Tuesday, October 4, 2011

கண்டியில் விமான நிலையம் நிர்மாணிக்க தீர்மானம் - ஜனாதிபதி!

Tuesday, October 4, 2011
கண்டியில் புதிதாக விமான நிலையமொன்று நிர்மாணிக்கப் படவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதற்கான கட்டுமாணப் பணிகள் குண்டசாலை அல்லது கண்டியில் ஆரம்பிக்கப்படும் என்பதுடன் இதற்கென ஏற்கனவே சுமார் நூறு ஏக்கர் நிலப்பகுதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கண்டியிலுள்ள ஜனாதிபதி இல்லத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இவ்வாறு அமைக்கப்பட்டால் கொழும்பிலிருந்து கண்டிக்கு விமானம் மூலம் செல்ல முடியும்.

இவ்வாறான நிலை ஏற்படுத்தப்படுமானால் மக்கள் எவ்வித களைப்புமின்றி பயணம் செய்ய முடியும். இதற்கென ஒரு திட்டத்தையும் வகுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிறீன் கார்ட் விசாவிற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் இணையத்தில்!

Tuesday, October 4, 2011
2013 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் குடிபெயர்வதற்கான கிறீன் கார்ட் விசாவிற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் இணையத்தளத்தின் ஊடாக ஏற்றுக்கொள்ளப்படுமென கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் சட்ட ரீதியாக குடிபெயர்வதற்காக கிறீன் கார்ட் விசா வருடந்தோறும் குலுக்கல் முறையில் சுமார் 50ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கமையவே இம்முறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரிகள் www.dvlottery.state.gov என்ற இணையத்தளத்தின் ஊடாக தங்களை பதிவு செய்துகொள்ளமுடியும். மேலும், ஆங்கிலம், சிங்களம், தமிழ்மொழி மூலமான அறிவுறுத்தல்களுக்கு இலங்கைக்கான அமெரிக்கதூதரகத்தின் இணையத்தளத்தில் http://srilanka.usembassy.gov/visas/diversity-visa-lottery-program.html என்ற முகவரியினூடாக பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இதற்கான பதிவுகட்டணம் முற்றிலும் இலவசமாகும். பதிவுகளை மேற்கொள்வதற்கான இறுதித்திகதி 05/11/2011 என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற இந்நடைமுறையில், குறைந்த அளவில் அமெரிக்காவிற்கான குடியேற்ற எண்ணிக்கையைக் கொண்டே நாடுகளுக்கே வருடாந்தம் இது வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Monday, October 3, 2011

தேர்தல் விதிமுறைகளை மீறிய 125 பேர் இதுவரை கைது!

Monday, October 3, 2011
எதிர்வரும் எட்டாம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட தினத்திலிருந்து இதுவரையில் தேர்தல் விதிமுறைகளை மீறிச்செயல்பட்டமை தொடர்பில் 94 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் 125பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 25 வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளன என்று தேர்தல் கடமைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்தார்.

தேர்தல் வன்முறைகள் தொடர்பில் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது:

50 பொலிஸ் நிலையங்களின் ஊடாகவே 94 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதில் பாரிய வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறைப்பாடுகளில் 57 தேர்தல் சட்டங்களை மீறி சுவரொட்டி ஒட்டப்பட்டவையாகும். ஏனையவை சாதாரண சிறு சிறு சம்பவங்களாகும்.

கடந்த கால தேர்தல் வன்முறைகளோடு ஒப்பிடுகையில் இம்முறை பாரிய அளவு அது குறைவடைந்துள்ளது. ஆனால் சில கட்சிகள் தமது அரசியல் நோக்கங்களுக்காக பாரிய தேர்தல் வன்முறைகள் இடம்பெறுவதாக கூறுகின்றன. அதில் எவ்வித உண்மைத் தன்மையும் கிடையாது.

சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலொன்றுக்கான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சகல கட்சிகளும் தத்தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதற்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கெதிராக நாம் சட்ட நடவடிக்கை எடுப்போம். எனவே சகல கட்சிகளும் எம்மோடு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைப்பு!

Monday, October 3, 2011
இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைப்பு!

இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பத்து மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படைத்தலைமையகம் அறிவித்துள்ளது.

இம் மீனவர்களை சர்வதேசக் கடற் பரப்பில் வைத்து இலங்கைக் கடற்படைஅதிகாரிகளிடம் கையளிக்கப் பட்டு இலங்கை கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்றில் காங்கேசன்துறைக்கு அழைத்துவரப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Saturday, October 1, 2011

சர்வதேச நீதிமன்றங்களில் இலங்கைக்கு எதிராக எத்தனை வழக்குகளை தொடுத்தாலும் அவை அத்தனையையும் எதிர்கொள்ள இலங்கை ஒரு போதும் அஞ்சப்போவதில்லை!

Saturday, October 1, 2011
சர்வதேச நீதிமன்றங்களில் இலங்கைக்கு எதிராக எத்தனை வழக்குகளை தொடுத்தாலும் அவை அத்தனையையும் எதிர்கொள்ள இலங்கை ஒரு போதும் அஞ்சப்போவதில்லை. மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு தேவையான அனைத்துச் சட்ட உதவிகளையும் பாதுகாப்பையும் அரசாங்கம் வழங்கும் என்று முன்னாள் சட்ட மா அதிபரும் அமைச்சரவை ஆலோசகருமான மொஹான் பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிராக வழக்கு தொடரும் நாடுகளுக்கு நாமும் நல்ல பாடங்களை புகட்டுவோம். விரைவில் “அந்நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மீறல் சம்பவங்களை அதே சர்வதேச நீதிமன்றில் முன்வைத்து வழக்கு தொடருவோம் என்று அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மொஹான் பீரிஸ் மேற்கண்டவாறு கூறினார்.

பிரித்தானியாவில் இருந்து மேலும் பல இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்!

Saturday, October 1, 2011
பிரித்தானியாவில் இருந்து மேலும் பல இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர். கடந்த ஜூன் மாதம் 44 பேரும் நேற்று முன்தினம் 50 பேரும் இவ்வாறு நாடு கடத்தப்பட்டனர்.

இந்த நிலையில் பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் ருக்கோன், லிவர்பூல் வீதி போன்ற இடங்களில் எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் நடத்திய தேடுதலின் போது இலங்கையர்கள் பலர் சட்ட விரோதமாக விசா முடிவடைந்த நிலையில் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பிரித்தானிய குடியுரிமை சட்டத்தை மீறினர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களும் விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜீவ் கொலையாளிகளின் குற்றப் பின்னணி-எஸ்.புஷ்பவனம் (துக்ளக்)

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட மூவருக்கு கருணை காட்ட வேண்டும் என்ற பிரசாரம், தொலைக்காட்சிகள் உதவியுடன் நடைபெறுகிறது. சாதாரணமாக ‘தமிழ் உணர்வாளர்கள்’ என்று அறியப்படுபவர்கள், தற்போது ‘மனித நேயக் காவலர்களாக’ அவதாரம் எடுத்துள்ளனர். இந்நிலையில், அந்த படுகொலையைப் பற்றிய சில விஷயங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

யாழ்ப்பாண மேயர் கொலை வழக்கில் பிரபாகரன் சார்பாக வாதாடிய வக்கீல் எஸ்.நடராஜன், டெஸோ தலைவர் சிறி.சபாரத்தினம், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் எம்.பி., E.P.R.L.F. ஜார்ஜ், P.L.O.T.E. வாசுதேவன், E.P.R.L.F. பத்மனாபா, கிருபன், யோக சங்கரி மற்றும் நால்வர் தவிர, ரஞ்சன் விஜயரத்னே, பிரேமதாசா, லக்ஷ்மண் கதிர்காமர், காமினி திசநாயகே, நீலம் திருச்செல்வன், அருணாசலம் தங்கதுரை, சாம் தம்பிமுத்து, சரோஜினி யோகேஸ்வரன், யாழ்ப்பாண மேயர்.... என்று பலர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார்கள். தவிர விடுதலைப் புலிகளின் தலைவர்கள் மாத்தையா, கிட்டு உட்பட பலரும் கொல்லப்பட்டனர். இவர்களெல்லாம் யார்? இவர்களுக்கு எது பொதுவானது?

பிரபாகரனுக்குப் பிடிக்காத, அவருக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர்கள் என்ற காரணத்திற்காக இவர்கள் எல்லோரும் ‘துரோகி’ பட்டம் சூட்டப்பட்டனர். ஈவு இரக்கமின்றி, கோழைத்தனமாக, மனித நேயம் துளியும் இன்றி கொலை செய்யப்பட்டனர். இவர்களில் சிலரிடம் அவர்களின் விருந்தோம்பலை ஏற்றுக் கொண்டார்கள் விடுதலைப் புலிகள். நிராயுதபாணியாக இருந்தவர்களை ஒருவித விசாரணையுமின்றி விடுதலைப் புலிகள் கொன்ற பல தமிழர்களில் சிலர்தான் இவர்கள். (ரஞ்சன், காமினி, பிரேமதாஸா போன்றோர் சிங்களவர்கள்.)

பல தமிழ்க் குடும்பங்களிலிருந்து சிறுவர்களைக் கடத்திச் சென்று, கோழைத்தனமாக அவர்களைக் கேடயமாகப் பயன்படுத்தி, இலங்கை ராணுவத்தின் குண்டுகளுக்கு இரையாக்கினார்கள் விடுதலைப் புலிகள். பிரபாகரன் கொல்லப்பட்டதும் இக்குடும்பங்கள் அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடின. இதுதான் விடுதலைப் புலிகளின் லட்சணம். இப்படிப்பட்டவர்கள்தான் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் முறையாக விசாரிக்கப்பட்டனர். அவர்களுக்கு 10 வக்கீல்களை இந்திய அரசு அமைத்துக் கொடுத்தது. அந்த வக்கீல்களுக்கு ஃபீஸும் இந்திய அரசே வழங்கியது. 26 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 251 குற்றச்சாட்டுகள் பதிவாகின.

குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே 112 மனுக்களை குற்றம் சாட்டப்பட்டவர்கள் அளித்தனர். எல்லாவற்றையும் பரிசீலித்துதான் தீர்ப்பு வழங்கப்பட்டது. 1993 மே 5– ல் பிராஸிகியூஷன் தனது தரப்பு வாதத்தைத் தொடங்கியது. 1994 ஜனவரி 19–ல் விசாரணை ஆரம்பமானது. ஆயிரத்திற்கும் மேலான ஆவணங்கள், சாட்சியங்கள் பரிசீலிக்கப்பட்டன. சிறப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பை 28.1.98 அன்று வழங்கியது;

மேல்முறையீட்டில் உச்சநீதி மன்றம் இரு தரப்பு வாதங்களையும் கேட்டு 11.5.1999 அன்று பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி ஆகியோருக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்தது. மூன்று பேருக்கு தூக்குத் தண்டனை. நளினியின் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மற்றவர்கள் ஏற்கெனவே சிறையில் கழித்த காலத்தை தண்டனைக் காலமாகக் கருதி, விடுவிக்கப்பட்டனர். தமிழக ஆளுநர் நளினியின் கருணை மனுவை ஏற்று, அவரது தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தார். மற்றவர்களின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

ஆனால், பிரபாகரனால் துளிக்கூட மனித நேயம் இன்றி கொடூரமாகக் கொல்லப்பட்ட எண்ணற்ற தமிழர்களின் மரணத்தைப் பற்றி, மறந்தும் வாய் திறக்காத இந்த ‘மனித நேயக் காவலர்கள்’, இவ்வளவு முறையாக நடந்து நிறைவு பெற்ற வழக்கில் கொடுக்கப்பட்ட தண்டனையை, ‘மனித நேயமற்ற செயல்’ என்று கூறுவதும், தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று பிரசாரம் செய்வதும் வேடிக்கை; வேதனை.

சிலர் பொய்ப் பிரசாரத்தின் உச்சத்திற்கே சென்று, “அந்த மூவரும் ‘அப்பாவிகள்’, சும்மா ஒரு பாட்டரி வாங்கிக் கொடுத்ததற்காக மரண தண்டனையா” என்று பேசுகிறார்கள்.

சில தினப் பத்திரிகைகளும் இப்பிரசாரத்திற்கு இடமளிக்கின்றன. ‘அப்பாவி’ என்று சொல்லப்படும் பேரறிவாளன், முருகன், சாந்தன் என்பவர்களின் பங்கு ராஜீவ் காந்தி படுகொலையில் என்ன என்பதை, கீழ்கண்ட குறிப்புகளின் மூலம் வாசகர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

அறிவு (எ) பேரறிவாளன்:

பிரபலமான விடுதலைப் புலி ஆதரவாளரின் மகன். பொது இடங்களில் கடை பரப்பி, கேசட், வீடியோ கேசட், பிரசுரங்கள், புத்தகங்களை விற்பனை செய்து, மற்றும் விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டிக் கொடுப்பவர். விடுதலைப் புலித் தலைவர் பேபி சுப்ரமணியத்துடன் கள்ளத்தனமாக யாழ்ப்பாணம் சென்று 1990 மே முதல் நவம்பர் வரை தங்கியுள்ளார். அவர் விடுதலைப் புலிகளுடன் இருக்கும் வீடியோ படங்கள், சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் உள்ளன. ராஜீவ் காந்தியைக் கொல்வதுதான் திட்டம் என்பது தெரிந்தே முழு மூச்சாக விடுதலைப்புலி சிவராசனுக்கு உதவினார் பேரறிவாளன்.

பஜாஜ் மோட்டார் சைக்கிளை இவர் பெயரில் சிவராசனுக்கு வாங்கிக் கொடுத்தது, ஒயர்லஸ் செட்டுக்கு வேண்டிய பேட்டரியை வாங்கிக் கொடுத்தது, மனித வெடிகுண்டு தனுவின் உடம்பில் கட்டிய வெடிகுண்டை இயக்க, கோல்டன் பவர் பேட்டரியை வாங்கிக் கொடுத்தது எல்லாம் இவர்தான். படுகொலை நடந்த பின் செய்தித் தொடர்பு வேலையைச் செய்தவரும் இந்தப் பேரறிவாளன்தான். விடுதலைப் புலிகளின் மறைவிடத்திலிருந்து தூர்தர்ஷன் செய்திகளைப் பதிவு செய்து, யாழ்ப்பாணத்திற்கு அனுப்புவது இவருடைய முக்கிய வேலையாக இருந்தது. சுபா சுந்தரம் ஸ்டூடியோவிற்கு அடிக்கடி சென்று செய்திகளைப் பரிமாறிக் கொண்டு, திட்டம் தீட்டும் வேலையில் ஈடுபட்டார் இவர். முருகன் அவ்வப்போது இவர் வீட்டில் தங்குவார்.

முருகன்:

இவர் விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர். இந்தப் படுகொலையை நடத்துவதற்காகவே, சிவராசன் தலைமையில் கோடியக்கரையில் வந்து இறங்கிய 9 பேர்களில் இவர் ஒருவர். வயர்லெஸ் செட் தொடர்பு, சிவராசனுக்குப் பல வகைகளிலும் உதவுவது, பணம் பட்டுவாடா செய்வது ஆகியவை இவரது பொறுப்புக்கள். நளினியைச் சந்தித்து அவர் மீது இவர் காதல் வயப்பட்டதால், பொட்டு அம்மன் இவரை யாழ்ப்பாணத்திற்குத் திரும்ப உத்தரவிட்டார். படகுக்காக கோடியக்கரையில் சில நாட்கள் காத்திருந்தார். அந்த நாட்களில் நளினியின் ஒத்துழைப்பு சிவராசன் குழுவுக்குக் கிடைப்பது வெகுவாகக் குறையத் தொடங்கவே, நளினியின் ஒத்துழைப்பு வேண்டுமென்றால், முருகன் இங்கு இருப்பது அவசியம் என்று கருதி, சிவராசன், முருகனைத் திரும்ப அழைத்தார்.

முருகன், யாழ்ப்பாணம் செல்லும் முன், இயக்கத்தின் முக்கியமான கடிதங்கள், ஆயுதங்கள், புத்தகங்கள் மற்றும் வரவு செலவுக் கணக்குகளை கோடியக்கரை சண்முகத்திடம் கொடுத்து, பத்திரமாக வைத்துக் கொள்ளச் சொன்னார். அதை சண்முகம் கடற்கரை மணலில் புதைத்து வைத்தார். சண்முகம் கைதானவுடன் அவை அனைத்தும் தோண்டி எடுக்கப்பட்டு, சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு வலுவான ஆதாரங்கள் கிடைத்தன; முருகனின் முழுப் பங்கும் வெளியானது.

இந்து மாஸ்டர் எனப்படும் முருகன்தான் நளினியை மூளைச் சலவை செய்து, ராஜீவ் காந்தி கொல்லப்பட வேண்டியவரே, அதற்காக எதையும் செய்யலாம் என்ற நிலைக்கு நளினியைக் கொண்டு வந்தவர்.

மே 7, 1991 அன்று வி.பி.சிங் கூட்டத்தில் நடந்த படுகொலைக்கான ஒத்திகையில் பேரறிவாளன், ஃபோட்டோ கிராபர் ஹரிபாபு, நளினி, சிவராசனுடன் முருகனும் பங்கேற்றார்.

முருகனின் மடிப்பாக்கம் வீட்டிலிருந்து வயர்லெஸ் செட்டுகளும், சங்கேத மொழிக்குறிப்பும் கைப்பற்றப்பட்டன. இவர் பிடிபட்டவுடன், சயனைட் சாப்பிட முயன்றார். அது தடுக்கப்பட்டு கைதானார்.

சாந்தன்:

சின்ன சாந்தன் என்கிற சுதேந்திர ராஜா, சிவராசனின் உதவியாளர். இவரும் விடுதலைப் புலிகளின் உளவுத் துறையைச் சேர்ந்தவர். சிவராசனுடன் மே 2–ல் சென்னைக்கு வந்து, அவருடன் ஜெயக்குமார் என்பவர் வீட்டில் தங்கியவர். ஃபோட்டோ கிராபர் ஹரிபாபுவுடனும் 1 வாரம் தங்கினார்.

மே 1– ஆம் தேதி சிவராசன் தலைமையிலான குழுவுடன் கோடியக்கரைக்கு வந்தார். சிவரூபன் போன்ற விடுதலைப் புலிகளை வேதாரண்யத்திலிருந்து திருச்சிக்கு அழைத்துச் சென்றவர் இவர். சிவராசனின் கூட்டாளிகளுக்குத் தகவல்களை எடுத்துச் செல்வது, பணப் பட்டுவாடா செய்வது, சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்வது, ஒரு மறைவிடத்திலிருந்து மற்றொரு மறைவிடத்திற்கு ரகசியமாக நபர்களை அழைத்துக் கொண்டு போவது போன்றவை இவரது வேலை.

1988–ல் அமைதிப் படையினரால் யாழ்ப்பாணத்தில் பிடிபட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டவர் இவர். 1990 பிப்ரவரியில் சிவராசன் பண உதவி செய்ய, சென்னை எம்.ஐ.இ.டி. கல்லூரியில் சேர்ந்தார். பத்மநாபா கொலையில் இவருடைய பங்கு முக்கியமானது. ஜக்கரியா காலனியில் EPRLF உடன் பழகி அவர்களது நம்பிக்கையைப் பெற்று, பத்மநாபாவின் நடவடிக்கைகளை கண்காணித்து, சிவராசனிடம் அவ்வப்போது சொல்லி, பத்மநாபா மற்றும் 7பேர் படுகொலை செய்யப்பட ஏற்பாடு செய்தவர்.

1991 ஏப்.28 அன்று சிவராசனுடன் பொட்டு அம்மனைச் சந்தித்தபோது, ராஜீவ் காந்தி படுகொலைத் திட்டம் பற்றி இவரிடம் விளக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர்தான் கொலை செய்யப்பட வேண்டிய இடம் என்று முதலில் சிவராசன் இவருக்குத்தான் சொன்னார். அதன்பின் ஏற்பாடுகள் இவருடையது. மரகதம் சந்திசேகரின் மகன் மூலம், ரூ.5 லட்சம் தேர்தல் நிதி கொடுத்து, மாலை போட அனுமதி வாங்கியதும் இவர்தான். படுகொலைக்குப் பிறகு, சிவராசன், நளினி, சுபாவுடன் ஆட்டோவில் ஏறி டிரைவர் அருகே உட்கார்ந்து சென்னைக்கு வந்தார். கத்திப்பாராவில் இறங்கிக் கொண்டார். சிவராசன் தப்பிக்க சிவராசனுக்கும், திருச்சி சாந்தனுக்கும் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தார். இதுதான் இவர்களுடைய பூர்வோத்ரம்.

இவை அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டவை. ராஜீவ் காந்தி கொலைச்சதியில் முக்கியப் பங்கு வகித்ததால்தான், இவர்களுக்குத் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.

‘ராஜீவ் காந்தி உயிரோடிருந்தால் இவர்களை மன்னித்திருப்பார்’ என்கிறார் கருணாநிதி. இந்தப் பிதற்றலை துக்ளக் ஆசிரியர் சிறப்பாக நையாண்டி செய்திருந்தார். ராஜீவ் காந்தி உயிரோடு இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை நினைவு படுத்திப் பார்ப்போம். அவரது தாயார் 31 அக்.1984 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். அப்படுகொலையில் சம்பந்தப்பட்ட சத்வந்த் சிங்குக்கு தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டது. அவருக்குத் தூக்கு வேண்டாம் என்று ராஜீவ் காந்தி சொல்லவில்லை! சத்வந்த் சிங் தூக்கிலிடப்பட்டார்.

சரி, ராஜீவ் காந்தியுடன் இறந்த மற்றவர்களின் குடும்பங்களுக்கு என்ன நீதி? ஒரு கொலை செய்யப்பட்டாலே, இறந்தவர்களின் குடும்ப வேதனையைக் காண்பிக்கும் தொலைக்காட்சிகள், இந்த 17 பேரின் குடும்பங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றி ஏன் விவாதிக்கக் கூடாது? குண்டு வெடிப்பின்போது சுற்றி நிற்கும் பல அப்பாவிகளும் இறந்து போவார்கள் என்று, தெரிந்தே செய்யப்பட்ட தீவிரவாதச் செயல் இது.

இதில் பலியானவர்கள்

1. பி.கே.குப்தா, ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு அலுவலர்,
2. பி.கே. எஸ்.முகமது இக்பால், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.,
3. ராஜ குரு, பல்லாவரம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர்,
4. சி.எட்வர்ட் ஜோசப், சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர்,
5. வி.எத்திராஜுலு, குன்றத்தூர் காவல்நிலைய எஸ்.ஐ.,
6. எஸ்.முருகன், சோமங்கலம் காவல்நிலைய கான்ஸ்டபிள்,
7. ஆர்.ரவிச்சந்திரன் (எஸ்.பி.சி.ஐ.டி. கமாண்டோ கான்ஸ்டபிள்),
8. தர்மன், காஞ்சிபுரம் ஸ்பெஷல் பிராஞ்ச் கான்ஸ்டபிள்,
9. திருமதி. சந்திரா, காஞ்சிபுரம் கான்ஸ்டபிள்,
10. திருமதி. லதா கண்ணன், அரக்கோணம்,
11. செல்வி. கோகில வாணி (லதா கண்ணனின் மகள்),
12. திருமதி. சந்தானு பேகம், திருமுல்லைவாயில்,
13. டரியல்பீட்டர் (கொலைக்குழு) திருமங்கலம், சென்னை,
14. செல்வி.சரோஜாதேவி, ஸ்ரீபெரும்புதூர்,
15. முனுசாமி (முன்னாள் எம்.எல்.சி., சென்னை),
16. தனு (விடுதலைப் புலி),
17. ஹரிபாபு (கொலைக் குழுவின் ஃபோட்டோ கிராபர், சென்னை)

இவர்களில் கொலைக் குழுவினரைத் தவிர மற்றவர்கள் உயிருடனோ, ஆவியாகவோ திரும்பி வந்தால், இந்த மூவரையும் மன்னித்து விடுவார்களா? அவர்களின் குடும்பங்கள்தான் மன்னிக்குமா?

மிகவும் பாராட்டப்பட்ட தீவிர புலனாய்வுக்குப் பின் 6 வருடங்கள் வழக்கு நடந்து, இரு தரப்பினருக்கும் அதன் பிறகே அனைத்து வாய்ப்புகளையும் வழங்கி, சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. அதை மறுபரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம், இந்த மூவருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. பிறகு கருணை மனு கவர்னரால் தகுந்த காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. மற்றொரு கருணை மனு ஜனாதிபதியால் தகுந்த காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. இவ்வளவு நடந்த பிறகும் ‘இவர்களுக்கு தூக்குத் தண்டனை கூடாது; காலம் கடந்து விட்டது. இதற்கு சட்டத்தில் இடம் இல்லை’ என்று கூறுவதை மனசாட்சி உள்ளவர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

எஸ்.புஷ்பவனம் (துக்ளக்.Saturday, October 1, 2011

Tuesday, September 27, 2011

வழக்கு விசாரணைக்கு என்னிடம் உரிய ஆவணங்கள் உள்ளன- சவேந்திரசில்வா!

Tuesday, September 27, 2011
தன் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு விசாரணையின் போது சமர்ப்பிப்பதற்கு தன்னிடம் உரிய ஆவணங்கள் உள்ளதாக சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க் நீதிமன்றத்தில் என்மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் பின்னணியாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரனே உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கொள்வனவு செய்தது தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கும் இருந்த தொடர்புகள் குறித்தான ஆவணங்கள் வெள்ளிமுள்ளிவாய்க்கால் பகுதியில் கிடைத்துள்ளது. விசாரணையின் போது இந்த ஆவணங்களை சமர்ப்பிக்கவுள்ளேன்.

இதேவேளை, தான் வீட்டில் இல்லாத நேரமே தனக்கு நீதிமன்ற அழைப்பாணை கிடைக்கப்பெற்றதாகவும் இது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தெரியப்படுத் தியுள்ள தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் அரசியல் பயங்கரவாதம் இன்னும் ஒழிக்கப்படவில்லை: புலிகளின் அரசியல் பயங்கரவாதம் இன்னும் முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை-குணதாச அமரசேகர!.

Tuesday, September 27, 2011
பிரபாகரனின் அரசியல் பயங்கரவாதம் இன்னும் ஒழிக்கப்படவில்லை. புலிகளின் அரசியல் பயங்கரவாதம் இன்னும் முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை. எனவே, தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் இராணுவத்தைப் பலப்படுத்த வேவண்டுமே தவிர, எக்காரணம் கொண்டும் குறைக்கக் கூடாது. குறிப்பாக, வடக்குகிழக்கிலுள்ள இராணுவ முகாம்களை இன்னும் பல ஆண்டுகளுக்கு உஷார்நிலையில் வைத்திருக்க வேண்டுமென்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

எனவே, சர்வதேசமோ தமிழ் அரசியல் கட்சிகளோ கூறுவது போன்று, இராணுவ முகாம்களை வடக்கு கிழக்கிலிருந்து அகற்றிவிட முடியாது. இவ்வாறு கூறுவது, மீண்டும் பயங்கரவாதிகளுக்கு இடமளிப்பதற்காகவே தவிர வேறு ஒன்றும் கிடையாது என்றும் இவ் இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர கூறுகையில், புலிகளின் ஆயுதப் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ள போதிலும் பிரபாகரனின் அரசியல் பயங்கரவாதம் இன்னும் ஒழிக்கப்படவில்லை. இதனை ஒழிப்பதாயின் பரந்தளவிலான நடவடிக்கைகள் அவசியம். இன்று உள்நாட்டில் மாத்திரமின்றி சர்வதேச அளவிலும் புலிகளின் அரசியல் பயங்கரவாதம் தீவிரமடைந்துள்ளது. இதனை முற்றாக ஒழித்துக்கட்டினால் மாத்திரமே புலிப் பயங்கரவாதம் முற்றாக அழிந்ததாக கருதமுடியும்.

இன்று இலங்கை முன் உள்ள சவாலும் அதுதான். புலிகள் சர்வதேச அளவிலும் உள்நாட்டு அரசியலிலும் தமிழீழத்தை நோக்கிய பயணத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதனை தோல்வியடையச் செய்யவேண்டும். இவ்வாறானதொரு சூழ்நிலையில் வடக்கு மற்றும் கிழக்கில் படையினரை வெளியேற்றுவது என்பது நாட்டிற்கு பாரிய அச்சுறுத்தலான விடயமாகும்.

புலிகளின் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நோநாக்கில் உள்நாட்டில் உலாவும் தமிழ் அரசியல் கட்சிகளின் தேவையற்ற பிரசாரங்களுக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.

Saturday, September 24, 2011

ஜெனிவாவில் பேரவையின் உறுப்பு நாடுகளின் தூதுவர்களுடன் சமரசிங்க தொடர்ந்து சந்திப்பு!

Saturday, September 24, 2011
ஜெனிவாவில் தங்கியுள்ள பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் தூதுவருமான மஹிந்த சமரசிங்க தொடர்ந்து மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளின் தூதுவர்களையும் நிரந்தர பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவருகின்றார்.

எதிர்வரும் 30 ஆம் திகதிவரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் அமைச்சர் சமரசிங்க அதுவரை ஜெனிவாவில் தங்கியிருந்து முக்கியஸ்தர்களுடனான சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.

கடந்த 12 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் கூட்டத் தொடரில் பங்கெடுத்த இலங்கைத் தூதுக்குழுவினர் கடந்த 16 ஆம் திகதி நாடு திரும்பியிருந்தனர். எனினும் மீண்டும் கடந்த 21 ஆம் திகதி புதன்கிழமை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனிவா பயணமானார்.

இந்நிலையில் ஜெனிவாவில் இருந்தவாறு கேசரிக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் சமரசிங்க எதிர்வரும் 30 ஆம் திகதிவரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. அதுவரை நான் ஜெனிவாவில் தங்கியிருந்து பல முக்கியஸ்தர்களுடன் சந்திப்புக்களை நடத்திவருகின்றேன்.

மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளின் தூதுவர்களையும் நிரந்தர பிரதிநிதிகளையும் அடிக்கடி சந்தித்து இலங்கையின் முன்னேற்ற நிலைமை தொடர்பில் தெளிவாக விளக்கி வருவதுடன் இலங்கை தொடர்பான போலிக் குற்றச்சாட்டுக்களுக்கும் பதிலளித்துவருகின்றேன் என்று கூறினார். _

சர்வதேசம் யுத்தக் குற்றச்சாட்டுகளை சோடிக்கிறது – ஜனாதிபதி!

Saturday, September 24, 2011
புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர், சர்வதேசம் இலங்கை மீது யுத்தக்குற்றச்சாட்டுகளை சோடித்துள்ளதாக ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 66 வருடாந்த மாநாட்டில் நேற்று உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பிலான முழுமையான விசாரணையை நடத்த, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை வலியுறுத்துகிறது.

இந்த நிலையில், இது தொடர்பில் தமக்கு ஆதரவாக இருக்கும்படி, ஜனாதிபதி சர்வதேசத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

30 ஆண்டுகளாக நிலவிய யுத்தம் நிறைவடைந்துள்ளது.

தற்போது இலங்iயில் அனைத்து பகுதிகளிலும் அனைத்து மக்களும் சமாதானமாக அச்சமின்றி வாழ்கின்றனர்.

புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், தற்போது ஐக்கியமானதும், வினைத்திறன் கூடியதுமான நாட்டை கட்டியெழுப்பு முயற்சிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்து 30 மாதங்கள் ஆகின்றன.

தற்போது 95 சதவீதமான இடம்பெயர்ந்த மக்கள் சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளனர்.

நாடு சிறந்த வாழ்க்கைச் சூழலை கொண்டுள்ளது.

இந்த நிலையில், வடக்கில் குறைந்த எண்ணிக்கையான இராணுவத் தரப்பினரே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எமது நண்பர்களான சர்வதேசம், எங்களை இறைமை மிக்க நாடாக செயற்பட ஒத்துழைக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

Wednesday, September 21, 2011

இருதரப்புப் பேச்சும் மூடுமந்திரமாக இருக்கக் கூடாது-தி. ஸ்ரீதரன் பொதுச் செயலாளர் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்.!

Wednesday, September 21, 2011
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கம் நடத்தும் பேச்சுவார்த்தையானது வெளிப்படையாக இருக்க வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு எதை முன்வைக்கிறது. அரசு என்ன சொல்கிறது என்பது மக்களுக்குத் தெரியப்படுத்துவதனூடாகவே இது பற்றிய விவாதங்கள்> கருத்துகள் மக்கள் மத்தியிலிருந்து வர முடியும். தமது தலைவிதியை மூடு மந்திரமாக யாரும் தீர்மானிப்பதை அவர்கள் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்களாக இருந்தாலும் ஜனநாயக சமூகங்களில் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு தெரிவிக்கிறார் ஈ.பி.ஆர். எல். எப். பத்மநாபா அணியின் பொதுச் செயலாளரான தி. ஸ்ரீதரன்

இது தொடர்பில் அவர் இன்று ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கை வருமாறு

கிறீஸ் பூத பீதி நிலை இன்னும் ஓய்ந்துவிடவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக பீதியூட்டம் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டவண்ணமே உள்ளன.இதைப்பற்றி தமிழ் முஸ்லீம் அரசியற்கட்சிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் பரவலாக குரலெழுப்பியும் இந்தப் பீதியூட்டும் சம்பவங்கள் தொடரத்தான் செய்கின்றன.

இதற்கிடையே அனுராதபுரத்தில் முஸ்லீம்களின் தர்கா மீது நடத்தப்பட்டத் தாக்குதல் மத நம்பிக்கைகள் மீதான அச்சுறுத்தல் என்பன தொடரச் செய்கின்றன.மிருகங்களை பலியிடுவது தொடர்பாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துவரும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய மூத்த அரசில் தலைவரான அலவி மௌலானவையே சினமூட்டியுள்ளது.

இத்தகைய குணங்குறிகள் இன முரண்பாடுகளை மோசமடையச் செய்து விரும்பத்தகாத நிகழ்வுகளை நோக்கி இட்டுச்செல்லலாம். இத்தகைய போக்குகள் முளையிலேயே கிள்ளியெறியப்படல் வேண்டும். இதற்கெதிராக அரசு இதயசுத்தியுடன் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இதற்கிடையே அரசும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளன. ஆனால் என்ன பேசப்படுகிறது என்பதை இரு தரப்பும் வெளிப்படுத்துவதாயில்லை. முன்னர் நடந்த பேச்சுவார்த்தைகளிலும் அவ்வாறுதான் மக்களுக்கு தெரியாத நிலை இருந்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எதை முன்வைக்கிறது, அரசு என்ன சொல்கிறது என்பது மக்களுக்குத் தெரியப்படுத்துவதனூடாகவே இது பற்றிய விவாதங்கள் கருத்துக்கள் மக்கள் மத்தியிலிருந்து வர முடியும்.தமது தலைவிதியை மூடு மந்திரமாக யாரும் தீர்மானிப்பதை அவர்கள் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்களாக இருந்தாலும் ஜனநாயக சமூகங்களில் ஏற்றுக்கொள்ள முடியாது.எனவே யோசனைகளை மக்களுக்குத் தெரியப்படுத்துவது தலைமைத்துவங்களின் கடமைப்பாடாகும்.
தி. ஸ்ரீதரன்
பொதுச் செயலாளர்
பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்.

ஜனாதிபதி மஹிந்த கிளின்டன் சந்தித்து பேச்சுவார்த்தை!

Wednesday, September 21, 2011
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனுக்கும் இடையில் நியூயோர்க்கில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது எவ்வாறான விடயங்கள் குறித்து பேசப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. மனித உரிமை மீறல், மீள் குடியேற்றம் மற்றும் நிலக்கண்ணி வெடி அகழ்வு போன்ற விடயங்கள் குறித்து பேசப்பட்டிருக்கலாம் என ஊடகங்கள் ஊகம் வெளியிட்டுள்ளன.

சர்வதேச ரீயான சவால்களை எதிர்நோக்குவதற்கு உலகத் தலைவர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் கிளின்டன் க்ளோபல் இனிடேடிவ் போரம் என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது.

இலங்கையில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட காலத்தில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளதுடன், அமைப்பின் கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tuesday, September 20, 2011

இலங்கை இந்திய கடற்படையினர் கூட்டுப் பயிற்சி திருமலையில் ஆரம்பம்!

Tuesday, September 20, 2011
பல பாதுகாப்பு பொறிமுறைகளை மையப்படுத்திய கூட்டுப் போர் பயிற்சிகளில் இலங்கை இந்திய கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். இப்பயிற்சிகள் தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறவுள்ளதுடன் இந்தியாவி ன் 6 போர்க் கப்பல்கள் இலங்கையின் கிழ க்கு கடற்பரப்பிற்கு வந்தடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

இலங்கை கடற்படைக்கு சொந்தமான அனைத்து தாக்குதல் படகுகள் போர்க் கப்பல்கள் மற்றும் விசேட ரோந்துப் படகுகள் மேற்படி கூட்டுப் பயிற்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்திய கடற்படையின் கிழக்கு கடல் பாதுகாப்பு மையத்தின் கட்டளை தளபதி ரியல் அட்மிரல் பிஸ்ட் மேற்படி கூட்டுப் பயிற்சிகளை வழி நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக கடற்படை பேச்சாளர் தொடர்ந்தும் கூறுகையில், இந்திய மற்றும் இலங்கை கடற்படையினர் நேற்று முதல் தொடர்ந்தும் ஐந்து நாட்களாக கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளனர். இப் பயிற்சிகள் திருகோணமலை கடற்பரப்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதற்கு முன்னரும் இந்திய கடற்படையுடன் இலங்கை கடற்படையினர் கூட்டு பயிற்சிகளில் ஈடுபட்ட போதிலும் தற்போது நடைபெறும் பயிற்சியானது சற்றுக் கடினமானதுடன் பரந்தளவிலானதாகும்.

ஆயுதம் மற்றும் இராணுவப் பயிற்சி, புலனாய்வு பயிற்சிகள் கூட்டு ரோந்து நடவடிக்கைகள், தாக்குதல் நடவடிக்கைகள், ஆழ்கடல் மற்றும் கடலடிப் பாதுகாப்பு பொறிமுறைகள் என்பன தொடர்பாக பாரிய பயிற்சிகள் நடைபெற உள்ளது. இக் கூட்டுப் பயிற்சிகளில் கலந்து கொள்ளும் இரு நாட்டின் வீரர்களின் எண்ணிக்கை குறித்து தற்போது கூற முடியாது எனக் கூறினார்.

நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று கிளின்டன் சூழலியல் மன்றத்தின் அமர்வில் கலந்துகொள்ளவுள்ளார்!

Tuesday, September 20, 2011
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக சென்ற ஜனாதிபதி நேற்று மாலை நிவ்யோர்க் நகரை அடைந்துள்ளார்.

இதன்போது, ஜனாதிபதி மற்றும் அவரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரை, ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி பாலித்த கொஹொன மற்றும் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் அமர்வின் பொது சபை அரச தலைவர்களின் உரைகள் எதிர்வரும் 22 ம் திகதி தொடக்கம் ஆரம்பமாகின்றன

நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று கிளின்டன் சூழலியல் மன்றத்தின் அமர்வில் கலந்துகொள்ளவுள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனால் உலகப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி, அதற்கான தீர்வுகளை வழங்குவதற்காக இந்த அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பல நாடுகளின் அரச தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 66 ஆவது பொதுச் சபை கூட்டத்தொடரில் பங்கேற்கும் பொருட்டு ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் நேற்றிரவு நியூயோர்க் சென்றிருந்தனர்.

நியூயோர்க்கை சென்றடைந்த ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவை, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித்த கோஹன உள்ளிட்ட குழுவினர் வரவேற்றுள்ளனர்.

தாரூஸ்மான் அறிக்கையை மனித உரிமைகள் கவுன்ஸிலில் சமர்ப்பிக்கக் கூடாது என ஒன்பது நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன!

Tuesday, September 20, 2011
நிகழ்ச்சி நிரலுக்குப் புறம்பாக தாரூஸ்மான் அறிக்கையை மனித உரிமைகள் கவுன்ஸிலில் சமர்ப்பிக்கக் கூடாது என ஒன்பது நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

ரஸ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட ஒன்பது நாடுகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

குறித்த அறிக்கை திடீரென மனித உரிமை கவுன்ஸிலில் முன்வைக்கப்பட்டமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறித்த நாடுகள் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மாலைதீவு, பங்களாதேஸ், அல்ஜீரியா, கியூபா, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும் தாரூஸ்மான் அறிக்கைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. எனினும், இந்த நடவடிக்கையில் இந்தியா இணைந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Friday, September 16, 2011

இலங்கைக்கு எதிரான எந்தவொரு பிரேரணையையும் தடுப்பதற்கு நடவடிக்கை!

Friday, September 16, 2011
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் எந்தவொரு பிரேரணையும் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிடுகின்றார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 18 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொண்டு இன்று மீண்டும் நாடு திரும்பிய சந்தர்ப்பத்திலேயே அமைச்சர் இந்தக் கருத்தினைக் கூறினார்.

மனித உரிமைகள் பேரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய 46 உறுப்பு நாடுகளின் ஆதரவை இலங்கைக்கு பெற்றுக்கொள்வதற்காகவும் இலங்கை பிரதிநிதிகள் குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவனீதம்பிள்ளையை தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நிபுணர் குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்கக் கூடாது என்பதே அநேகமானோரின் நிலைப்பாடு - மஹிந்த சமரசிங்க!

Friday, September 16, 2011
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கபட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டையே அநேகமான நாடுகள் கொண்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவிக்கின்றார்.

ஒருதலைப் பட்சமாக உறுதிசெய்யப்படாத தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை சர்வதேச சமூகத்திற்கு தெளிவுபடுத்தியதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொண்ட இலங்கைப் பிரதிநிதிகள் குழு இன்று காலை நாடு திரும்பிய பின்னர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இந்த கருத்தினைக் கூறினார்.

இந்த விடயம் குறித்து பிராந்திய அமைப்புக்களையும் தெளிவுபடுத்தியுள்ளதாக குறிப்பிட்ட மனித உரிமைகள் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர், மனித உரிமைகள் தொடர்பில் கேள்விகளையும், விளக்கங்களையும் சமரப்பிப்பதற்கான வாய்ப்பையும் அந்த அமைப்புக்களுக்கு வழங்கியிருப்பதாக சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று தரூஸ்மான் அறிக்கையை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் ஜெனீவாவிற்கு அனுப்பி வைத்த சந்தரப்பத்தில் அந்த அறிக்கையானது மனித உரிமைகள் பேரவையின் வேண்டுகோளுக்கு அமைவாக தயாரிக்கப்பட்ட ஒன்றல்ல என்பதை எடுத்துக் காட்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு ஆலேசனை வழங்குவதற்காக மாத்திரமே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதாகும் எனவும், இதனால் தவறான முன்மாதிரியை செயற்படுத்த வேண்டாமென மனித உரிமைகள் பேரவைக்கு தெளிவான தகவலொன்றை வழங்கியதாகவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உள்ள பெரும்பாலானோர் அந்த நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர் என்பதை தெளிவாக கூறமுடியும் என்றும் இன்னும் இரண்டு வாரங்களுக்கு மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் நடைபெறுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனவே அடுத்த வாரம் மீண்டும் தாம் ஜெனீவா செல்வதற்கு எண்ணியுள்ளதாகவும் அமைச்சர் சமரசிங்க மேலும் குறிப்பிட்டார்.

Thursday, September 15, 2011

ஐ.நா. அறிக்கைக்கு எதிர் நடவடிக்கை!

Thursday, September 15, 2011
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ள, இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் குழு அறிக்கைக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

இந்த அறிக்கையை எதிராக செயற்படுமாறு, பல்வேறு நாடுகள் இலங்கை அரசாங்கத்தினால் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது ஜெனீவாவில் தங்கியுள்ள அமைச்சர் மகிந்த சமரசிங்கவுடனான குழு, இது தொடர்பிலான பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, September 14, 2011

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர்:தருஸ்மன் அறிக்கையை விவாதத்துக்கு எடுக்க இலங்கை எதிர்ப்பு!

Wednesday, September 14, 2011
ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கூட்டத்தொடரில் சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்றும், இவ்வறிக்கை ஐக்கிய நாடுகளின் நடைமுறைத் தேவைக்கு ஏற்புடைய வகையில் உத்தியோகபூர்வ ஆவணம் அல்ல என்பதனால் அதனை அங்கு விவாதிக்க முடியாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் தனக்குத் தனிப்பட்ட முறையில் ஆலோசனை கூறுவதற்காக உத்தி யோகபற்றற்ற முறையில் நியமித்த குழுவினால் தயாரிக்கப்பட்டதே இந்த தருஸ்மன் அறிக்கை என்று சுட்டிக் காட்டியிருக்கும் பேராசிரியர் பீரிஸ், ஏதாவது ஒரு காரணத்துக்காக அந்தப் பேரவையில் தருஸ்மன் அறிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டால் எதிர்காலத்தில் ஏனைய நாடுகளையும் இந்த செயற்பாடு பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தருஸ்மன் அறிக்கையின் தற்போதைய நிலைப்பாடு பற்றி விளக்கமளித்த அமைச்சர் பீரிஸ், தானும் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் இதுபற்றிய சட்டபூர்வமான நிலையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவியான உருகுவேயைச் சேர்ந்த லோரா டியூபி லசரியிடம் எடுத்துரைத்திருக்கிறோம் என்று கூறினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கலந்துகொண்ட 29 நாடுகளின் பிரதிநிதிகளையும் அமைச்சர்கள் சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்து விளக்கமளித்துள்ளனர்.

சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கையின் பிரதியொன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவி நவநீதம் பிள்ளைக்கு அனுப்புவதற்கு ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அலுவலகம் தீர்மானித்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் சிலர் கூறினர் என்று குறிப்பிட்ட அமைச்சர் பீரிஸ், இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை தானும், அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் கடுமையாக வலியுறுத்திக் கூறியதாகவும் கூறினார்.

சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை தொடர்பில் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை, தனிப்பட்ட ரீதியில் சில ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகள் எதிர்கால ஐ.நா. செயற்பாடுகளையும், அதில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கும் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும் என்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறும் ஒழுக்கக் குறைபாடுகள் குறித்து தானும், அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, மைத்திரிபால சிறிசேன, அநுர பிரியதர்ஷன யாப்பா, பாராளுமன்ற உறுப்பினர் சஜின்.டி.வாஸ் குணவர்த்தன, ஐரோப்பிய ஒன்றியத்துக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி தமாரா குணநாயகம் உள்ளிட்ட குழுவினர் 10ற்கும் மேற்பட்ட பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவை மற்றும் நியூயோர்க்கில் நடைபெறவிருக்கும் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்திலும் சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை சமர்ப்பிக்கப்படவிருப்பதற்கு எதிராகப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படவு ள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Followers

Blog Archive