
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறையை கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் நடவடிக்கையினை உடனடியாக நிறுத்துமாறு கோரி கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னத்தினால் உயர் கல்வியமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறை கடந்த 3 வருடங்களாக இயங்கி வருகிறது. ஒவ்வொரு பிரிவிலும் 20 மாணவர்கள் வீதம் தெரிவுசெய்யப்பட்டு தற்போது மொத்தமாக 58 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
ஒவ்வொரு வருடத்திலும் சித்த மருத்துவத்துறைக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 20 மாணவர்களை தேர்வு செய்கிறது. இப்படியிருக்க கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இந்த சித்த மருத்துவத்துறையை இணைப்பதற்கு ஏற்பாடுகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாக நடைபெற்று வருவதாக அறிகிறேன்.
கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரம் மிக்க அதிகாரி மாணவர்களின் எண்ணிக்கை போதாது என்ற காரணத்தைக் காட்டி இந்த சித்த மருத்துப் துறையினை கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வது பொருத்தமானதல்ல என கிழக்கு மாகாண கல்வி மான்களும் சித்தமருத்துவத்துறை சார்ந்தவர்களும் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 2007ஆம்ஆண்டில் சித்த மருத்துவத்துறையில் 5 வருட மாணவர் தொகுதிகளிலும் 45பேரே கல்வி கற்றுள்ளனர். அது மட்டுமல்ல 2011ஆம் ஆண்டு கற்கை முடித்து வெளியாகவுள்ள சித்த மருத்துவ பட்டதாரிகள் தொகுதியில் மொத்தமாக 6 மாணவர்களே உள்ளனர். அத்துடன் 21ஆவது சித்த மருத்துவ மாணவர் தொகுதியில் 3 பேரே கற்கை முடித்து பட்டம் பெற்றுள்ளனர். இவ்வாறான நிலையிலும் யாழ் சித்த மருத்துவ பீடம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
அப்படியிருக்க கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 3 வருட மாணவர் தொகுதிகளிலும் 58 மாணவர்கள் உள்ளனர். இவ்வாறான நிலையில் எவ்வாறு மாணவர்களின் எண்ணிக்கை போதாது என காரணம் கூறமுடியும்.
கிழக்கு மாகாணத்துக்கென இருக்கும் ஒரு கொடை போன்ற சித்த மருத்துவத் துறையினை கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்க முயற்சிப்பது தவறான செயற்பாடாக அமையும்.
கிழக்கு மாகாணத்துக்குள்ள பாரம்பரிய மருத்துவத்துறைக்கான ஒரேயொரு பீடமாக திகழ்வது கிழக்குப் பல்கலைக்கழக சித்த மருத்துவப் பீடமாகும்.
கிழக்கு பல்கலைக்கழக சித்த மருத்துவத் துறையில் ஆங்கில மொழிமூலம் நடைபெற்று வருகின்ற கற்கை நெறியின் மூலம் பல்வேறு மேம்பாடுகள் சித்த மருத்துவத்துறைக்கு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. கற்கைத்துறை கொழும்புக்கு மாற்றப்படுவதனால் திறமை மிக்க பலர் பாதிக்கப்படுவதற்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன.
No comments:
Post a Comment