
எதிர்வரும் எட்டாம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட தினத்திலிருந்து இதுவரையில் தேர்தல் விதிமுறைகளை மீறிச்செயல்பட்டமை தொடர்பில் 94 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் 125பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 25 வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளன என்று தேர்தல் கடமைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்தார்.
தேர்தல் வன்முறைகள் தொடர்பில் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது:
50 பொலிஸ் நிலையங்களின் ஊடாகவே 94 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதில் பாரிய வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறைப்பாடுகளில் 57 தேர்தல் சட்டங்களை மீறி சுவரொட்டி ஒட்டப்பட்டவையாகும். ஏனையவை சாதாரண சிறு சிறு சம்பவங்களாகும்.
கடந்த கால தேர்தல் வன்முறைகளோடு ஒப்பிடுகையில் இம்முறை பாரிய அளவு அது குறைவடைந்துள்ளது. ஆனால் சில கட்சிகள் தமது அரசியல் நோக்கங்களுக்காக பாரிய தேர்தல் வன்முறைகள் இடம்பெறுவதாக கூறுகின்றன. அதில் எவ்வித உண்மைத் தன்மையும் கிடையாது.
சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலொன்றுக்கான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சகல கட்சிகளும் தத்தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதற்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கெதிராக நாம் சட்ட நடவடிக்கை எடுப்போம். எனவே சகல கட்சிகளும் எம்மோடு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment