Wednesday, July 14, 2010

பழம்பெரும் தொழிற்சங்கவாதியும், மேல் மாகாண ஆளுநருமான அல்ஹாஜ் அலவி மௌலானா அவர்களுடனான சந்திப்பில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஜப்பொருமாள்



Wednesday, July 14, 2010
பழம்பெரும் தொழிற்சங்கவாதியும், மேல் மாகாண ஆளுநருமான அல்ஹாஜ் அலவி மௌலானா அவர்களுடனான சந்திப்பில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஜப்பொருமாள்

பிரான்சில் தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.


Wednesday, July 14, 2010
பிரான்சில் சார்சல் என்னும் இடத்தில் 11.07.2010 அன்று மாலை 4 மணியிலிருந்து மாலை 7.30 மணிவரை தியாகிகள் தின நிகழ்வுகள் நடைபெற்றன. தோழர் ஜோதியின் வரவேற்புரையைத் தொடர்ந்து போராட்டத்தில் இதுவரை காலமும் மரணித்த மக்களுக்காகவும் போராளிகளுக்காகவும் இரண்டு நிமிட அஞ்சலிகள் செலுத்தப்பட்டன. மறைந்த தோழர் புஸ்பராஜா அவர்களின் துனைவியார் மீரா புஸ்பராஜா மங்களவிளக்கேற்றினார். முன்னைநாள் EPRLF அரசியல் செயற்பாட்டாளரும் தோழர் பத்மநாபாவின் நண்பருமான தோழர் கணேசமூர்த்தி தோழர் பத்மநாபாவின் உருவப்படத்திற்கு மாலையணிவித்தார். தொடர்ந்து அஞ்சலிக்கூட்டம் தோழர் கொட்வின் தலைமையில் நடைபெற்றது.

ஜேர்மன் கிளையின் சார்பாக தோழர் அலெக்ஸ் உரையாற்றும்போது 20 வது தியாகிகள் தினத்தினை கொண்டாடுவதில் பெருமிதம் கொள்வோம். ஏனேனில் அவர்கள் உயரிய இலட்சியங்களுக்காக போராடியவர்கள். அவர்கள் விட்டுச்சென்ற பணிகளை முன்னெடுத்து செல்வதே தோழர்களாகிய நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகுமென்று கூறினார்.

EPDP யின் பிரான்ஸ் கிளை சார்பாக தோழர் தமிழ் நேசன் உரையாற்றும்போது நான் தோழர் நாபாவை நேரில் பார்த்ததில்லை ஏனேன்றால் நான் வயதில் மிகவும் சிறியவனாக இருந்தேன். ஆனால் நான் நேசிக்கின்ற தலைவர் அவர்மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கின்றார். அதிலிருந்து அவர் எவ்வகையான தலைவராக இருந்திருப்பார் என்பதை என்னால் உணரமுடிகின்றது. கூட்டத்தில் பேசக்கிடைத்தால் ஐக்கியத்தை வலியுறுத்தி பேசுங்கள் என்று எனது தலைவர் கூறினார் என்றும் தெரிவித்தார்.

சுவிஸ் கிளையின் சார்பாக தோழர் பெர்னாண்டோ உரையாற்றும்போது நான் நீண்ட காலமாக தோழர் நாபாவுடனும் ஏனைய மறைந்த தோழர்கள் பலருடனும் அரசியல் பணியில் ஈடுபட்டிருக்கின்றேன். அந்த தோழர்களுடன் இணைந்து பணியாற்றிய காலங்களை என்னால் மறக்க முடியவில்லை. அவர்களை எங்கள் நெஞ்சங்களில் பூஜிக்கின்றோம். அவர்கள் கண்ட தொலைதூரக் கனவுகளை நனவாக்குவோம் என்று கூறினார்.

அரசியல் செயற்பாட்டாளரும், கவிஞருமான தோழர் அருந்ததி உரையற்றும்போது. ஈழப் போராட்ட வரலாற்றில் EPRLF கட்சி மட்டும்தான் ஜனநாயக பண்புகளுடன் சமுகத்திலிருக்கின்ற சாதிரீதியாக, வர்க்கரீதியாக ஒடுக்கு முறைக்கு உள்ளானவர்களை அணிதிரட்டியது. மக்களின் எதிர்காலம் தொடர்பாக தீர்க்கதரிசனத்துடன் முடிவுகளை எடுத்தது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்று மேலும் நமது உரிமைகளை படிப்படியாக வெண்றெடுக்க வேண்டுமென்ற தோழர் நாபாவினதும் அவரது கட்சியினதும் முடிவுகள் எவ்வளவு தீர்க்கதரிசனமானது என்பதை இன்றைய நிலமைகளிலிருந்து உணரக்கூடியதாகவுள்ளது. EPRLF கட்சியானது எதிர்காலத்தில் அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடல்களை நடத்த வேண்டுமென்ற கோரிக்கையையும் விடுத்தார்.


இடதுசாரி செயற்பாட்டாளரான தோழர் லோகநாதன் ஆசிரியர் உரையாற்றும்போது நான் இவ்வருடம் ஜெர்மனி, சுவிஸ், பிரான்ஸ் போன்ற இடங்களில் நடைபெற்ற தியாகிகள் தின நிகழ்வுகளில் பங்குபற்றியதில் நான் சந்தோசமடைகின்றேன். ஏனெனில் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் படிப்படியான முன்னேற்றத்தை காணக்கூடியதாகவிருந்தது. அவர்களிடம் காணப்படும் தோழமையும், ஒற்றுமையான செயற்பாடுகளும் தோழர் நாபா எப்படியான தலைமைப் பண்பைக் கொண்டிருந்திருப்பார் என்பதை என்னால் உணரமுடிகின்றது. EPRLF தோழர்களால் உண்மையான ஐக்கியத்தையும் மக்களுக்கான சுபிட்சமான எதிர்காலத்தையும் உருவாக்கமுடியும் என்று தான் நம்புவதாக கூறினார்.

JVP யின் செயற்பாட்டாளர் நந்தன குணசிங்கா உரையாற்றும்போது தோழர் நாபாவை 70 களிலிருந்து அவருடைய செயற்பாடுகளை பார்த்திருக்கின்றேன். அந்தக் காலத்தில் வடகிழக்கில் மட்டுமல்லாது தென்னிலங்கையிலும் இடதுசாரி முற்போக்கு சக்திகள் மத்தியில் சிறு சிறு கூட்டங்களை நடத்தியிருந்தார். அவருடைய சிந்தனையும் செயற்பாடுகளும் அனைத்து இனமக்களின் நலன் சார்ந்ததாகவே இருந்தது என்று குறிப்பிட்டார்.

TBC யின் அரசியல் ஆய்வாளரும், இடதுசாரி செயற்பாட்டாளருமான தோழர் சிவலிங்கம் அவர்கள் நீண்டதொரு சிறப்புரையை ஆற்றியிருந்தார். அவருடைய உரையில் நாடுகடந்த தமிழீழம், வட்டுக்கோட்டை தீர்மானம், அரசியல் தீர்வை புறம்தள்ளிய அபிவிருத்தி, நாடளாவிய ரீதியில் ஜனநாயக விழுமியங்களை சிதைக்கின்ற செயற்பாடுகள், இராணுவ மயமாக்கல் போன்ற விடயங்களை உள்ளடக்கியிருந்தார். இலங்கையில் இவ்வகையான செயற்பாடுகள், அணுகுமுறைகள் அனைத்தும் நாட்டை மேலும் பின்தங்கிய நிலைக்கு கொண்டு செல்லும் என்று எச்சரிக்கை தொனியில் குறிப்பிட்டார். இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வு , முழு இலங்கைக்குமான சுபிட்சமான எதிர்காலம் என்பதெல்லாம் நாட்டின் சகல துறைகளிலும் ஜனநாயக விழுமியங்களை பாதுகாப்பதிலேயே தங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார். அவருடைய பேச்சுக்கள் சபையிலுள்ளோரை சிந்திக்க தூண்டும் வகையில் அமைந்திருந்தது.

கட்சியின் தலைமைக்குழு உறுப்பினரும், சர்வதேசக் கிளைகளின் பொறுப்பாளருமான தோழர் சாந்தன் உரையாற்றும்போது நாம் இன்று பிரான்ஸில் 20 வது வருட தியாகிகள் தினத்தை நினைவுகூர்ந்து கொண்டிருக்கின்றோம். தோழர் பத்மநாபா போன்ற பல நூறு ஆற்றல் மிக்க தலைவர்களை இழந்திருக்கின்றோம். இவர்கள் அனைவரும் உயரிய இலட்சியங்களுக்காக தொலைதூரக் கனவுகளுடன் போராடப் புறப்பட்டவர்கள். இந்த மரணித்த தோழர்களுடன் நாம் இரவு, பகலாக கலந்துரையாடிய, விவாதித்த விடயங்களைத்தான் நாம் இலகுவில் மறந்துவிடத்தான் முடியுமா தோழர்களே? இவர்கள் சக மனிதர்களை மனிதனாக மதிக்க வேண்டுமென்று விரும்பியவர்கள். தமிழ் சமுகத்தில் இருக்கின்ற சகலவிதமான பிற்போக்கு தனங்களையும், ஏற்றத் தாழ்வுகளையும் நிராகரித்தவர்கள். எமது கட்சியானது இவ்வகையான விடயங்களில் எந்தவொரு சமரசத்திற்கும் இடம் கொடுக்காது செயற்படும் என்றும் தெரிவித்தார். கடந்த காலத்தில் எமது கட்சியுடன் இணைந்து பணியாற்றிய பல தோழர்களை பார்க்கின்றபோது எனக்கு பழைய நினைவுகளே என் கண்முன்னே வருகின்றன. இத்தோழர்கள் அனைவரினதும் அர்ப்பணிப்புக்களும் உழைப்புக்களும் பதிவு செய்யப்படவேண்டியவை என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் தி.சிறிதரன்(சுகு) அவர்களினால் அனுப்பிவைக்கப்பட்ட தியாகிகள் தின செய்தி ஒன்று வாசிக்கப்பட்டது. கட்சியின் தலைமைக்குழு உறுப்பினரும், முன்னாள் வட-கிழக்கு மாகாண முதலமைச்சரானதோழர் வரதராஜப்பெருமாள் அவர்களின் தியாகிகள் தின செய்திகள் மற்றும் அரசியல் நிலவரம் தொடர்பான விடயங்கள் தொலைபேசி மூலமாக ஒலிபரப்பு செய்யப்பட்டது.

மாவட்ட ரீதியாக மறைந்த தோழர்களின் விபரமும், புகைப்படங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இவ்வருடம் இலங்கை, இந்தியா, பிரித்தானியா, கனடா, ஜெர்மனி, சுவிஸ் போன்ற இடங்களில் நடைபெற்ற தியாகிகள் தின நிகழ்வுகளின் புகைப்படங்களும் மக்களின் பார்வைக்குவைக்கப்பட்டிருந்தன. EPRLF இன் கடந்தகால, நிகழ்கால, எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக நேற்று இன்று நாளை என்னும் தலைப்பில் விபரணப்படம் ஒன்றும் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. நிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறியது.

பத்மநாபா EPRLF (பிரான்ஸ் கிளை.)

ஐ.நா மூவர் குழு அடுத்த வாரத்தினுள் கூடுகிறது,

Wednesday, July 14, 2010
இலங்கை தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்கென ஐக்கிய நாடுகள் செயலாளரினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய நிபுணர் குழு அடுத்த வாரத்துக்குள் நியூயோர்க்கில் கூட எண்ணியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கின்றது.

தமது அமைப்பின் இலங்கைக்கான வதிவிட இணைப்பதிகாரி நீல் பூனே தற்போது நியூயோர்க்கில் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரின் ஊடகப் பேச்சாளர் ஃபர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

நிபுணர் குழு அடுத்த வாரத்துக்குள் நியூயோர்க்கில் கூடவுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதுவரை உறுதியான திகதி நிர்ணயிக்கப்பட்டவில்லையெனக் கூறினார்.

நீல் பூனே தற்போது நியூயோர்க்கில் தங்கியிருப்பதாகவும், அவர் ஐக்கிய நாடுகள் அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்றுவருவதாகவும் ஃபர்ஹான் ஹக் குறிப்பிட்டார்.

வைகோ, நெடுமாறன் கைது,

Wednesday, July 14, 2010
சென்னையில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தை மூடக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா பாண்டியன், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழநெடுமாறன், பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன், புதிய பார்வை இதுழாசிரியர் மா நடராசன் உட்பட ஏராளமானோரை தமிழ் நாடு பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுகின்றமையைக் கண்டித்தும், ஐ.நா நிபுணர் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க மறுக்கும் மஹிந்த அரசுக்கு தமிழகத்தில் தூதரகம் இயங்கக் கூடாது என்று தெரிவித்தும் இலங்கை அரசுக்கு எதிராக சென்னை மைலாப்பூர் பகுதியில் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 300 இற்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் எதிராக கோஷங்களை எழுப்பினர். ஐ.நா விசாரணைக் குழுவை அனுமதிக்க மறுக்கும் இலங்கை அரசுக்கு தமிழகத்தில் தூதரகம் இயங்கக்கூடாது என்று முழக்கமிட்டவாறு மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்காவிலிருந்து தூதரகத்தை நோக்கி அவர்கள் ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது பொலிஸார் தடுத்தி நிறுத்தி இவர்களைக் கைது செய்தார்கள் என இந்தியாவிற்கான இலங்கை தூதரக பிரதி உயர்ஸ்தானிகர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பேதங்களை மறந்து நாட்டுக்காக உழைக்க முன்வரவேண்டும்,

Wednesday, July 14, 2010
அரசியல் பேதங்களை புறந்தள்ளிவிட்டு நாட்டின் முன்னேற்றத்துக்காக சேவையாற்ற முன்வருமாறு அரசாங்க ஊழியர்களிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்தார். கிளிநொச்சி படைத்தலைமையகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் அரச ஊழியாகளைச் சந்தித்து உரையாடியபோதே இக்கோரிக்கையை அவர் முன்வைத்தார்.

ஜனாதிபதி இங்கு மேலும் உரையாற்றுகையில் :-

உங்கள் மத்தியில் பலவித அரசியல் பேதங்கள் இருக்கலாம். விடுவிக்கப்பட்டுள்ள இந்த பூமியை மீளக் கட்டியெழுப்புவதற்காக நீங்கள் அரசியல் பேதங்களை மறந்து நாட்டுக்காக உழைக்க முன்வரவேண்டும். வடக்கிலும் கிழக்கிலும் பயங்கரவாதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்க ஊழியர்களின் சேவை அத்தியாவசியமானதாகும் என்று ஜனாதிபதி கூறினார்.

அரசாங்க ஊழியர்கள் மத்தியில் ஜனாதிபதி தமிழ் மொழிலும் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Followers

Blog Archive