Tuesday, November 8, 2011

தோழர் வி.ஏ. கந்தசாமி -19 வது நினைவு தினம் இன்று:தோழர் வீ.ஏ கந்தசாமி அவர்கள் மறைந்து இன்றுடன் (07.11.2011) 19 வருடங்கள் பூர்த்தியாகின்றது!

Tuesday, November 8, 2011
இலங்கை வட பிரதேச கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவராக விளங்கியிருந்த, “வீ.ஏ.” என தோழர்களால் அன்பாக அழைக்கப்படும் தோழர் வீ.ஏ கந்தசாமி அவர்கள் மறைந்து இன்றுடன் (07.11.2011) 19 வருடங்கள் பூர்த்தியாகின்றது. தலைசிறந்த இடதுசாரி பேச்சாளர்களுள் ஒருவராக திகழ்ந்திருந்த தோழர் கந்தசாமி அவர்கள் வட-கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராகவும் சேவையாற்றியிருந்தமை பலரிற்குத் தெரிந்திராதது.

வலிகாமத்தைச் சேர்ந்த சுதுமலைக் கிராமத்தில் மிக வறிய குடும்பமொன்றில் பிறந்த தோழர் வீ.ஏ கந்தசாமி அவர்கள் குடும்ப வறுமை காரணமாக அய்ந்தாம் வகுப்புடன் பாடசாலைப் படிப்பை முடித்திருந்தார். அதன் பின்னர் சுருட்டுத் தொழிலாளியாக தனது வாழ்க்கையை ஆரம்பித்த தோழர் கந்தசாமி, அக்காலத்தில் சுருட்டுத் தொழிலாளர்கள் முதலாளிகளால் ஈவிரக்கமற்ற முறையில் சுரண்டப்படுவதனைக் கண்டு அத்தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி பல்வேறு சம்பள உயர்வுப் போராட்டங்களை முன்னெடுத்ததின் மூலம் தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்கத் தலைவராக பரிணமித்தார்.

இக்கால கட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதுமல்லாமல், அக்கட்சியுடன் இணைந்தும் செயலாற்றினார். அச்சமயம் தொழிலாளர்கள் விவசாயிகள் ஒடுக்கப்பட்ட மக்கள் என சமூகத்தின் நலிந்த பிரிவினரோடு நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். அதேவேளை கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டதாலும் அவற்றின் மூலம் பெற்ற அனுபவத்தைக் கொண்டும், மார்க்ஸிய – லெனினிஸ புத்தகங்களைக் கற்றதின் மூலமும் சுரண்டலுக்குள்ளான தொழிலாளர்கள் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள மக்கள் எனப் பல்வேறு தரப்பினர்கள் மத்தியில் தனது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், கிராமம் கிராமமாக அரசியல் வகுப்புக்களையும் நடாத்தினார். அம் மக்கள் மத்தியிலிருந்து பல இளைஞர்களை இனங்கண்டு கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைப்பதிலும் அயராது பாடுபட்டார்.

தோழர் வி.ஏ கந்தசாமி அவர்கள் அரசியல் கருத்துக்களை இலகு தமிழில் அழகுற எடுத்துரைக்கும் பல கவிதைகளையும் கட்டுரைகளையும் கட்சிப் பத்திரிகைகளுக்கு எழுதியது மட்டுமல்லாமல,; தலைசிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார். கம்யூனிஸ்ட் கட்சி நிதிக்காக யாழ் நகர மற்றும் றிம்மர் மண்டபங்களில் தோழர் வீ.ஏ.கந்தசாமியின் சொற்பொழிவுகளை கட்டணம் செலுத்தி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கேட்கவருவதை அவருடைய சமகால தோழர்கள் இன்றும் நினைவு கூர்வர்.

வடபகுதியில் ஆண்டாண்டு காலமாக நிலவி வந்த தீண்டாமை கொடுமைக்கு எதிராக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தை உருவாக்கி, அதன் தலைமையில், பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததில் தோழர் கந்தசாமியும் முக்கிய பங்கு ஆற்றினார். 1966 ஆண்டு ஒக்டோபர் 21 ம் திகதி தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தால் “சாதி அமைப்பு தகரட்டும். சமத்துவ நீதி ஒங்கட்டும்” எனும் கோஷத்துடன் சுன்னாகத்திலிருந்து யாழ்.முற்றவெளி நோக்கி உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்ட பிரசித்தி பெற்ற ஊர்வலத்தை தலைமை தாங்கி வழிநடத்திய சமயம், தோழர் கந்தசாமி பொலிசாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தவிர, அக்கால கட்டத்தில் வடபகுதியில் இடம்பெற்ற தொழிலாள விவசாய ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டு சரியான தலைமைத்துவத்தை வழங்கி, அவர்களை வழிநடத்திச் சென்றவர்களுள் தோழர் கந்தசாமியும் ஒருவர்.

கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீன, ரஷ்யா சார்புக் கருத்துக்கள் பெரும்விவாதத்திற்குள்ளான சமயம், சோவியத் யூனியனின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்குச் சென்றிருந்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுள் தோழர் வீ.ஏ கந்தசாமியும் ஒருவர். சோவியத் யூனியனில், அக்காலகட்டத்தில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறந்த தத்துவார்த்த வாதியாக திகழ்ந்த சுஸ்லோவ் அவர்களுடன் சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடு பற்றி பலமணிநேரம் விவாதத்தில் ஈடுபட்டு இலங்கை திரும்பியிருந்த தோழர் கந்தசாமி சீன சார்பு கருத்துக்களையே தேர்ந்தெடுத்து முன்னெடுத்து வந்தார்.

அவர் சோவியத் நாட்டுக்கு மட்டுமல்லாமல் பின்னர் அப்போது சோசலிச நாடாக விளங்கிய அல்பேனியாவிற்கும், பின்னர் மக்கள் சீனக் குடியரசிற்கும் அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகளால் அழைக்கப்பட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சீனாவிற்குச் சென்ற தோழர் கந்தசாமி சீனப்புரட்சியின் நாயகனாக விளங்கிய மாபெரும் தலைவர் மாவோ சேதுங் அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடியதும் குறிப்பிடத்தக்கது. தலைவர் மாவோ சேதுங்கை நேரில் சந்தித்து கலந்துரையாடிய ஒருசில இலங்கையர்களில் தோழர் கந்தசாமியும் ஒருவர் என்பது நினைவுகூரத்தக்கது.

1980 ம் ஆண்டு நாட்டின் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைந்ததின் காரணமாக பல்வேறு ஆயுதக்குழுக்கள் தோன்றின. அவற்றில் பல பாசிச தன்மைகொண்டதாகவும், ஜனநாயக மறுப்பையும், மாற்றுக் கருத்துக்களை அடக்கி ஒடுக்குவதாக மட்டுமல்லாமல் இடதுசாரி கருத்துக் கொண்டவர்களை ஆயுதங்களை கொண்டு படுகொலை செய்யும் கலாச்சாரமும் உருவெடுத்திருந்தது. குறிப்பாக புலிகள் இயக்கம், இடதுசாரி பிரமுகர்களையும் தொழிற்சங்க தலைவர்களையும் படுகொலை செய்வதில் முன்னின்று செயற்பட்டது. இக்காலகட்டத்தில் ஈழ மக்கள் புரட்சி கர விடுதலை முன்னணி மட்டும் பொதுவுடமைக் கருத்துக்களை முன்னெடுக்கும் அமைப்பாகவும், இடதுசாரிகளின் கொள்கைகளை அடியொற்றியதாக இருந்தது மட்டுமல்லாமல் சாதாரண கீழ்தட்டு மக்கள் மத்தியில் செயற்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்களை அரசியல் ரீதியாக வளர்த்தெடுக்கும் நோக்கில் அந்த இயக்கத்தின் அப்போதைய இராணுவத்தளபதியாகவும், தற்போது அமைச்சராகவும் விளங்கும் தோழர் டக்ளஸ் தேவானந்தா, தமது தோழர்களுக்கு அரசியல் வகுப்புக்களை நடாத்த முன்வருமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்களின் இயக்கப் பாசறைகளில் தங்கியிருந்து அரசியல் வகுப்புக்களை தோழர் கந்தசாமி நடாத்திவந்தார். அவரது அரசியல் வகுப்புக்களில் கலந்து கொண்ட பலர் இன்றும் முன்னணித் தோழர்களாக விளங்குகின்றனர்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கிய தலைவர்களாக விளங்கிய தோழர்கள் பத்மநாபா, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தோழர் கந்தசாமியின் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

1985 ம் ஆண்டின் டிசம்பர் மாத நடுப்பகுதியில் புலிகள் ஈ.பி,ஆர்.எல்.எப் இயக்கத்தை தடை செய்வதாக கூறி அந்த இயக்க உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடாத்திய சமயம் உரும்பிராய் காரியாலயத்தில் தங்கியிருந்த தோழர் கந்தசாமியும் புலிகளின் கைக்குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து மயிரிழையில் உயிர்தப்பினார். அவர் காயமடைந்த போதிலும் மனம் தளராது சக தோழர்களினதும், நண்பர்களினதும் சேமநலன்களை அறிவதிலும், அவர்களது குடும்பத்தவர்களுக்கு ஆறுதல் சொல்வதிலும் தனது பெரும்பகுதி நேரத்தை செலவிட்டார்.

இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டு அதன் மூலம் உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண சபை ஏற்படுத்தப்பட்ட சமயம், தோழர் கந்தசாமி அவர்கள் மீண்டும் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்;;பில் இணைந்து மக்களுக்கான வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்துவதிலும், சமாதான சூழலை ஏற்படுத்தும் பொருட்டும் தோழர் பத்மநாபாவுடன் இணைந்து செயலாற்றினார். அக்காலகட்டத்தில் மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு, மாகாண சபை உறுப்பினர்களுக்கு சிறந்த அரசியல் வழிகாட்டியாக விளங்கினார்.

1989 ம் ஆண்டில் புலிகள் அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசாவுடன் அண்ணன் தம்பி உறவு கொண்டாடியதை தொடர்ந்து, புலிகள் மீண்டும் இலங்கை அரசிடம் ஆயுதங்களைப் பெற்று ஜனநாயக அமைப்புக்களை மீண்டும் அழித்தொழிக்க முற்பட்ட வேளை இந்தியாவிற்குச் சென்ற தோழர் கந்தசாமி 1992 ஆம் ஆண்டு தனது 68 வயதில் மாரடைப்பால் காலமனார். அவரது இறுதிக் கிரியைகள் தமிழ் நாட்டிலுள்ள புழல் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட நீண்ட பிரேத ஊர்வலத்துடன் நடைபெற்றது. இறுதிக்கிரியைகளின் போது தமிழ்நாட்டில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான ஈ.பி.ஆர்.எல்.எப் தோழர்கள், தோழர் எஸ்.சுபத்திரன் (றொபேட்) தலைமையில் உணர்வுப+ர்வமாக அணிவகுப்பு மரியாதையை செலுத்தியதும் குறிப்பிடத்தக்கது..

தோழர் கந்தசாமி இந்தியாவில் தங்கியிருந்த காலத்தில் தமிழ்நாடு, கேரளா, புதுடில்லி, போன்ற இடங்களுக்குச் சென்று, அங்குள்ள பிரபல கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களைச் சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து கலந்துரையாடியதும் குறிப்பிடத்தக்கது.

இத்தனை பெருமைகள் பெற்றிருந்த தோழர் வீ.ஏ.கந்தசாமி அவர்கள் இறக்கும் வரையில்; வங்கிக் கணக்குகள் ஏதுமற்ற ஒரு அரசியல்வாதியாகவே இருந்திருந்தார்.

இலங்கை இடதுசாரி அரசியல் வரலாற்றில் வீ.ஏ. என தோழமையுடன் அழைக்கப்படும் தோழர் கந்தசாமியின் பெயரும் அழியாது இடம்பெறும். இலங்கை அரசியலில் உள்ள இடதுசாரி சிந்தனையுள்ள பல அரசியல் தோழர்களுக்கு தோழர் வீ.ஏ.கந்தசாமி அவர்கள் இன்றும் ஆதார்சபுருஷராக திகழ்ந்து வருகின்றார். இவர்களாலும், இலங்கையிலுள்ள வறிய ஏழை மக்களாலும் தோழர் வீ.ஏ.கந்தசாமி என்றும் நினைவு கூரப்படுவார்.

ஜனாதிபதி இன்று மாலைதீவு பயணம்!

Tuesday, November 8, 2011
பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) 17 ஆவது தலைவர்களின் உச்சிமாநாடு மாலைதீவில் எதிர்வரும் 10 ஆம் திகதி வியாழக்கிழமை கோலாகலமாக ஆரம்பமாக உள்ளது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சார்க் நாடுகளின் தலைவர்கள் அங்கு பயணமாவதுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று (08) பயணமாகவிருக்கின்றார்.

மாலைதீவு அத்துநகல் 17 ஆவது சார்க் உச்சி மாநாடு எதிர்வரும் 10, 11 ஆம் திகதிகளில் நடை பெறும். சார்க் அமையத்தில் அங்கம் வகிக் கும் நாடுகளின் பல்தரப்பட்ட கூட்டுறவை மேம்படுத்தும் வகையில் இணைக்கப்பட்ட கட்டிடங்கள் எனும் தொனிப்பொருளில் இந்தமாநாடு இம்றை நடைபெறவிருக்கின்றது.

இந்த மாநாட்டில் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, இலங்கை, மாலைத்தீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பர். மாநாட்டின் நிறைவில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விற்கும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெறவிருப்பதாக தெவிக்கப்படுகின்றது.

மாலைதீவில் ஆரம்பமாகவிருக்கின்ற சார்க் மாநாட்டிற்கு இலங்கை விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவிருப்பதுடன் வெடிபொருட்களை கண்டறிவதற்காக மோப்ப நாய்களும் அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

சார்க் உச்சி மாநாடு நடைபெறும் பிரதான மண்டபம் மற்றும் அமைய நாடுகளின் தலைவர்கள் தங்கியிருக்கின்ற ஹோட்டல்களின் பாதுகாப்பு இலங்கை விசேட அதிரடிப்படையின் நேரடி கண்காணிப்பின் கீழ் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சார்க் உச்சி மாநாடுகளின் 16 ஆவது உச் சிமாநாடு பூட்டானில் 2010 ஆம் ஆண்டும் 15 ஆவது உச்சிமாநாடு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பிலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு விசேட சீருடைகள் வழங்குவது குறித்து கவனம்-காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோன்!

Tuesday, November 8, 2011
அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு விசேட சீருடைகள் வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவினருடன் வேறும் நபர்கள் இணைவதனை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவினருக்கு சீருடைகளை வழங்கும் திட்டம் குறித்து அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு காவல்துறை மா அதிபர் விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, அமைச்சுப் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு சீருடைகளை வழங்குவதனால் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படக் கூடிய வாய்ப்பு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நீண்ட நேரத்திற்கு காவல்துறை சீருடையில் கடமையாற்றுவது நடைமுறைச் சாத்தியமற்றது என சுட்டிக்காட்டியுள்ளனர். எவ்வாறெனினும், புதிய சீருடையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Sunday, November 6, 2011

நாட்டின் நற்பெயருக்கு களங்கம்; பாதுகாப்பது நமது பொறுப்பு விசாகா பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி!

Sunday, November 6, 2011
நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படாது பாதுகாப்பது நம் அனைவரினதும் பொறுப் பாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

நவீனத்துவம் என்பது நாட்டுக்குப் பொருத்தமில்லாததைச் செய்வதல்ல. கடந்த கால வரலாற்று மதிப்பீடுகளைப் பாதுகாத்துக் கொண்டு முன் செல்வதே எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வெளிநாட்டுப் பழக்க வழக்கங் கள் நமக்குப் பொருத்தமில்லாதது என தெரிவித்த ஜனாதிபதி, சர்வதேச அறிஞர்களின் நூல்களைப் போன்றே நமது அறிஞர்களினதும் நூல்கள் நமக்குப் பொக்கிஷங்க ளாக உள்ளன. அவற்றைத் தேடிக் கற்பதில் நமது மாணவ சமுதாயம் முன்னிற்பது அவசியம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எமது நாட்டை வெளிநாடு களில் தரங்குறைத்து கூறுவதற்கோ, நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கோ ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொழும்பு விசாகா மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று முன்தினம் கல்லூரி மண்டபத்தில் அதிபர் சந்தமாலி அதுருப்பொல தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

கல்வியமைச்சர் பந்துல குணவர்தன, அமைச்சின் செயலாளர், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது;

விசாகா கல்லூரி கீர்த்தி மிகு வரலாற்றைக் கொண்ட கல்லூரியாகும். கல்வியிலும் விவாதங்களிலும் அனைத்துத் துறைகளிலும் முன்னணியில் நிகழும் நமது நாட்டு சொத்து இது. இக்கல்லூரி கொழும்புக்கு மட்டும் உரித்தானது அல்ல. முழு நாட்டினதும் உரிமைச் சொத்தாகும்.

எனது மாணவ பருவத்தில் நான் கற்ற தேர்ஷ்டன் கல்லூரிக்கும் விசாகா கல்லூரிக்குமிடையில் நடைபெறும் விவாதங்களில் நானும் பங்கேற்றிருக்கின் றேன். அக்காலத்திலேயே இக்கல்லூரி தமது திறமையை வெளிக்காட்டியுள்ளது. இக்காலத்திலும் இப்பாடசாலை மாணவர்கள் பெற்றுக்கொண்டுள்ள பெறுபேறுகள் இந்த நாட்டின் எதிர்காலத்தின் மீது மிகுந்த நம்பிக்கையைத் தோற்று விக்கின்றது. 93 வருடம் பழைமை வாய்ந்த இந்த பாடசாலையை ‘கொஸ் மாமா’ என்ற வீரபுருஷர் தனது தாயின் நினைவாக முதலில் நிர்மாணித்து வழங்கினார். அன்றிலிருந்து இந்த கல்லூரி சகல துறைகளிலும் பிரகாசித்து வருகிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சென்னை முகப்பேரில் தங்கபாஸ்கரனுக்கு பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர்கள் அஞ்சலி!

Sunday, November 6, 2011
சென்னை முகப்பேரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த எங்கள் தோழன்பாச்சா என்று அனைவராலும் அழைக்கப்டும் தங்கமணி தங்கபாஸ்கரன் இன்று (1.11.2011) தனது சிறுநீரக கோளறு காரணமாக காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியை சென்னை முகப்பேரில் எதிர்வரும் திங்கட்கிழமை(7.11.11) அன்று நடைபெறும்.

யுhழ்ப்பாணம் நெல்லியடியை பிறப்பிடமாக் கொண்ட தோழர் தங்கபாஸ்கரன் நெல்லியடியில் ஈ.பிஆர்.எப் இன் அரசியல் பிரிவில் செயல்பட்டு கட்சிக்காகவும்,மக்களின் நலனுக்காவும் பெரிதும் உழைத்தவர். ஏல்லோருடனும் இன்முகத்துடனும்,அவரது இயல்பான நகச்சுவை உணர்வாலும் தனக்கென ஒரு தனியிடத்தை பெற்ரிருந்தார்.ஒவ்வொருவருக்கும் ஒரு திறமையை இறைவன் கொடுத்திருப்பார் அந்த வகையில் நகைச்சுவை உணர்வை தங்கபாஸ்கரன் பெற்றிருந்தார்.

புலிகளின் எதேச்சதிகார போக்கு காரணமாக நெல்லியடி மக்களுக்கான பணியினை அவர் தொடர்வதற்கு தடைகள் பல ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் புலிகளின் அச்சுறுத்தலால் தமிழ் நாட்டுக்கு இடம் பெயர்ந்தார்.

தோழர்தங்பாஸ்கரனிடம் இயல்பாகவே பல திறமைகள் புதைந்து கிடந்தன அவற்றை அவர் தமிழகத்தில் வெளிகாட்டினார். 50க்கும் மேற்பட்ட பக்தி பாடல்கள் ஒலிநாடாவை வெளியிட்டுள்ளார். சிறந்த மிருந்தங்க கலைஞராகவும் அவர் செயல்பட்டார். வேதா என்ற சினிமா படத்தில் அவர் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

சிறந்த ஒரு தோழன்,கலைஞன,; தான் பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்க்காமல், அவனை அடையாளம் தெரியாமல், ஆக்கியவர்கள் இன்று அடையாம் தெரியாமல் போய்விட்டபோதும்,பல திறமைகளை பெற்றிருந்த தோழனின் இழப்பு என்றும் நமது சமூகத்துக்கு ஈடு செய்ய முடியாதது.

இவர் பிரிவால் துயருறும் அவர் குடும்பாத்தாருக்கு எங்கள் மனமார்ந்த ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்கள் தோழன்,எங்கள் கவலைகளை தனது நகச்சுவை உணர்வு மூலம் பல தடவைகள் மறக்கச் செய்த, அவருக்கு எங்கள் இதயபூர்வமான கண்ணீர் அஞ்சலி

(பத்மநாபா EPRLF)

பரகசியமாகிய சரத் பொன்சேகா - சம்பந்தன் இரகசிய ஒப்பந்தம் விக்கிலீக்ஸ் கசியவிட்ட செய்தியால் தர்மசங்கடத்திற்குள் தள்ளப்பட்டுள்ள TNA!

Sunday, November 6, 2011
சரத் பொன்சேகாவுக்கும் சம்பந்தனுக்கும் இரகசிய ஒப்பந்தம் ஒன்று இருந்ததாக விக்கிலீக்ஸ் புதிய தகவலொன்றை வெளியிட்டு ள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க்கட்சி களின் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்ட சரத் பொன்சேகா, ‘தமிழ் மக்களுக்கு அனைத்தையும் கொடுப்பதற்கு சரத் பொன்சேகா இணங்கிவிட்டார்.

அதற்கான உடன்படிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் கைச்சாத்திட்டும் விட்டார்” என்பது ஆளும் கட்சியின் தேர்தல் பிரசாரமாக இருந்தது. இதனை எதிர்க்கட்சிகள் மறுத்து வந்த போதிலும், “விக்கிலீக்ஸ்” தற்போது வெளியிட்டுள்ள இரகசியத் தகவல்கள் இது உண்மை என்பதை உறுதிப்படுத்தி யிருக்கின்றது.

2010ம் ஆண்டு ஜனவரியில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் உச்சக்கட்டத்தில் “பொன்சேகா சம்பந்தன் இரகசிய உடன்படிக்கை” என்ற பிரசாரமே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும். தேர்தல் கள நிலைமையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் இது அமைந்திருந்தது. இது அரசாங்கத்திற்கு சார்பான பிரசாரமாக அமைந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போருக்குத் தலைமை தாங்கியவர் என்ற முறையில் சரத் பொன்சேகாவுக்கு வாக் களிப்பதா? என்ற கேள்விதான் தமிழர்கள் மத்தியில் முதலில் எழுந்திருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டது.

இருந்த போதிலும் இறுதிக்கட்டத்தில் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை எடுப்பதற்கு இந்த உடன் படிக்கையும் காரணமாக இருந்துள்ளது.

பொன்சேகா கையொப்பமிட்ட இந்த உடன்படிக்கையின் பிரதி ஒன்று சம்பந்தனால் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு அப்போது வழங்கப்பட்டது.

சரத் பொன்சேகாவுடன் தான் பேச்சுக்களை நடத்தியிருப்பது தொடர்பாக சம்பந்தன் அப்போது பொதுக்கூட்டங்களில் தெரிவித்த போதிலும், சரத் பொன்சேகா கைச்சாத்திட்ட உடன்படிக்கை ஒன்று தன்னிடம் தரப்பட்டி ருப்பதாக பகிரங்கமாகத் தெரிவிக்கவில்லை.

சம்பந்தனுடன் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் நடத்திய சந்திப்பு, 2010 ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவை ஆதரிப்பதென சம்பந்தன் அறிவித்த பின்னர் ஏற்பட்டிருந்த அரசியல் கள நிலைமைகள் தொடர்பாக அமெரிக்க தூதரகம் வோஷிங்டனிலுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிவைத்த இரகசிய கேபிள் தகவலை விக்கிலீக்ஸ் இப்போது அம்பலமாக்கியுள்ளது.

அதிகளவில் அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்வதற்கும் அதற்குத் தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்வதற்கும் சரத் பொன்சேகா இந்த உடன்படிக்கையின் மூலமாக இணக்கம் தெரிவித்திருந்தார்.

சட்டத்தை கையிலெடுக்க யாருக்கும் உரிமையில்லை: தங்கல்லையில் ஜனாதிபதி!

Sunday, November 6, 2011
பொலிஸாரிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய சேவையை கூடியளவு பெற்றுக்கொள்ளவேண்டுமாயின் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நல்ல புரிந்துணர்வு ஏற்படவேண்டும். எதிர்காலத்தில் சட்டத்தை கையிலெடுத்து எவரும் செயற்படுவதற்கு உரிமையில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

240 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தங்காலை பொலிஸ் நிலையத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சட்டத்தை செயற்படுத்துவது பொலிஸாரின் பொறுப்பாகும். பொலிஸாருடன் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு பலரும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அதற்கு ஒருபோதும் இடமளிக்ககூடாது என்றார்.

Tuesday, November 1, 2011

TNAயின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட வேண்டும் - தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்!

Tuesday, November 1, 2011
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று சூழ்ச்சிகளை மேற்கொண்டுவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் யாப்பின் 6ம் அத்தியாயத்திற்கு அமைய நாட்டை பிளவுபடுத்தவோ சர்வதேச சூழ்ச்சிகளுக்கு துணைபோகவோ தேசத்துரோக செயல்களில் ஈடுபடவேம் மாட்டோம் என சத்தியப்பிரமாணம் செய்துவிட்டு தற்போது அவற்றை மீறி அமெரிக்கா, கனடா சென்று செயற்படுவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
´சர்வதேச அழுத்தம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காட்டிக்கொடுப்புக்கு மத்தியில் எமக்குள்ள சவால்´ என்ற தலைப்பில் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
அரசியல் யாப்பை மீறிச் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்டு அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்கான பூரண அதிகாரம் பாராளுமன்ற சபாநாயகருக்கு உண்டு. விசாரணையின் பின் அவர்கள் குற்றமற்றவர்கள் என்றால் விடுவிக்கலாம். இல்லாவிடின் தண்டிக்க வேண்டும்.

இன்று சர்வதேத்துடன் சேர்ந்து யுத்தக் குற்ற விசாரணை வேண்டும் எனக் கோருவது 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்திக் கொள்ளவே. இலங்கை அரசாங்கமும் அதற்கு அடிபணிந்து 13வது திருத்தத்தை அமுல்படுத்துமாயின் அனைவரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டிவய அபாய நிலைமையே ஏற்படும்.

13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக நாட்டை கூறுபோடுவதற்கான முதல்படியை எடுத்துவைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அதன் பின்னர் லிபியாவில் செய்தது போன்று, கிறிஸ் பூத பீதியின்போது செய்தது போன்று பணத்துக்காக மக்களை ஒன்றுதிரட்டி சிவில் யுத்தம் ஒன்றை ஏற்படுத்த அவர்கள் முயற்சிப்பர்.

அதன் பின்னர் தங்களுடைய பிரிவினவாதக் கொள்கையை நிறைவேற்றிக் கொள்வர். உலக வல்லரசுகளுக்கு அஞ்சாமல் தலைநிமிர்ந்து நின்ற லிபிய தலைவர் கடாபிக்கே மேற்குலகம் மரணம் கொடுத்தது என்றால் எமது நாட்டு மக்கள,; தலைவர்களுக்கு அவ்வாறு செய்வதற்கு அவர்கள் தயங்க மாட்டார்கள் எனவும் கூறினார்.

Saturday, October 29, 2011

வடபகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணி; ஜப்பான் நிதியுதவி!

Saturday, October 29, 2011
வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் அரசாங்கம் மேலதிக நிதியுதவி அளிக்கவுள்ளது. டீ. ஏ. எஸ். எச். எனும் கண்ணிவெடி அகற்றும் அரசசார்பற்ற நிறுவனத்தின் ஊடாக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

இந்நிதியுதவி தொடர்பாக ஜப்பான் தூதரகத்துக்கும், டீ. ஏ. எஸ். எச். நிறுவனத்துக்கும் இடையில் ஒப்பந்த மொன்று எதிர்வரும் திங்கட்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளது.

வடபகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளின் முக்கியத்துவத்தை அறிந்தே நிதியுதவி வழங்கவிருப்பதாக ஜப்பான் தூதரகம் அறிவித்துள்ளது.

அதேநேரம், வடபகுதியில் முன்னெ டுக்கப்படும் மீளிணைவு மற்றும் நல்லிணக்கப் பணிகளுக்கு 122 மில்லியன் ஜப்பான் யென்களை வழங்க ஜப்பான் அரசாங்கம் முன்வந்துள்ளது.

குடியகல்வுக்கான சர்வதேச நிறுவனத்தில் ஊடாக இந்த நிதியுதவி வழங்கப்பட வுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு அபிவிருத்தி ஏற்பட்டுள்ள இவ்வேளையில் போதைவஸ்துக்களும் ஒழிக்கப்படும்!

Saturday, October 29, 2011
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆளுமைத்திறனின் மூலம் நாட்டை எதிர்நோக்கியிருந்த இரண்டு பாரிய அச்சுறுத்தல் கள் வெற்றிகரமான முறையில் முறியடிக்கப்பட்டன. நம்நாட்டில் பயங்கரவாதிகள் பொருள் அழிவையும் மனித உயிர் அழிவையும் ஏற்ப டுத்தி அன்று நாட்டின் தேசிய பொருளாதாரத்தை சீர்குலைத்து வந்தனர்.

2005ம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷ என்ற மண்வாசனையுடைய தென்னி லங்கையில் தோன்றிய உதயசூரியனை இந்நாட்டு மக்கள் ஜனாதிபதி என்ற நாட்டின் மிக உயர் பதவியில் அமர்த்திய போது, அவருக்கு நாட்டு மக்களை துன்புறுத்திவரும் பயங்கரவாதத்தை பூண்டோடு அழி த்துவிடுவதுடன் நாட்டின் தேசிய பொருளாதாரத்தையும் அபிவிருத்தி செய்ய வேண்டுமென்ற ஆணையை மக்கள் விடுத்தனர்.

இவ்விரு பாரிய பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட சாதனை வீரரான ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ முதலில் தாம் ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பத ற்கு சரியாக ஓராண்டுக்கு முன்னர் சுனாமி ஏற்படுத்திய பேரலையினால் சீர்குலைந்து போன மக்களின் வாழ்க்கையை சீரமைக்கும் பணியையும், அவர்களின் இருப்பிடங்களையும் அப்பிரதேசத்தில் உள்ள ஆஸ்பத்திரி கள், பாடசாலைகளையும் மிகக்குறுகிய காலத்திற்குள் மீள் நிர்மாணம் செய்யும் பணியையும் வெற்றிகரமான முறையில் நிறைவேற்றினார்.

அடுத்தபடியாக ஜனாதிபதி அவர்கள் நேரடியாக எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதி களுக்கு எதிராக அவர் யுத்தத்தை தன்னிச்சையாக ஆரம்பிக்கவும் இல்லை. பேச்சுவார்த்தைகளின் மூலம் சமாதானத்தீர்வை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி அவர்கள் பல சந்தர்ப்பங்களில் எல்.ரி.ரி.ஈ. பிரதிநிதிகளுடன் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் உள்ளடங்கிய தூதுக்குழுவி னரை வெளிநாட்டில் சந்தித்து சமரச பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப் பதற்கும் முயற்சிகளை எடுத்தார்.

எல்.ரி.ரி.ஈயினர் போலி காரணங்களை முன்வைத்து பேச்சுவார்த்தைகளை உதறித்தள்ளிவிட்டு, கலந்துரையாடல் மேசையில் இருந்து வெளியேற வும் செய்தனர். இவ்விதம் ஜனாதிபதி நீட்டிய நேசக்கரத்தை உதறித்த ள்ளி விட்டு எங்களுக்கு பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையில்லை. ஆயு தப் போராட்டத்தின் மூலம் எங்கள் இலட்சியத்தை நிறைவேற்றிக் கொள் வோம் என்ற அகங்காரப் போக்கில் எல்.ரி.ரி.ஈ. தலைமைத்துவம் நடந்து கொண்டது.

இதனால், வேறுவழியின்றி மனவேதனையுடன் எல்.ரி.ரி.ஈயை யுத்த முனை யில் சந்திக்க வேண்டுமென்று சிந்தித்துக் கொண்டிருந்த காலகட்டத்தி லேயே, எல்.ரி.ரி.ஈ. அரசாங்கப் படைகளை ஏளனம் செய்யக்கூடிய வகை யில் மாவிலாறு வான்கதவை மூடி, பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்க எத்தனித்தது. இந்தக் கொடுமையை தாங்க முடியாது அரசாங்கம், எல்.ரி.ரி.ஈயுடன் மீண்டும் யுத்தத்தை ஆரம்பித்து 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதியன்று எல்.ரி.ரி.ஈ.யை அடக்கியது.

பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டிய சாதனையை ஏற்படுத்திய ஜனாதிபதி, அதையடுத்து தன்னுடைய சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் நாட்டின் அபிவிருத்திப் பணிகளை 2010ம் ஆண்டில் இரண்டாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி வாகை சூடிய பின்னர் ஆரம்பித்தார். ஜனாதிபதியின் அபிவிருத்தித் திட்டங்கள் ஏற்படுத்திய சாதனைகளை நாம் இன்று நாட்டின் நாலா பக்கங்களிலும் தோன்றியிருக்கும் மேம் பாலங்கள், பாலங்கள், நெடுஞ்சாலைகள், புதிய கட்டிடங்களைப் பார்த்து புரிந்து கொள்ள முடியும்.

இன்று அபிவிருத்திப் பணிகளை சிறப்பாக நிறைவேற்றிக் கொண்டிருந்தா லும் அரசாங்கம் பாதாள உலக கோஷ்டிகளையும், ஆயுத கலாசாரத்தை ஒழித்தல், போதைவஸ்து வர்த்தகத்தையும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருதல் போன்ற பணிகள் நிறைவேற்ற முடியாத நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தது.

நிலைமை மோசமடைவதை புரிந்து கொண்ட ஜனாதிபதி அவர்கள் சகல கலா வல்லவராக விளங்கும் சாதனை வீரரான பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவிடம் பயங்கரவாதிகளை அடக்குவதற்கு தமக்கு உதவி செய்தது போன்று பாதாள உலகக் கோஷ்டிகளையும் ஆயுதக் கலாசாரத்தையும், போதை வஸ்துக்களையும் நாட்டில் ஒழித்துக் கட்டு மாறு கேட்டுக் கொண்டார்.

இராமபிரான் இட்ட ஆணையை தம்பி இலக்குமணன் ஏற்றுக் கொண்டது போன்று, பாதுகாப்புச் செயலாளர் இப்போது பாதாள உலகக் கோஷ்டியி னரை அடக்குதல், போதைவஸ்து வர்த்தகத்திற்கு முற்றுப்புள்ளி வைத் தல், ஆயுதக் கலாசாரத்தை அழித்தொழித்தல் போன்ற பணிகளை படிப் படியாக இப்போது வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

பாதுகாப்பு செயலாளர் சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு அளித்த பேட் டியொன்றில், ஏற்கனவே பொலிஸார் நாடெங்கிலும் உள்ள பாதாள உலக கோஷ்டியினரை மடக்கிக் பிடித்து அவர்களிடம் உள்ள ஆயுதங் களை பறிமுதல் செய்யும் பணியை வெற்றிகரமாக ஆரம்பித்திருக்கிறார் கள் என்று சொன்னார். இப்பணிகளுக்கு உதவி செய்வதற்காக பொலி ஸாருக்கு இராணுவத்தினரும், கடற்படையினரும், விமானப்படையின ரும், தங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகிறார்கள்.

பாதுகாப்பு செயலாளர் எடுத்த இந்த செயற்பாடுகளால் கடந்த சில நாட் களில் பெருமளவு பெறுமதியுடைய ஹெரோயின் போதை வஸ்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு பொறுப்பானவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கென விசேட பயிற்சி பெற்றவர்களை தாம் சேவையில் ஈடுபடுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.

பாதுகாப்பு செயலாளரின் சீரான தலைமைத்துவத்தின் கீழ் விரைவில் நாட்டில் பாதாள உலக கோஷ்டிகள் ஒழிக்கப்பட்டும் சட்டவிரோதமான சகல ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டும் போதைவஸ்து வியா பாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தும் இந்நாட்டை மக்கள் அச்சுறுத்தல்கள் இன்றி நிம்மதியாக வாழும் ஒரு அமைதியான நாடாக மாறுவதை எந்த சக்தியாலும் தடுத்துவிட முடியாது.

Wednesday, October 19, 2011

ஜி.எஸ்.பி பிளஸ் 2013 வரை நீடிப்பு!

19th of October 2011
2010 ஆண்டு இறுதி முதல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப் பட்டிருந்த ஐக்கிய அமெரிக்காவின் ஜி.எஸ்.பி சலுகைத் திட்டம் 2013 ஆம் ஆண்டுவரை நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வர்த்த மற்றும் முதலீட்டு அமைச்சின் கீழுள்ள வர்த்தகத் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஜி.எஸ்.பி. பிளஸ் திட்டம் நீடிக்கப்பட்டுள்ளதனை வரவேற்பதாக தெரிவித்துள்ள வர்த்தகத் திணைக்களம் இதற்கான அங்கீகாரம் வழங்கும் பிரேரணையில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா விரைவில் கையொப்பமிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்குப் பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறையை கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்க முயற்சி-இரா துரைரட்ணம் (பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்.) .

19th of October 2011
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறையை கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் நடவடிக்கையினை உடனடியாக நிறுத்துமாறு கோரி கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னத்தினால் உயர் கல்வியமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறை கடந்த 3 வருடங்களாக இயங்கி வருகிறது. ஒவ்வொரு பிரிவிலும் 20 மாணவர்கள் வீதம் தெரிவுசெய்யப்பட்டு தற்போது மொத்தமாக 58 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

ஒவ்வொரு வருடத்திலும் சித்த மருத்துவத்துறைக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 20 மாணவர்களை தேர்வு செய்கிறது. இப்படியிருக்க கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இந்த சித்த மருத்துவத்துறையை இணைப்பதற்கு ஏற்பாடுகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாக நடைபெற்று வருவதாக அறிகிறேன்.

கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரம் மிக்க அதிகாரி மாணவர்களின் எண்ணிக்கை போதாது என்ற காரணத்தைக் காட்டி இந்த சித்த மருத்துப் துறையினை கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வது பொருத்தமானதல்ல என கிழக்கு மாகாண கல்வி மான்களும் சித்தமருத்துவத்துறை சார்ந்தவர்களும் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 2007ஆம்ஆண்டில் சித்த மருத்துவத்துறையில் 5 வருட மாணவர் தொகுதிகளிலும் 45பேரே கல்வி கற்றுள்ளனர். அது மட்டுமல்ல 2011ஆம் ஆண்டு கற்கை முடித்து வெளியாகவுள்ள சித்த மருத்துவ பட்டதாரிகள் தொகுதியில் மொத்தமாக 6 மாணவர்களே உள்ளனர். அத்துடன் 21ஆவது சித்த மருத்துவ மாணவர் தொகுதியில் 3 பேரே கற்கை முடித்து பட்டம் பெற்றுள்ளனர். இவ்வாறான நிலையிலும் யாழ் சித்த மருத்துவ பீடம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

அப்படியிருக்க கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 3 வருட மாணவர் தொகுதிகளிலும் 58 மாணவர்கள் உள்ளனர். இவ்வாறான நிலையில் எவ்வாறு மாணவர்களின் எண்ணிக்கை போதாது என காரணம் கூறமுடியும்.

கிழக்கு மாகாணத்துக்கென இருக்கும் ஒரு கொடை போன்ற சித்த மருத்துவத் துறையினை கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்க முயற்சிப்பது தவறான செயற்பாடாக அமையும்.

கிழக்கு மாகாணத்துக்குள்ள பாரம்பரிய மருத்துவத்துறைக்கான ஒரேயொரு பீடமாக திகழ்வது கிழக்குப் பல்கலைக்கழக சித்த மருத்துவப் பீடமாகும்.

கிழக்கு பல்கலைக்கழக சித்த மருத்துவத் துறையில் ஆங்கில மொழிமூலம் நடைபெற்று வருகின்ற கற்கை நெறியின் மூலம் பல்வேறு மேம்பாடுகள் சித்த மருத்துவத்துறைக்கு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. கற்கைத்துறை கொழும்புக்கு மாற்றப்படுவதனால் திறமை மிக்க பலர் பாதிக்கப்படுவதற்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன.

Monday, October 10, 2011

நிபந்தனை இல்லாமல் ஆதரவு வழங்க முடியாது ரணிலிடம் உறுதியாக மனோ கணேசன் தெரிவிப்பு!

Monday, October 10, 2011
கொழும்பு மாநகரசபையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கான எமது கட்சியின் ஆதரவை நிபந்தனையில்லாமல் வழங்க முடியாது. கடந்த பத்து வருடங்களாக கொழும்பு மாநகரசபையிலும் மேல்மாகாணசபையிலும் பாராளுமன்றத்திலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாம் வழங்கியதைப்போன்ற நிபந்தனையற்ற ஆதரவை இனிமேலும் தொடர முடியாது. தலைநகர தமிழ் மக்கள் தங்களது நலனை முன்னிறுத்தும் பேரம் பேசும் சக்தியை எங்களுக்குத் தந்துள்ளார்கள். இதுவே கொழும்பு மாநகரத்திலும் தெகிவளை-கல்கிசையிலும் கொலொன்னாவையிலும் தமிழ் மக்கள் எங்களுக்கு தந்துள்ள ஆணையாகும். இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகரசபையில் ஐக்கிய தேசியக் கட்சி 24 ஆசனங்களை பெற்றுள்ளது. ஆளுங்கட்சி 16 ஆசனங்களை பெற்றுள்ளது. ஜேவிபியின் 1 ஆசனத்தை தவிர்த்து, முஸ்லிம் காங்கிரஸ் 2 ஆசனங்கள் உட்பட அரசு ஆதரவு குழுக்கள் 6 ஆசனங்களை பெற்றுள்ளன. எனவே அரசாங்கம் 22 ஆசனங்களை தன்வசம் கொண்டுள்ளது. மாநகரசபையில் 53 உறுப்பினர்களில் பெரும்பான்மை பலமான 27 ஆசனங்களை பெற்றுக்கொள்வதற்கு ஜனநாயக மக்கள் முன்னணியின் 6 ஆசனங்கள் எந்த கட்சிக்கும் தேவைப்படுகின்றன. அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி என்ற முறையில் ஐதேக நிர்வாகத்தை ஏற்படுத்தினாலும் மாநகரசபையை சீராக கொண்டு செல்வதற்கு பெரும்பான்மை பலம் தேவைப்படுகின்றது. இச்சூழ்நிலையில்; எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய, ஜயலத் ஜயவர்தன ஆகியோருடன் இன்று (10-10-2001) மாலை நடைப்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் மனோ கணேசன் தெரிவித்துள்ளதாவது,

நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க எம்மிடம் தெரிவித்த கருத்துகளை இன்றும் நாளையும் நடைபெறவுள்ள கட்சியின் தலைமைக்குழுக் கூட்டத்தில் நாம் விரிவாக ஆராய்வோம். அவசியப்படுமனால் எமது கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர்கள் மேலதிக பேச்சுவார்த்தைகளை சம்பந்தப்பட்டவர்களுடன் நடத்துவார்கள். மக்கள் எமக்கு தந்துள்ள ஆணைக்கு இசைவாக உரிய முடிவுகளை எமது கட்சி எடுக்கும். ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வாக்களித்து எங்கள் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்திய மக்களுக்கு எங்களது நடவடிக்கைகள் மூலமாகவே நன்றிகளை தெரிவிக்க விரும்புகின்றேன்.

ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் இந்திய வெளியுறவுச் செயலர் சந்திப்பு!

Monday, October 10, 2011
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மாத்தாய் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

வடக்கு கிழக்கில் யுத்தத்தின் பின்னரான அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

Friday, October 7, 2011

புதிய உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள் நியமனக்கடிதங்களை கையளித்தனர்!

Friday, October 7, 2011
புதிதாக இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்களாகவும், தூதுவர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ள நால்வர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் இன்று தங்கள் நியமனக் கடிதங்களைக் கையளித்தனர்.

இலங்கைக்கான நியூஸிலாந்தின் புதிய உயர்ஸ்தானிராக எவ்ரில் ஹெண்டர்சனும், மலேஷியாவின் புதிய உயர்ஸ்தானிகராக அஸ்மி நஸவுந்தின் ஆகியோர் தங்கள் நியமனக் கடிதங்களை இன்று கையளித்தனர்.

இலங்கைக்கான துருக்கி நாட்டின் புதிய தூதுவராக புரக் அக்பார் நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஜோர்ஜியாவின் புதிய தூதுவராக சுரப் கட்ஷ்விலி நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளின் நியமனக் கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 19 இலங்கை மீனவர்கள் விடுதலை!

Friday, October 7, 2011
இந்தியாவில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 19 இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மீன்பிடி நீரியல் வள அமைச்சு தெரிவித்துள்ளது.

தேவேந்திரமுனை, மிரிஸ்ஸ, சிலாபம், பேருவளை பிரதேசங்களை சேர்ந்த இந்த கடந்த ஜூலை மாதம் 25 ஆம் 26 ஆம் திகதிகளில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுவதற்காக நாட்டில் இருந்து சென்றிருந்தனர்.

இந்திய கடல் எல்லையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, இந்திய அதிகாரிகளினால் அவர்களை கைதுசெய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்டுள்ள இந்த மீனவர்கள் தற்போது, இந்தியாவின் மகாபோதி மத்திய நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Thursday, October 6, 2011

பாராளுமன்றத்தில் இன்று சரஸ்வதி!

Thursday, October 6, 2011
நவராத்திரியின் இறுதி நாளான இன்று புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு, இந்துசமய கலாசார அலுவல்கள் திணக்களத்துடன் இணைந்து பாராளுமன்றத்தில் இன்று சரஸ்வதி பூஜையை நடத்தியது.

இந்தப் பூஜையில் பிரதி சபாநாயகர், சிரேஷ்ட அமைச்சர் ஜோன் அமரதுங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான அஸ்வர், அப்பாத்துரை விநாயக மூர்த்தி; உட்பட சில எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.

இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கலைநிகழ்வொன்றும் இடம்பெற்றது.

திருமலை விபத்தில் 13 படைவீரர்கள் காயம்: ஒருவர் மரணம்!.

Thursday, October 6, 2011
திருகோணமலை, பூநகர் பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் 13 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

திருகோணமலை, திஸ்ஸ கடற்படைத் தளத்தில் இடம்பெற்ற பயிற்சி ஒன்றில் கலந்து கொண்ட இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று பூநகர் பிரதேசம் வழியாகச் சென்று கொணடிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து மரம் ஒன்றுடன் மோதியதையடுத்தே ஒருவர் கொல்லப்பட்டதுடன் 13 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த 14 இராணுவ வீரர்களும். சேருநுவர, கந்தளாய் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்திய வெளிவிவகார செயலாளர் இலங்கை வருகிறார்!

Thursday, October 6, 2011
இந்திய வெளிவிவகார செயலாளர் ரஞ்சன் மாத்தாய் நாளை இலங்கை வரவுள்ளார்.
இலங்கை வரும் இவர் எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் இங்கு தங்கியிருப்பார் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய இலங்கை மீனவர்களில் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாக இடம்பெறும் பேச்சு வார்தையில் கலந்துகொள்வதன் பொருட்டே அவர் இலங்கை வருகிறார்.
இந்திய வெளிவிவகார செயலாளர் ரஞ்சன் மாத்தாயுடன் இந்திய தூதுக்குழுவினரும் இலங்கை வருகின்றனர்.

இதனிடையே, இவர்கள் எதிர்வரும் 9 ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்பின் போது இலங்கையில் தற்போதைய நிலவரங்கள் குறித்து ரஞ்சன் மாத்தாயுடன் கலந்துரையாடப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார்.

Tuesday, October 4, 2011

கண்டியில் விமான நிலையம் நிர்மாணிக்க தீர்மானம் - ஜனாதிபதி!

Tuesday, October 4, 2011
கண்டியில் புதிதாக விமான நிலையமொன்று நிர்மாணிக்கப் படவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதற்கான கட்டுமாணப் பணிகள் குண்டசாலை அல்லது கண்டியில் ஆரம்பிக்கப்படும் என்பதுடன் இதற்கென ஏற்கனவே சுமார் நூறு ஏக்கர் நிலப்பகுதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கண்டியிலுள்ள ஜனாதிபதி இல்லத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இவ்வாறு அமைக்கப்பட்டால் கொழும்பிலிருந்து கண்டிக்கு விமானம் மூலம் செல்ல முடியும்.

இவ்வாறான நிலை ஏற்படுத்தப்படுமானால் மக்கள் எவ்வித களைப்புமின்றி பயணம் செய்ய முடியும். இதற்கென ஒரு திட்டத்தையும் வகுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Followers

Blog Archive