இளைஞர் பேரவை, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என 40ஆண்டு காலங்களுக்கு மேலாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார் 10 ஆண்டுகளுக்கு மேல் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். அவரின் தலைமைக்கு உட்பட்டவர்கள் வவுனியா நகரசபையை மிகச் சிறந்த முறையில் நிர்வகித்துக் காட்டியதை வன்னி மக்கள் நன்கு அறிவர்;. வன்னியில் மூன்று இலட்சம் தமிழர்கள் அகதிகளாக வவுனியாவில் முகாம்களில் முட்கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டிருந்த போது மிக அதிகப்படியாக உதவி செய்து அந்தரித்து நின்ற அந்த மக்களுக்கு துணையாக நின்ற அரசியற் கட்சியின் தலைவர் அவர். ஆனால் அவர் கூட அதே வன்னியில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்களின் அங்கீகாரத்தைப் பெற முடியவில்லை. அதனால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இவர் எழுப்பும் குரல்களுக்கு அரசியல் அரங்கங்களில் ஓர் அங்கீகாரமும் இல்லாமற் போய்விட்டது.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் தோழர் சிறிதரன் அவர்களைப் பாருங்கள. தனது பதினேழாவது வயதில் தமிழர்களது போராட்டக் களத்தில் தன்னை இறங்கியவர். கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்காகவும் முன்னேற்றகரமான வாழ்வுக்காகவும் ஒரு போராட்ட வாழ்க்கையை விடாது நடாத்தி தொடர்ந்து பணியாற்றி வருகிறார் என்பதை அவரை அறிந்தார் அனைவரும் அறிவர். 1984ம் ஆண்டு இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு இவரின் கால் அடித்து முறிக்கப்பட்டு அழுகும் நிலை வரை துன்பத்துக்கு உள்ளானவர். ஆனாலும் எந்த வேளையிலும் உறுதி தளராதவர். சாவு அவரது கண்ணுக்கு முன்னால் கொண்டு வரப்பட்ட போhதிலும் தான் கொண்ட அரசியல் நிலைப்பாடுகளில் நின்று சற்றும் தடம் புரளாத அரசியல் உருக்காக இருந்தவர். மூன்று ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த போதிலும் அவரோடு சிறைவாசம் அனுபவித்த அனைவரினதும் அன்புக்கும் பெரும் மதிப்புக்கும் உரியவர் அவர். மிகச் சிறந்த சிந்தனையாளன், பேச்சாளன், வெகுவீச்சான அரசியல் எழுத்தாளன். ஓர் உண்மையான சர்வதேசிய சமதர்மவாதி. தனக்கு அரசியல் பதவிகள் வராது என்று தெரிந்திருந்தும்; தமிழர்களின் நல்வாழ்வையும் முன்னேற்றத்தையுமே அல்லும் பகலும் கருத்தாய்க் கொண்டிருக்கிறார். ஆனாலும் மக்களின் வாக்குகள் மூலமான அங்கீகாரத்தைப் பெறாதவரை இவராலும் எதனையும் மக்களுக்காகச் சாதிக்க முடியவில்லை என்பதையே அனுபவம் காட்டுகிறது.

புத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான தோழர் இரா.துரைரத்தினம் எனது இந்த ஆய்வுக்கு சிறந்த உதாரணமாக உள்ளார். இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழர்களின் அரசியல் சமூக வாழ்வோடு தன்னை இணைத்து செயற்பட்டு வருகிறார். ஒருங்கிணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாண சபையிலும் உறுப்பினராக இருந்து இன்றைக்கிருக்கும் கிழக்குமாகாண சபையிலும் உறுப்பினராக இருக்கும் ஒரே தமிழ் உறுப்பினர் இவரேயாவர். ஏத்தனையோ கஷ்டங்கள் உயிராபத்துக்களின் மத்தியிலும் மக்களுக்கான தனது சேவையிலிருந்து இவர் எந்தக் கட்டத்திலும் தூரப்போனதில்லை. மட்டக்களப்ப மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இவரையறியாத ஓர் அரசியற் பிரமுகரோ அல்லது சமூகப் பிரமுகரோ அல்லது ஓர் தமிழ் அரசாங்க ஊழியரோ இருக்கமாட்டார் என நாம் உறுதியாகக் கூற முடியும்.

தோழர் துரைரத்தினம் மக்கள் சேவையில் ஈடுபடாத நாள் என்ற ஒன்று கடந்த முப்பது வருடங்களில் ஒரு நாள் கூட இருக்கமாட்டாது எனலாம். இப்படிப்பட்ட ஒரு தோழர் மட்டக்களப்பில் 1994ம் ஆண்டிலிருந்து பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வருகிறார். ஆனால் அதற்கான தேர்தல் எதிலும் அவர் வெல்லுகிற அளவுக்கு போதிய வாக்குகளை மக்கள் அவருக்கு அளிக்கவில்லை. மக்கள் அவரை பாராளுமன்ற மட்டத்துக்கு தலைவராக்கும் அளவுக்கு வாக்களிக்கிறார்களோ இல்லையோ அவர் மக்கள் சேவையில் விடாது தொடர்ந்து ஈடுபடுவார் என்பத வேறுவிடயம். இவர் இப்போது ஒரு மாகாணசபை உறுப்பினராக இருப்பதனால் இவரால் மக்களுக்கான பல சேவைகளை உரிமையோடு செய்ய முடிகின்றது. மேலும் அதனால் மக்களின் அரசியல் மற்றும் பாதுகாப்பு விடயங்களில் மாகாண சபை மற்றும் உரிய இடங்களில் குரலெழுப்பவும் அவரால் முடிகின்றது.

இன்றைக்கும் இவரது சேவைக்காக மக்கள் இவரைத் தேடிச் செல்லுமளவுக்கு இன்றிருக்கும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களிற் கூட எவரும் இருக்கமாட்டார். இவர் கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில்; போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினரானார். முன்னர் மேலே குறிப்பிடப்பட்டுள்ள சமூகச் செல்வாக்கு மிக்க பிரமுகர்; வகையினரில் எவரது ஆதரவும் இவருக்கு இருக்கவில்லை. இருந்தும் இவர் மாகாண சபை உறுப்பினராக வெல்ல முடிந்ததற்குக் காரணங்களில் முக்கியமானவை: 2008ம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலும் ஓர் அசாதாரணமான சூழலிலேயே நடந்தது, இவரது கடுமையான மக்கள் சேவையின் காரணமாக மட்டக்களப்பு மாவட்ட மக்களோடு இவருக்கு இருந்த உறவு, தமிழ் இனவாதம் இந்தத் தேர்தலில் பங்குபற்றாமை. மேலும் விகிதாசாரத் தேர்தல் முறையின் காரணமாக இவர் பெற்ற சில ஆயிரம் வாக்குகளோடு மாகாண சபை உறுப்பினராக முடிந்தது. அப்படி வெல்லக்கூடிய ஒரு வாய்ப்பு கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இல்லையென்று இவர் கணித்தபடியாலும், தான் தனித்து வேட்பாளராக நின்று பெறும் சில ஆயிரம் வாக்குகள் கூட பாராளுமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்டத் தமிழர்களுக்குக் கிடைக்கக்கூடிய உறுப்பினர்கள் ஒருவருக்கான வாய்ப்பை பறித்துவிடக் கூடும் என்ற இவரது சமூக அக்கறையும் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அவரைத் தேர்தலில் முடிவை எடுக்க வைத்தது.

முப்பது வருடங்கள் மக்கள் சேவையொன்றே தமது வாழ்வு என்று தியாகம் செய்து செயற்பட்டுவரும் தோழர் துரைரத்தினம் போன்றவர்களால் வெல்ல முடியாத தேர்தல்களில் கடந்த தேர்தற் காலம் வரை தமிழ்ச் சமூகத்தில் ஒரு முப்பது நாட்கள் கூட சமூக சேவை என்று ஒரு துரும்பைக் கூட தூக்கிப்போடாதவர்கள் - அரசியற் போராட்ட வாழ்வின் மணத்தைக் கூட அறியாமல் வீடு படிப்பு தொழில் வருமானம் என்று இருந்தவாகள் பலர் மிகவும் சுலபமாகவே பாராளுமன்ற உறுப்பினர்களாகியிருக்கிறார்கள் என்பது தமிழர் சமூகத்தில் தேர்தல் வெற்றியின் சூத்திரத்தை ஆய்வுக்குள்ளாக்குகிறது.

இன்று மக்களால் தலைவர்களாக அங்கீகரிக்கப்பட்டு இருப்பவர்களின் முந்தைய கால அரசியற் பின்னணி என்ன? இவர்கள் கடந்த காலங்களில் மக்களுக்கு நேர்மையாகவும் உண்மையாகவும் நடந்திருக்கிறார்களா? தம்மால் தெரிவு செய்யப்படுபவர்கள் பணத்துக்கோ பதவிக்கோ ஆசைப்படாமல் மக்களுக்காகச் செயற்படுவார்களா? என்ற கேள்விகளையும் அவற்றிற்கான பதில்களையும் மக்கள் பரிசோதனைகள் செய்தே தமது தலைவர்களைத் தெரிவு செய்தார்கள் என்றோ அல்லது தெரிவு செய்கிறார்கள் என்றோ கூற முடியாது என்று விவாதிப்பது சரியாக இருக்கலாம். அதற்காக மக்களால் தெரிவு செய்யப் பட்டவர்களைத் தலைவர்களல்ல என்று சொல்வது சரியான வாதமல்ல.

புலிகளின் காலத்தில்தான் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சுதந்திரமாக வாக்களித்து தமது தலைவர்களைத் தெரிவு செய்ய முடியவில்லை. ஆனால் 2009ம் ஆண்டுக்குப் பின்னர் நடைபெற்றவை சுதந்திரமற்ற தேர்தல்கள் எனக் கூற மடியாது. மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை எனக் கூறுவதுவும், மக்கள் பயத்தின் காரணமாக வாக்களிக்க வரவில்லை என்பதுவும், வாக்களிக்கும் மனோநிலையில் மக்கள் இருக்கவில்லை என்பதுவும் மக்கள் பணத்துக்கும் உதவிகளுக்கும் சாராயத்துக்கும் மயங்கிவிட்டார்கள் எனவும்; காரணங்கள் கண்டுபிடிப்பதுவும் - கற்பிப்பதுவும் இந்தக் கால ஜனநாயதகத்துக்குப் பொருத்தமானதல்ல.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கே பெரும்பான்மையாக வாக்களித்தார்கள். தமிழரசுக் கட்சியின் தேர்தற் சின்னமான வீட்டுச் சின்னத்துக்கு வாக்களித்து அந்தக் கட்சியின் வேட்காளர்களை தெரிவு செய்யும்படி மக்களைக் கேட்டுக் கொண்ட தமிழ் சமூகப் பிரமுகர்கள் இப்போது தமிழர்களுக்கு அரசியற் தலைமை இல்லை என்று குறைப்பட்டுக் கொள்வது ஏற்புடையதல்ல.

அமைச்சர் கருணா முரளிதரன் 2003ம் ஆண்டு வரை தமிழர்களின் களம்பல கண்ட ஒரு பிரதானமான தலைவராக இருந்தவர்தான் ஆனாலும் அவர் இப்போது சிறி லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதனாலும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் சந்திரகாந்தன் அவர்கள் அரசாங்கத்துக்கு அனுசரணையாக இருப்பவர் மேலும் அரசாங்கத்தின் தயவிலேயே முதலமைச்சர் ஆனார் என்பதனாலும் பெரும்பான்மையான தமிழ் சமூகப் பிரமுகர்கள் இவர்களைத் தமிழர்களின் தலைவர்களாக ஏற்பதில்லை. ஆனால், முதரமைச்சர் கௌரவ பிள்ளையான் சந்திரகாந்தன் அவர்களும் கௌரவ அமைச்சர் கருணா முரளிதரன் அவர்களும் இனிவரக் கூடிய ஒரு சுதந்;திரமான தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்படுவார்கள் எனின் அதன்பின்ரும் அவர்களை மக்களின் தலைவர்களல்ல என நிராகரிப்பது சரியாக மாட்டாது. எனவே இங்கு மக்களின் வாக்குகளே தலைவர்களுக்கான அங்கீகாரங்களை நிர்ணயிக்கினறன. அதுவே தேர்தல் ஜனநாயகக் கலாச்சாரம்..

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த 35 அண்டுகளாக தமிழர்களின் அரசியலில் இருக்கிறார். ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் ஒரு தளபதியாகவும் இருந்தவர். மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்தவர். 1983ம் ஆண்டு வெலிக்கடைப் படுகொலையிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியவர். 1994ம் ஆண்டிலிருந்து பாராளுமன்ற உறுப்பினராகவும் பத்து ஆண்டுகளுக்கு மேல் அமைச்சராகவும் இருக்கும் அனுபவத்தைக் கொண்டவர். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பல்லாயிரம் யாழ்ப்பாணத் தமிழர்களின் விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினர் ஆனவர். இவரைப் போலவே இவரது கட்சியைச் சேர்ந்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு முருகேசு சந்திரகுமார் அவர்களும் 10 ஆண்டுகளுக்கு மேலாக போராளியாக இருந்தவர் அத்துடன் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பாராளுமன்ற அனுபவமும் கொண்டவர்;. இந்த இருவரையும் தமிழர்களின் அரசியற் தலைமையின் ஒரு பகுதியாக அங்கீகரித்து அவர்களோடும் ஒரு நாகரீகமான நெருக்கமான அரசியல் உறவை பேணுவதே தமிழ்ப் பிரமுகர்கள் சமூகம் கடைப்பிடித்து வரும் அரசியற் கலாச்சசாரத்துக்கு ஆரோக்கியமானதமாகும்.

கொளரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த இருபது ஆண்டுகளாக எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எப்போதும் அரசாங்கத்தின் ஒரு பாகமாகவே இருப்பவர் என்பதனாலும், இனியும் எப்படித்தான் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அதில் ஒரு அமைச்சராக இருப்பதற்கு முயற்சிப்பார் என்பதனாலும் தமிழ் பிரமுகர்கள் சமூகத்திற் பெரும்பான்மையினர் அவரை தமிழ் மக்களின் தலைவர்களில் ஒரு பகுதியாகக் கருத மறுப்பது சரியானதல்ல.

ஒரு சமூகத்தின் அரசியற் தலைவர் என்பது ஒருவர் வெகு வீச்சான எதிர்க்கட்சியர்கச் செயற்படுகிறார் என்பதனாலோ அல்லது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறாரா என்பதை வைத்தோ அவரின் சமூகரீதியான தலைமைத்துவ தகுதியை நிர்ணயிக்க முடியாது. ஒருவர் நேர்மையானவரா? அவர் மக்களுக்கு உண்மையில் தம்மைத் தியாகம் செய்து சேவை செய்பவரா? அவர் தனக்குக் கிடைத்துள்ள பதவியையும் வாய்ப்புக்களையும் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதிலும் சுயசுகங்கள் காண்பதிலும் குறியாக இருப்பவரா? போன்ற கேள்விகளை இங்கு யாரும் எழுப்புவதில்லை.

எனவே, தலைவராக ஆனவர் அவரது சமூக மக்களால் தேர்தலில் ரகசியமான வாக்குகள் மூலமாக அங்கீகரிக்கப்பட்டவராக இல்லையா என்பதை வைத்தே இங்கு ஒருவரை அரசியற் தலைவரா இல்லையா என்பதை நிர்;ணயிக்க வேண்டீயுள்ளது. இந்த சமூகப்; பிரமுகர்களிற் பலர் தமது தனிப்பட்ட நலன்களை அரசிடமிருந்து பெற்றுக் கொள்வதற்காக அமைச்சர்களில் யாரையாவது நாடித்தானே பெற்றுக் கொள்கிறார்கள்;. அல்லது தமக்கு அணைவான அல்லது தம்மால் ஆதரிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரின் கைகளைப் பிடித்துத்தானே அமைச்சர்களின் கதவுகளைத் தட்டுகிறார்கள். இந்த வேளைகளில் எத்தனை பேர் அந்த அமைச்சரோ அல்லது அந்த பாராளுமன்ற உறுப்பினரோ நல்லவரா கெட்டவரா என்று சிந்திக்கிறார்கள்.

தமக்கு விருப்பமானவர்கள் அல்லது தமக்கு அனுசரணையாக இருப்பவர்கள் மட்டுமே நல்லவர் நோமையானவர் கொள்கை உறுதி கொண்டவர்கள் என்பதும் மற்றவர்களைத் தரோகிகள் என்பதும் தமிழ் சமூகத்துக்கு ஆரோக்கியமானதல்ல. ஒரு தலைவர் பிழையானவர் என்றால் இவர் என்ன காரணங்களால் பிழையானவர் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

புலிகளுக்கு எதிராக இருந்தமை, புலிகளின் அழிவுக்கு துணையாகச் செயற்பட்டமை, அந்தந்தக் கட்டங்களில் ஆட்சியில் இருக்கும் சிறி லங்கா அரசாங்கத்துக்கு அனுசரணையாக இருக்கின்றமை என்பதெல்லாம் தமிழ் தலைமையாக இருப்பதற்கு விரோதமான குணாம்சங்களாகக் கொள்வதே செல்வாக்கு மிக்க தமிழ் அரசியற் கலாச்சாரமாக உள்ளமையை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

இந்தக் கலாச்சாரத்தின்படி அரசாங்கத்துடன் கள்ள உறவுகளை பின்கதவுகளால் வைத்துக் கொள்ளலாம், இராணுவம் பொலிஸ் தவிர வேறெந்த அரச பதவியையும் பெற்றுக் கொள்ளலாம். இந்தக் கலாச்சாரம் சமூக மற்றும் பொதுமக்கள் விரோதங்களை வெறுப்பதில்லை, இங்கு வேண்டப்படுவதெல்லாம் தமிழ் இனப்பெருமை, தமிழ்த் தேசியப் பற்று, தமிழ்த் தாயகப் பாசம், தமிழர் சுய நிர்ணய உரிமைக் கோசம் போன்றவற்றின் ஆதரவாளன் போல பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதையே.. அத்துடன் அவ்வப்போது சிங்கள இராணுவத்தை எதிர்த்தும், சிங்கள அரசை வெருட்டுவதாகவும் சிங்கள இனத்தை வெறுப்பதாகவும் அறிக்கைகளை விட வேண்டும் என்ற வகையான குணங்களைக் கொண்டிருக்கின்றது.

புத்திரிகை அறிக்கைகளிலும் மேடைப்பேச்சுக்களிலும் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களைத் திட்டுவது, இராணுவத் தளபதிகளுக்கு எதிரான வெறுப்பேற்கும் கருத்துக்களை வெளியிடுவது. ஆனால் அவர்களை நேரிற் காணுகின்ற போதும் அவர்களுடன் ஒரே மேடையில் தோன்றுகின்ற போதும் அவர்களுக்கு கூழைக் கும்பிடு போட்டு குனிந்து வளைந்து புகழ்பாடுவதுவும்தான் தமிழ் அரசியற் கலாச்சாரமெனில் அந்தக் கலாச்சாரம் கண்டு நாம் வெட்கப்பட வேண்டும். அது தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு கெட்ட கலாச்சாரம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இங்கு தமிழ் சமூகப் பிரமுகர்களால் காபந்து பண்ணப்படும் தமிழ்த் தேசியக் கலாச்சாரத்தில் மொழிப்பற்று, தமிழ்த் தேசம், தமிழர் சுயநிர்ணய உரிமை என்பதெல்லாம் ஓர் அரசியற் போர்வையின் வௌ;வேறு பக்கங்களே. இங்கிருக்கும் தமிழ்ப் பிரமுகர்கள் சமூகக் கூட்டத்தவர்கள் இந்தப் போர்வையைப் போர்த்துக் கொண்டவர்களின் எந்த வகையான சமூக விரோத மக்கள் விரோத செயல்களையும் கண்டு கொள்வதில்லை - எப்படியும் பணம் சொத்துக்களை உழைத்துக் கொள்ளலாம் அதனைக் கேலி பண்ண மாட்டார்கள், என்ன அயோக்;கியத்தனத்தையும் யாருக்கும் பண்ணலாம்; அது கண்டு ஆத்திரப்படமாட்டார்கள், யாரையும் எப்படியும் கொலை செய்யலாம் அது கண்டு கொதித்தெழமாட்டார்கள், யாரிடமிருந்தும் எப்படியும் கொள்ளையடிக்கலாம் அதனை எதிர்க்கமாட்டார்கள், பகிரங்கத்திற் கூட என்ன தூஷணமும் பேசலாம் அதனை விமர்சிக்க மாட்டார்கள். இதெல்லாம் தமிழர் சமூகத்தில் புலிகள் வளர்த்த கலாச்சாரம். இது இன்னமும் இங்கே செல்வாக்காக வாழ்கிறது. இந்தப் போலித் தனங்கள் தமிழர்களின் அரசியற் கலாச்சாரத்தில் இருந்து அகற்றப்பட வேண்டியவையாகும். அப்பொழுதுதான் தமிழர்களின் அரசியற் சிந்தனைகளில் தெளிவும் அரசியற் தெரிவுகளில் சரியான முடிவுகளும் ஏற்படும்.

மண்ணெண்ணெய் மகேஸ்வரன் அவர்கள்; தமிழ்ச் தேசியம், தமிழர் தாயகம் தமிழர் சுயநிர்ணய உரிமை என்று சிறிது காலம் பேசினார்;. புலித் தலைமையின் அரவணைப்புக்கு உள்ளானார். யாழ்ப்பாணத்தின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினராகிவிட்டார். பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் வேட்பாளராக நின்ற போதும் அவர் கொழும்புத் தமிழர்களால் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார். அவர் பாராளுமன்றத்தில் தன்னையொரு தமிழ்த் தேசிய வீரனாக அடிக்கடி அரங்கேற்றங்கள் செய்ததானால் அவரும் ஒரு தமிழ்த் தேசிய அஞ்சா நெஞ்சனாக யாழ்ப்பாண பிரமுகர் சமூகத்தில் இடம் பிடித்துக் கொண்டார்.

அவர் எப்படிக் குறுகியகாலத்தில் அதுவும் புலிகளின் வரிகள், அரசின் பொருளாதாரத் தடைகள், போக்குவரத்து நெருக்கடி என்றெல்லாம் இருக்கையில் பெரும் கோடீஸ்வரனானார் என்பது பற்றி யாழ்ப்பாணத்து பிரமுகர்கள் சமூகத்தின் மத்தியில் குறிப்பிடக் கூடிய வகையில் வெறுப்பு, விமர்சனம் என்று பெரிதாக எதுவுமில்லை. புலிகளின் காலத்தில் யாழ்ப்பாணத்தின் பெரிய பெரிய பழைய வர்த்தகர்கள் பலர் ஓட்டாண்டிகளாகப் போனபோது எப்படி திரு மகேஸ்;வரன் அவர்கள் மட்டும். பணம் சொத்துக்கள் எனக் குவிக்க முடிந்தது என்ற கேள்வி ஏதும் இல்லை..

திரு மண்ணெண்ணெய் மகேஸ்வரனையும் விட வியாபார நுட்பங்கள் கொண்ட திறமைசாலி என யாழ்ப்பாண வர்த்தகர்களால் புகழப்படும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திருமதி மகேஸ்வரன் அவர்கள்; யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகப்; போட்டியிட்டே வென்றார். அவர் தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரலெழுப்புபவர் எனறில்லை. எனினும் யாழ்ப்பாண பிரமுகர்கள் சமூகத்தினால் அவர் தமிழர்களின் ஒரு தலைவரல்ல என்று நிராகரிக்கப்படுவதில்லை. தென்னிலங்கை அரசியல்வாதிகள் மத்தியில் மட்டுமல்ல. தமிழ்த் தேசியத்தை மிக உயர்த்திப்பிடிக்கும் கொழும்புத் தமிழர்கள் மத்தியிலும் ஏன்! இந்தியத் தூதரக மட்டத்திலும் அவருக்கென்று ஒரு தனி மரியாதையே உண்டு.(பாகம் 4 தொடரும்....)

No comments:

Post a Comment

Followers

Blog Archive