Sunday, February 13, 2011

யாழ்ப்பாண மீனவர்களின் பிரதிநிதிகளை இந்தியத் துணைத் தூதுவர் இ.மகாலிங்கம் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்!

Sunday, February 13, 2011
யாழ்ப்பாண மீனவர்களின் பிரதிநிதிகளை இந்தியத் துணைத் தூதுவர் இ.மகாலிங்கம் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் சி.தவரட்ணம், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் அ.ஸ்ரனிஸ்லஸ் ஆகியோரை, யாழ் பலாலி வீதியில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதற்கு இரு நாட்டு மீனவர்களும் தமக்கிடையில் உறவைப் பேண வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இரு நாட்டு மீனவர்களும் தமக்கிடையே புரிந்துணர்வுகளை வளர்ப்பதன் மூலமும் தொடர்புகளை ஏற்படுத்துவதன் மூலமும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்றும், இந்தியத் துணைத் தூதுவர் இ.மகாலிங்கம் தெரிவித்தார். இதேவேளை, யாழ்ப்பாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக யாழ் கடற்றொழிலாளர் சங்க சமாசத் தலைவர்கள் கூட்டாக இணைந்து, கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ஆர். ரவீந்திரனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அடிக்கடி குடாநாட்டுப் பரப்புக்குள் பிரவேசிக்கின்ற இந்திய றோலர்களாலும், குடாநாட்டில் குருநகர் உள்ளிட்ட சிறு பிரதேச கடற்றொழிலாளர்களால் மேற்கொள்ளப்படுகின்ற றோலர் தொழிலாலும், குடாநாட்டுக் கடல்வளம் அழிவதோடு தொழிலாளர்களின் வலைகளும் நாசமாக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Followers

Blog Archive