Wednesday, April 7, 2010

WEDNESDAY, APRIL 07, 2010


எவ்வித அச்சமுமின்றி வாக்களிக்க செல்லுங்கள்
எந்தவிதமான அச்சமுமின்றி பொது மக்கள் நேர காலத்துடன் வாக்களிக்கச் செல்லுமாறு பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொதுத் தேர்தலை முன்னிட்டு திட்டமிட்ட படி உச்ச கட்ட பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் தேர்தலின் போதும் அதன் பின்னரும் ஏற்படக்கூடிய எந்த ஒரு நிலைமைகளையும் சமாளிக்க பொலிஸாரும், பாதுகாப்புப் படையினரும் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பொதுத் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று மாலை பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது. பொலிஸ் மா அதிபர் மேலும் உரையா ற்றுகையில், தேர்தல்கள் ஆணையாளரின் வேண்டு கோளுக்கு இணங்க அமைதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றை நடத்த தேவையான சகல ஒத்துழைப்புக்களை பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் வழங்குவர்.
தேர்தல் சட்ட விதிமுறைகளை பொலிஸாரும், பாதுகாப்புப் படையினரும் கண்டிப்பாக அமுல்படுத்தத் தேவையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் மா அதிபர் சட்ட விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
அதன் விளைவுகளை சம்பந்தப்பட்டவர்கள் எதிர் கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் பாதுகாப்பு கடமையில் 58 ஆயிரத்திற்கு அதிகமான பொலிஸாரும் அவர்களுக்கு உதவியாக 19,800 முப்படையினர்கள் மற்றும் 2 ஆயிரம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இந்த தேர்தல் காலத்தின் போது பாரிய அசம்பாவிதங்களோ வன்முறைச் சம்பவங்களோ இடம்பெறவில்லை என்று தெரிவித்த அவர் இதுவரை 298 முறைப்பாடுகளே பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பட்டார்.
298 முறைப்பாடுகள் தொடர்பாக 301 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 206 பேர் கைது செய்யப்படவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் தினத்தன்று அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறுவதை தடுக்கும் வகையில் சகல பொலிஸ் நிலையங்களையும் அண்மித்த பகுதியில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் மா அதிபர் இதன் மூலம் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதை தடுக்க முடிவதுடன் ஆயுதங்களுடன் நடமாடுபவர்களை கைது செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்

No comments:

Post a Comment

Followers

Blog Archive