Monday, April 12, 2010

பாராளுமன்றம் 22ம் திகதி கூடியதும் சபாநாயகர் தெரிவு

Sunday, 11 April 2010

புதிய அமைச்சரவை எதிர்வரும் 22ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும். அமைச்சர்கள் நியமிக்கப்படாத நிலையில் திட்டமிட்டபடி 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் சபாநாயகர் தெரிவு இடம்பெறும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செயலாளர் சுசில் பிரேம் ஜெயந்த் தெரிவித்தார்.

தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் மற்றும் கண்டி, திருகோணமலை மாவட்ட உறுப்பினர்கள் அடங்கலாக ஐ. ம. சு. முன்னணிக்கு 143 ஆசனங்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

ஐ. ம. சு. முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (11) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. அவர் மேலும் கூறியதாவது,

நாவலப்பிட்டியிலும் திருகோணமலையிலும் 20ஆம் திகதி மீளத் தேர்தல் நடைபெறுவதால் பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரமடங்கிய வர்த்தமானி அறிவித்தல் தாமதமடைகிறது. தேசியப் பட்டியல் எம். பிக்களின் நியமிப்பும் தாமதமாகியுள்ளது- 21ஆம் திகதி இரு மாவட்ட முழு முடிவுகளும் வெளியிடப்பட்டு வர்த்தமானி அறிவித்தலும் தேர்தல் ஆணையாளரினால் அன்றே வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறோம்.

அமைச்சரவை நியமிப்பது குறித்து ஜனாதிபதி ஆராய்ந்து வருகிறார். அமைச்சர்கள் நியமிக்கப்படாத நிலையிலே புதிய பாராளுமன்றம் கூடும்.

தேசியப் பட்டியலின் மூலம் எமக்கு 17 ஆசனங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். சபாநாயகராக யாரை நியமிப்பது என ஆளும் கட்சி எம்.பி.க்கள் கூடி முடிவு செய்வர் என்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி செயலாளர் மைத்திரிபால சிரிசேன கூறியதாவது,

பிரதமராக யாரை நியமிப்பது என்பது குறித்து ஜனாதிபதி முடிவு செய்வார். கட்சியில் இதற்குத் தகுதியானவர்கள் பலர் உள்ளனர்.

அவர்களில் மிகவும் தகுதியானவரை ஜனாதிபதி நியமிப்பார்.

அமைச்சரவையை 35 ஆக மட்டுப்ப டுத்தவே திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டுக்கு சுமையற்றவாறு அமைச்சர் தொகை முடிவு செய்யப்படும். இம்முறை அமைச்சரவையில் புது முகங்களுக்கும் இடமளிக்கப்படும் என்றார்.

டலஸ் அலஹப்பெரும கூறியதாவது:

வரலாற்றில் முதற் தடவையாக ஐ.தே.க. வின் வாக்குப்பலம் 29 வீதமாக குறைந்துள்ளது. 1977 தேர்தலில் சு.க.வுக்கு 8 ஆசனங்கள் மட்டுமே கிடைத்தது. ஆனால் சு.க. 30 வீத வாக்குகளைப் பெற்றது என்றார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive