Tuesday, October 26, 2010

தோழமையுடன் தோழர்களுக்கு உங்கள் முயற்சிகள் ஒவ்வொன்றும் வெற்றிபெற வேண்டும் - தோழர் மோகன்!

Tuesday, October 26, 2010
வெளிநாடுகளில் உள்ள தோழர்கள் கட்சியின் பிராந்திய மாநாடு ஒன்றை நடாத்துவது உண்மையில் எங்களுடைய கட்சியைச் சேர்ந்த ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டிய விடயம்.

ஆயுதப்போராட்டம் தீவிரம்பெறத் தொடங்கி 30 வருடங்கள் கடந்துவிட்டது.

எமது கட்சியின் அரசியல் நடவடிக்கைகளை தடைசெய்வதாக அறிவித்து புலிகள் எம்மீது தாக்குதல் நடாத்தி 24 வருடங்கள் கடந்துவிட்டது.

வடக்கிலும் கிழக்கிலும் கட்சியின் முதுகெலும்பாகச் செயற்பட்ட முன்னணித் தோழர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தோழர்களை இழந்து, கட்சியின் ஆசானும், வழிகாட்டியுமான செயலாளர் நாயகம் தோழர் பத்மநாபா அவர்களை 20 வருடங்களுக்கு முன்னரே பறிகொடுத்த பின்னரும் எங்கள் கட்சி தன் பயணத்தை இன்றுவரை முன்னெடுத்துச் செல்வதற்கு தோழர்கள் ஒவ்வொருவரும் கொண்டுள்ள மன உறுதியும், அரசியல் ரீதியான புரிதலும், சமூகம் பற்றிய அக்கறையுமே காரணமாகும்.

கடந்த 30 வருடங்களிலும் எங்கள் தோழர்கள் அனுபவித்த கஷ்டங்கள் சந்தித்த பிரச்சினைகள், முகங்கொடுத்த நெருக்கடிகள் எத்தனை! எத்தனை! இன்றைக்கு வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் பயிற்சி முகாம்களிலும், மக்களின் மத்தியிலும் நீங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் அதன் மூலம் கிடைத்த அனுபவங்கள் கட்சியை நிலைநிறுத்துவதற்காக செய்த அர்ப்பணிப்புக்கள் எத்தனை! எத்தனை!

பிரான்ஸ் மாநாடு கட்சியின் வெளிநாட்டுக் கிளைகளின் கடந்தகால வேலைத் திட்டங்கள் தொடர்பாக மீள்பரிசீலனை செய்வதுகொள்வதுடன். இலங்கையில் சம கால நிலமைகள், மக்களின் அரசியல், சமூக, பொருளாதார விடுதலையை இலக்காகக் கொண்டு கட்சி எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்கள் என்பன குறித்து ஆராய்ந்து முடிவுகளையும் எடுக்கும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய உயரிய நோக்கங்களோடு பிரான்ஸில் நடைபெறும் வெளிநாடுகளில் உள்ள கட்சித் தோழர்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாடு எங்கள் பயணத்தில் ஒரு மைல் கல்லாகும். இது கட்சியின் ஏனைய பிராந்தியங்களுக்கு ஒரு முன் உதாரணமாகவும் கட்சியின் செயற்பாடுகளுக்கு உந்துதலாகவும் அமைய வேண்டும் அமையும் என்று நம்புகின்றேன். இந்த மாநாடு வெற்றி பெற யாழ் பிராந்திய தோழர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அன்பிற்கினிய தோழர்களே!

கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயவுள்ள நீங்கள் அனைவரும் இங்குள்ள நிலவரங்கள் தொடர்பாகவும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

1986 மார்கழி 13 ஆம் திகதி புலிகள் எம்மீது தாக்குதல் தொடுத்ததற்கு முன்னர் இருந்தது போன்ற ஒரு சூழல் இங்கு நிலவுகின்றது என்பது உண்மை. ஆனால், அந்த காலகட்டத்தில் எங்கள் இயக்கத்தின் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசியல் பிரிவு என்றும், இராணுவப் பிரிவு என்றும் ஆயிரக்கணக்கான தோழர்கள் எம்முடனிருந்தார்கள். மகளிர்அணி, மாணவர் அணி, தொழிலாளர், விவசாயிகள் அணி என்று பல்வேறு முன்னணி அமைப்புக்கள் எம்மிடமிருந்தது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக எவ்வித எதிர்பார்ப்புகளுமற்ற பல்வேறு தரப்பு மக்களினதும் ஆதரவு எமக்கிருந்தது.

கடந்த 23 வருடங்களிலும் தமிழ் அரசியல் அரங்கில் நிலவிய புலிகளின் பாசிசம் அனைத்தையும் சிதைத்து சின்னாபின்னப்படுத்திவிட்டது. இன்று 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர், யுவதிகள் பெரும்பாலானவர்கள் எமது கட்சியின் அரசியல் இலட்சியம், நடவடிக்கைகள் குறித்து அறியாதவர்களாக உள்ளனர். தமிழ் அரசியல் சூழலில் நிலவிய அராஜகம், ஜனநாயக விரோதம், சுத்துமாத்துக்கள், இதுவரை கால இழப்புக்கள் பொதுவாகவே அரசியல் மீதான நாட்டத்தை தடுத்துவிட்டிருக்கின்றது.

கடந்த 30 வருடங்களிலும் பல்வேறு இழப்புக்களை சந்தித்த மக்கள் இயல்பாகவே மானியங்களையும், இலவச உதவிகளையும் எதிர்பார்க்கின்றனர். அரசாங்கத்திடமும் அரசசார்பற்ற நிறுவனங்களிடமும் மாத்திரமல்ல அரசியல் கட்சிகளையும் அதே கண்ணோட்டத்துடனேயே அணுகுகின்றனர். மக்களின் இந்த இழி நிலையை அரசியல்வாதிகளும் வாக்கு சேகரிப்பதற்கான மூலதனமாக்கும் மோசடியும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. யுத்தம் முடிவடைந்த நிலையில் மக்கள் தங்களுடைய சொந்த வீடுகளுக்கு திரும்பி செல்வதற்கும், அவர்கள் காலங்காலமாக தொழில் செய்துவந்த கடலில் மீண்டும் மீன் பிடிக்க செல்வதற்கும், பாதுகாப்பு வலங்களாயிருந்த வயல்நிலங்களில் விவசாயிகள் திரும்பவும் பயிர் செய்வதற்கும், இந்த நாட்டில் படித்த இளைஞர் யுவதிகளுக்கு அரசால் வழங்கப்பட வேண்டிய வேலைவாய்ப்புக்கள் கிடைப்பதற்கும், மக்களின் வரிப்பணத்தில் புனரமைக்கப்படும் கிராமத்து வீதிகளை செப்பனிடுவதற்கும் நாங்களே காரணகர்த்தாக்கள் என்று மக்களை மயக்குகின்ற போக்கும் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக புலிகள் மக்களின் விடுதலைக்கு போராடுவதாக மயங்கிப்போயிருந்த மக்கள் இப்போது இதுதான் அபிவிருத்தி என்று மயங்கிப்போயிருக்கிறார்கள். இது நீண்டகாலத்திற்கு தாக்குப்பிடிக்காது என்பது மக்கள் வேலையில் அனுபவம் உள்ள உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. ஆனால், இன்று இவற்றுக்கு மத்தியில் தான் நாங்கள் எங்களுடைய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியிருக்கின்றது.

இளைஞர்களாக குடும்ப பொறுப்பை பெற்றோரிடம் விட்டுவிட்டு எமது இயக்கத்திற்கு தம்மை அர்ப்பணித்து எம்மோடு இணைந்த தோழர்கள் பலரும் இன்று பெற்றோர்களாக, குடும்ப பாரத்தை சுமக்க வேண்டியவர்களாக உள்ளார்கள். பொருளாதார ரீதியாக உள்ள நெருக்கடிகடிகளை பயன்படுத்தி பல தோழர்கள் விலைக்கு வாங்கப்பட்ட, தொழில் வாய்ப்புக்களை தேடிச்செல்கின்ற சம்பவங்கள் நீங்களும் அறிந்தவையாகும். ஆட்பலத்திலும், நிதி பலத்திலும் நாம் பின்தங்கியவர்களாகவே உள்ளோம். இருப்பினும் எமது இலக்கில், இலட்சியத்தில் உறுதியும் எமது கருத்துக்கள் யதார்த்தமானவை, மக்கள் நலன் சார்ந்தவை அவற்றை முன்கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கையும் எங்களுக்குள்ளது.

இந்த வகையில் எங்களுடைய ஆரம்ப கட்டப் பணிகள் எங்கள் கருத்துக்களை பரவலாக மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லுதல், சமகாலத்தில் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவருதல், அவற்றுக்கு தீர்வுகாண குரல்கொடுத்தல் என்பனவாகவே அமையும்.

அத்துடன் கட்சி வேலைகள் மற்றும் கட்சியின் முழுநேர உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான நிதியை திரட்டுவதற்கு வருமானம் தரும் தொழில்முயற்சிகளை அடையாளம் கண்டு, மேற்கொள்வதும் எமக்கு மேலதிக கடமையாகவுள்ளது.

அடுத்ததாக உயிர் நீத்த தோழர்கள், ஆதரவாளர்களின் குடும்பங்களில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கும், அவர்களது பிள்ளைகளின் கல்வி மற்றும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உதவுவதும் எமது கடமைகளில் பிரதானமானதாகும்.

இதே போன்று பொதுமக்கள் மத்தியிலும் சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பின்தங்கிய மக்கள் பிரிவினரின் மேம்பாட்டுக்காக சிறிய அளவிலான தனிப்பட்ட அல்லது சாத்தியமாயின் கூட்டான சுயதொழில் முயற்சிகளை ஏற்படுத்திக்கொடுத்தல். அத்தகைய குடும்பங்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்தல், அடிப்படை சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற விடயங்களிலும் நாம் கவனம் செலுத்தியாக வேண்டும்.

உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்கள், ஆலோசனைகளையும், தீர்மானங்களையும், நடவடிக்கைகளையும் எதிர்பார்க்கின்றோம்.

கட்சியை பலப்படுத்துவதற்காக நீங்கள் எடுத்திருக்கும் இந்த முயற்சிக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதோடு உங்கள் முயற்சிகள் ஒவ்வொன்றும் வெற்றிபெற வேண்டும். இந்த மாநாடு சிறப்புற வேண்டும் என வாழ்த்தி நிறைவு செய்கின்றேன்.

அமரர் தோழர் பத்மநாபாவின் நாமம் நீடூழி வாழ்க

தோழமையுடன் -மோகன்

No comments:

Post a Comment

Followers

Blog Archive