
யாழ்க்குடாநாட்டிலும் சரி வடக்கிலும் சரி அரச அதிகாரிகள் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு போதிய ஒத்துழைப்புகளை வழங்காது வெறுமனே கண்காட்சிகளை நடத்திக் கொண்டிருப்பதாகவும் விளம்பரத்தைத் தேடிக் கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ குற்றம் சாட்டியுள்ளார். வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக இன்று வவுனியா ஜோசப் முகாமில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இந்தக் கடுமையான சீற்றத்தை வெளியிட்டிருந்தார். அண்மையில் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் வசாவிளான் மத்திய மகாவித்தியாலயம் திறக்கப்பட்டிருந்தது. பெரும் சர்ச்சைகள் மத்தியில் இரண்டே இரண்டு வகுப்புகள் மாத்திரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய வகுப்புகள் உரும்பிராயிலுள்ள தற்காலிக தனியார் காணியிலேயே இயங்கி வருகின்றன.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட கல்வி அமைச்சின் அதிகாரிகளிடம் வசாவிளான் மத்திய மகாவித்தியாலயத்தின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது இந்தப் பாடசாலைகள் திறக்கப்பட்டு தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருப்பதாக கூறப்பட்டது. அவ்வேளையில் சில புகைப்படங்களை காண்பித்த ஜனாதிபதி குறித்த பாடசாலை முழுமையாக திருத்தப்படவோ அல்லது சீர் செய்யப்படவோ இல்லையெனவும் விளம்பரங்களை தேடும் வகையில் நீங்கள் விழாக்களை மட்டும் நடத்திக் கொண்டிருப்பதாக தனக்கு முறைப்பாடுகள் வந்து கொண்ட வண்ணம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தத் திறப்பு விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் சந்திரசிறியும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். எனினும் இந்த நிகழ்வில் கத்துரசிங்க போதிய ஒத்துழைப்பு வழங்காத நிலையில் ஜனாதிபதியின் இந்தக் குற்றச்hட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக அரச அதிகாரிகள் தொடர்பாக தனக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வடக்கில் தனக்கு போதிய ஒத்துழைப்புக்கள் கிடைக்கப் பெறுவதில்லை எனவும் ஜனாதிபதி தனது சீற்றத்தை வெளியிட்டிருந்தார்.
No comments:
Post a Comment