
இலங்கையின் பொருளாதாரம் சிறந்த வளர்ச்சியைக் காட்டுவதாகச் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் குறுங்காலப் பொருளாதார வளர்ச்சி என்பவற்றிற்கான அடிப்படைக் கட்டமைப்பு ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதாக அறிக்கையொன்றின் மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு அறிவித்துள்ளது.
தற்போதைய சாதகமான சூழல், எஞ்சியுள்ள பொருளாதாரச் சவால்களை முறியடிப்பதற்கும் தனியார் துறை வளர்ச்சிக்குமான உறுதியான அடித்தளத்தை உருவாக்கியுள்ளதாகச் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு குறிப்பிட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்குத் தொடர்ச்சியான மாற்றங்கள் முன்னெடுக்கப்படுவதுடன் அதிகளவிலான நேர்த்தியான சந்தை முதலீடுகள் மற்றும் முன்னேற்றகரமான வர்த்தகச் சூழல் என்பவற்றின் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் குறித்துத் திருப்தி வெளியிட்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு வரவு செலவு திட்டத்தின் துண்டுவிழும் தொகை மற்றும் பொதுக் கடன்களை உடனடியாகக் குறைக்கவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் நாட்டின் பாதுகாப்புத் தொடர்பான செலவீனத்தையும் குறைக்க வேண்டுமென நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
சமூகச் செலவீனம், மீள் கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்புக்கான முதலீடுகளுக்காக அரச வருமானத்தை அதிகரிக்கக்கூடிய நன்கு திட்டமிடப்பட்ட வரி முறைமையை அதிகாரிகள் சமர்ப்பிக்க முன்வர வேண்டுமென்றும் நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு குறிப்பிட்டுள்ளது.
சாதகமான பொருளாதார மறுசீரமைப்பு கட்டமைப்புகளை அறிமுகப்படுத்துவதற்கான முக்கிய திறவுகோலாக இலங்கையின் 2011 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்டம் அமையுமென நம்புவதாகச் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றும் குழு மேலும்தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment