
கோவை: காமன்வெல்த் போட்டிகள் நிறைவு விழாவிற்கு, ராஜபக்ஷே வருவதைக் கண்டித்து, கோவையில் ராஜபக்ஷேயின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன; வைகோ, அர்ஜுன் சம்பத் உட்பட, ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டனர். டில்லியில், காமன்வெல்த் போட்டிகளின் நிறைவு விழாவின் சிறப்பு விருந்தினராக இலங்கை அதிபர் ராஜபக்ஷேயை அழைத்திருப்பதைக் கண்டித்து, ம.தி.மு.க., சார்பில், கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன், நேற்று காலையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக, நேற்று காலையில் 100க்கும் மேற்பட்டவர்கள், கறுப்புக் கொடிகளுடன் அங்கு கூடியிருந்தனர். காலை 10.45 மணி வரையிலும் ஆர்ப்பாட்டம் துவங்கவில்லை. 11.00 மணியளவில், "பொதுச் செயலர் வர்றாராம்' என்ற தகவல், அங்கிருந்த தொண்டர்கள் மத்தியில் பரவியது. இதைக் கேட்டு தொண்டர்கள் உற்சாகமடைய, போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். சிறிது நேரத்தில், வைகோ அங்கு வந்து சேர்ந்தார். உடல்நலக்குறைவுடன் காணப்பட்ட அவரை, திரும்பிச் செல்லுமாறு முக்கிய நிர்வாகிகள் வலியுறுத்தினர். அதை மறுத்த வைகோ, ஆர்ப்பாட்டத்தில் தானே பேசுவதாகக்கூறினார். அவருடன் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத்தும் வந்திருந்தார். அதுவரையிலும், "மைக்'கிற்குக் கூட ஏற்பாடு செய்யாமலிருந்த நிர்வாகிகள், அவசர அவசரமாக "மைக்' ஏற்பாடு செய்தனர். வைகோ வந்ததும், அவரை வாழ்த்தி, தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர். உடனே வைகோ குறுக்கிட்டு, "ராஜபக்ஷே ஒழிக' என்று கோஷம் எழுப்புமாறு கூறினார். உணர்ச்சிப்பூர்வமாக அர்ஜுன் சம்பத் கோஷங்களை எழுப்ப, அவரைத் தொடர்ந்து வைகோவும் கோஷம் எழுப்பினார்; இதனால், தொண்டர்கள் மிகவும் உற்சாகத்தோடு பதில் கோஷம் எழுப்பினர். ராஜபக்ஷே, சோனியா மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதன்பின், வைகோ பேச ஆரம்பித்தார். அவர் பேசி முடிப்பதற்குள் ராஜபக்ஷே கொடும்பாவியை சில தொண்டர்கள் கொண்டு வந்து ரோட்டில் போட்டு எரிக்க முயன்றனர். பாதி எரிவதற்குள் சுதாரித்துக் கொண்ட போலீசார், அரைகுறையாக அதைப் பறித்துச் சென்றனர். அதன்பின், தொண்டர்கள் கொண்டு வந்த இரண்டு உருவ பொம்மைகளையும் போலீசார் பறித்து விட்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும், வைகோ, அர்ஜுன் சம்பத் மற்றும் மூன்று பெண்கள் உட்பட, 146 பேரை போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றிச் சென்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள பெரியார் திராவிடர் கழகம் அலுவலகம் முன், ராஜபக்ஷே கொடும்பாவி எரிக்கப்போவதாக வந்த தகவலால் போலீசார் அங்கு விரைந்தனர். போலீசார் வந்தபின், நிதானமாக வெளியில் வந்த தொண்டர்கள், போலீசாருக்கு முன்பாகவே கோஷங்களை எழுப்பி, இலங்கைக் கொடிகளை கிழித்து எறிந்தனர். ராஜபக்ஷேயின் படத்தைச் செருப்பால் அடித்துக் கிழித்தனர். அங்கிருந்த 14 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். அந்த வாகனம் கிளம்புவதற்குள், காந்திபுரம் சிக்னல் பகுதியிலிருந்த போலீசார் சத்தம் போட்டு, இங்கிருந்த போலீசாரைக் கூப்பிட, தலை தெறிக்க அங்கு ஓடினர். அங்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் சுசி கலையரசன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர், ராஜபக்ஷே உருவபொம்மையை எரிக்க முயன்றனர். போலீசார் பெரும் போராட்டம் நடத்தி, அவர்களிடம் இருந்த உருவபொம்மையை சல்லி சல்லியாகப் பிரித்துப் பறித்தனர். கோஷம் எழுப்பிய அவர்களையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.
அந்த வாகனம் கிளம்புவதற்குள், அதே கட்சியின் தொண்டர்கள் ஐந்து பேர், சிக்னலுக்கு சற்று தொலைவில் சத்தி ரோட்டில் ராஜபக்ஷே உருவ பொம்மையைப் போட்டு எரித்தனர். போலீசார் செல்வதற்குள் அது பெருமளவு எரிந்து முடிந்தது. ஒரு குடம் தண்ணீரை ஊற்றி போலீசார் அணைத்து விட்டு, மீதமிருந்த சிறு பகுதியை போலீஸ் ஜீப்பில் பத்திரமாகக்கொண்டு சென்றனர். இந்த அமைப்பைச் சேர்ந்த 24 பேர் கைது செய்யப்பட்டனர். அடுத்தடுத்து நடந்த இச்சம்பவங்களால் போலீசார் அங்குமிங்குமாக அலைக்கழிக்கப்பட்டனர். உருவ பொம்மை எரிக்க முயன்ற இளைஞர்கள் படுவேகமாக ஓட, கனத்த சரீரத்தைத் தூக்கிக் கொண்டு ஓட முடியாமல் உள்ளூர் போலீசார் திணறினர். தமிழ்நாடு சிறப்புக் காவல் படை போலீசார் இருந்தும், இரண்டு உருவபொம்மைகளை எரித்து விட்டனர். போலீசார் அங்குமிங்குமாக ஓடுவதையும், உருவபொம்மையை பறிப்பதற்குப் போராட்டம் நடத்தியதையும் அவ்வழியாக பஸ்களில் சென்ற ஏராளமான மக்கள் வேடிக்கை பார்த்தனர். போலீசாரின் தொப்பையைக் குறைக்க, போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு நடத்தி வரும் பயிற்சிகளை விட, போராட்டக்காரர்களால் போலீசாருக்கு நடந்த ஒரு மணி நேர, "பரேடு' மிகவும் சுறுசுறுப்பாகவும், சுவராஸ்யமாகவும் இருந்தது.
No comments:
Post a Comment