Thursday, October 21, 2010

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஐநாவுக்கு.

Thursday, October 21, 2010
ஜனாதிபதி நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இன்னும் ஓரிரு தினங்களில் ஐக்கிய நாடுகள் சபைக்கு சமர்பிக்கப்படுமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழு நாளை அல்லது நாளை மறுதினங்களில் தமது அறிக்கையை சமர்பிக்குமெனவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள படங்களை நாங்கள் முற்றாக மறுக்கின்றோம். செனல் 4 காட்சிகள் தொடர்பான பொய்த் தன்மையை ஏற்கனவே நாங்கள் உலக அளவில் தொழிநுட்பத்தில் பிரசித்திப் பெற்றவர்களை வைத்து நிரூபித்துக் காட்டினோம். அவர்களுக்கு சவாலும் விடுத்தோம். ஆனால் அவர்கள் இதுவரை அந்தச் சவாலை பொறுப்பேற்கவில்லை.

அதனால் அது தொடர்பில் நான் அதிகம் கதைக்க விரும்பவில்லை. சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவற்றின் இலங்கைத் தொடர்பான தீய நோக்கங்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளன. இலங்கையை அவர்களுடைய கை பொம்மைகளாக மாற்ற எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்ததன் காரணமாக இவ்வாறான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுகின்றனர். எனக் கூறினார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive