
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கபட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டையே அநேகமான நாடுகள் கொண்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவிக்கின்றார்.
ஒருதலைப் பட்சமாக உறுதிசெய்யப்படாத தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை சர்வதேச சமூகத்திற்கு தெளிவுபடுத்தியதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொண்ட இலங்கைப் பிரதிநிதிகள் குழு இன்று காலை நாடு திரும்பிய பின்னர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இந்த கருத்தினைக் கூறினார்.
இந்த விடயம் குறித்து பிராந்திய அமைப்புக்களையும் தெளிவுபடுத்தியுள்ளதாக குறிப்பிட்ட மனித உரிமைகள் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர், மனித உரிமைகள் தொடர்பில் கேள்விகளையும், விளக்கங்களையும் சமரப்பிப்பதற்கான வாய்ப்பையும் அந்த அமைப்புக்களுக்கு வழங்கியிருப்பதாக சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று தரூஸ்மான் அறிக்கையை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் ஜெனீவாவிற்கு அனுப்பி வைத்த சந்தரப்பத்தில் அந்த அறிக்கையானது மனித உரிமைகள் பேரவையின் வேண்டுகோளுக்கு அமைவாக தயாரிக்கப்பட்ட ஒன்றல்ல என்பதை எடுத்துக் காட்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு ஆலேசனை வழங்குவதற்காக மாத்திரமே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதாகும் எனவும், இதனால் தவறான முன்மாதிரியை செயற்படுத்த வேண்டாமென மனித உரிமைகள் பேரவைக்கு தெளிவான தகவலொன்றை வழங்கியதாகவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உள்ள பெரும்பாலானோர் அந்த நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர் என்பதை தெளிவாக கூறமுடியும் என்றும் இன்னும் இரண்டு வாரங்களுக்கு மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் நடைபெறுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எனவே அடுத்த வாரம் மீண்டும் தாம் ஜெனீவா செல்வதற்கு எண்ணியுள்ளதாகவும் அமைச்சர் சமரசிங்க மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment