Wednesday, January 12, 2011

நாடு கடந்த தமிழீழ அரசு என்பது ஒரு கோமாளித்தனமே; புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு துன்பம் தரக் கூடாது-வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்!

Wednesday, January 12, 2011
நாடு கடந்த தமிழீழ அரசு என்பது ஒரு கோமாளித்தனமே; புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு துன்பம் தரக் கூடாது!

நாடு கடந்த தமிழீழ அரசு என்பது ஒரு கோமாளித்தனமானது. இதனைத் தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். பணத்துக்காகவும் பதவிக்காகவும் வர்த்தக நோக்கங்களுக்குமாகவே இந்தத் தமிழீழ அரசு செயற்படுகிறது.

கடந்த 30 வருடங்களாக புலிகள் பண பலத்தையும் ஆயுத பலத்தையும் வைத்துப் போராடித் தோற்றுப் போன நிலையில் இந்த நாடு கடந்த தமிழீழ அரசினால் எதனைத்தான் சாதிக்க முடியுமெனக் கேள்வி எழுப்புகிறார்.

வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சரும் பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் தலைவருமான வரதராஜப் பெருமாள். இன்றைய அரசியல் நிலை தொடர்பில் எமது இணையத்தளத்துடன் இன்று கருத்துப் பரிமாற்றம் செய்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது,

தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் இன்று அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதனை நாம் வரவேற்கிறோம். ஆனால், ஏனைய தமிழ்க் கட்சிகளுடனும் பேசினால் நன்றாகவிருக்கும்.


அதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மட்டும் பேசக் கூடாது என்பதல்ல கருத்து. யார் குற்றினாலும் அரிசியானால் சரியே. இன்றைய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணுமா என்று நாம் கேட்டபோது, அரசியலில் சாத்திரம் சொல்வது சரியல்ல.. என்று பதிலளித்தார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழான மாகாண சபைகள் ஊடான ஆட்சி முறை தமிழ் மக்களின் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வாக அமையுமா என்று நாம் கேட்போது, இல்லை எனப் பதிலளித்த அவர், நிறைந்த அதிகாரத்தைக் கொண்ட மாநில சுயாட்சி அமைப்பே இங்கு உருவாக்கப்பட வேண்டும் எனப் பதிலளித்தார்.

மாகாண சபை மூலமான அதிகாரப் பகிர்வு போதாது என்பது கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டில் செயற்படும் மாகாண சபைகளின் செயற்பாடுகள் மூலம் உணர்த்தப்பட்டுள்ளது. தமிழர்கள் மட்டுமல்ல.

சிங்களவர்களும் இதனையே இன்று தெரிவிக்கின்றனர். ஆகவே, தமிழ் மக்களுக்கான தீர்வாக மட்டுமல்லாது சிங்கள மக்களின் பிரச்சினைக்குத் தீர்வாகவும் நிறைந்த அதிகாரத்தைக் கொண்ட மாநில சுயாட்சி அமைப்பே இலங்கைக்கு இன்று தேவை. என்றார்.

புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்பில் நாம் எழுப்பிய வினாவுக்குப் பதிலளித்த வரதராஜப்பெருமாள், அவர்கள் இலங்கையில் வாழும் தமிழர்களுக்குத் துன்பம் தரக் கூடியவர்களாகச் செயற்படக் கூடாது.

இங்கு வாழும் தமிழ் மக்களுக்குப் பலமானவர்களாகவும் வளம் சேர்ப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்றார். புலம்பெயர் தமிழர்களில் பெரும்பாலானோர் இலங்கை அரசுக்கு எதிராகச் செயற்படுகிறார்களே எனக் கேட்டபோது பதலளித்த அவர், அது அவர்களின் ஜனநாயக உரிமையல்லவா? எனப் பதிலளித்தார்.

இலங்கையில் எத்தனையோ கட்சிகள் அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படுகின்றனவே எனக் கூறினார். ஆனால், நாடு கடந்த தமிழீழ அரசு என்பது ஒரு கோமாளித்தனமானது.

இதனைத் தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். பணத்துக்காகவும் பதவிக்காகவும் வர்த்தக நோக்கத்துக்குமாகவே இந்தத் தமிழீழ அரசு செயற்படுகிறது எனவும் குற்றஞ்சாட்டினார்

இலங்கை விமானப்படையின் காற்றாடி விமானங்கள்(Helicopters) அனர்த்த நிவாரனப்பணிகளில்.

Wednesday, January 12, 2011
இலங்கை விமானப்படையின் 'பெல்212' காற்றாடி விமானம் மூலம் மட்டக்களப்பில்
வெள்ளத்தினால் சிக்குண்ட 54 நபர்கள் காப்பாற்றப்பட்டனர் இவர்களில் 32 நபர்கள் தம்பிடிய பிரதேசத்தையும்,ஏனையோர் போகம்யாய, ரம்புக்கன் ஒய,வாழைச்சேனை போன்ற
பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.

அதேநேரம் விமானப்படையின்' எம்.ஐ.17' எனும் காற்றாடி விமானம் மூலம் தொப்பிகல பிரதேசத்திற்கு இன்று காலை ஒரு தொகை உலர் உணவுப்பொருட்கள் எடுத்துச்செல்லப்பட்டதுடன்,மேலும் 'பெல் 212' காற்றாடி விமானம் மூலம் கற்பினித்தாயொறுவர் வாழச்சேனையில் இருந்து பொலந்நறுவைவைத்தியச்சாலைக்கு
அழைத்துச்செல்லப்பட்டார் என்பதும் விஷேட அம்சமாகும்.இப்பணியானது நேற்று மதியம்
தொடக்கம் இன்று காலை வரை மேற்கொள்ளப்பட்டதுடன், மேலும் பல நிவாரணப்பணிகளை
மேற்கொள்ள விமானப்படையானது தயார்நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க
விடயமாகும்.

Sunday, January 9, 2011

மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையைச் சிதைக்க சர்வதேசம் பகீரதபிரயத்தனம்.

Sunday, January 9, 2011
தம்மீது மக்கள் வைத் துள்ள நம்பிக்கையை சிதைப்பதற்கு சர்வதேசம் பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாட்டை அபிவி ருத்தியில் கட்டியெ ழுப்பும் நடவடிக்கைகளை சீர்குலைக்க முயற்சிப் பவர்கள் தம்மை ஓர் ஏகாதிபத்தியவாதியாக வெளிநாடுகளுக்குக் காட்ட விளைகின்றனர் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மக்களுக்கு அர்ப்பணிப்புள்ள சேவைகளை வழங்கியமைக்காக 17 பிரதேச செயலகங்கள் மற்றும் மூன்று மாவட்டச் செயலகங்களுக்கு சர்வதேச தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது. சம்பந் தப்பட்ட பிரதேச மாவட்டச் செயலா ளர்களை கெளரவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் அலரி மாளிகையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற் றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். சிரேஷ்ட அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கை யில் :-

தற்போது நாட்டில் பலமுள்ள அரசாங்கம் உள்ளது. தேர்தலில் எனக்கெதிராக வாக்களித்தவர்களும் எமது செயற்பாடுகளைக் களைந்து எம்முடன் இணைந்து செயற்படுகின்றனர். என் மீது முழுமையான நம்பிக்கையை வைத்துள்ளனர்.

இந்த நம்பிக்கையை சீர்குலைப்பதற்கு சர்வதேச சமூகம் பகீரத பிரயத்தனம் செய்கிறது. விக்கிலீக்ஸ் போன்றவற்றினை உபயோகப்படுத்தி இச்சதி முயற்சிகள் நடைபெறுகின்றன. இதற்குச் சில சக்திகள் துணை போகின்றன.

நாம் நாட்டின் பொருளாதாரத்தைச் சிறந்த முறையில் கட்டியெழுப்பி வருகிறோம். ஜீ. எஸ். பி. வரிச் சலுகை கிடைக்காவிட்டாலும் ஆடைத் தொழில் துறை பெரும் வருமானம் ஈட்டி வருகிறது. மேலும் தொழிற்சாலைகள் தேவைப்படு கின்றன.

ஜீ. எஸ். பி. சலுகைக்கு எதிராக செயற்படுபவர்கள் நாட்டின் பொருளாதாரத்தின் மீதும் மக்களின் முன்னேற்றத்தின் மீதும் சம்மட்டியால் அறைகிறார்கள் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்:சிறுபான்மைக் கட்சிகள் தீவிரம்; அரசுடன் இணைவதில் ஆர்வம்.

Sunday, January 9, 2011
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்களைத் தேடிப் பிடிப்பதில் சிறுபான்மைக் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

பிரதான கட்சிகள் வேட்பாளர்களுக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ள நிலையில் சிறிய கட்சிகள் கிராமங்களிலும், நகரங்களிலும் செல்வாக்குள்ளவர்களை நோக்கி வலைவிரித்துள்ளன. இதில் சிறுபான்மைத் தமிழ் கட்சிகள் தமது கொள்கைக்குச் சாதகமானவர்களைத் தேடி வருகின்றனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈ.பி.டி.பி. ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட கட்சிகள் பெரிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதா அல்லது தனித்துக் களமிறங்குவதா என்பதைப் பற்றி இன்னமும் முடிவெடுக்காமல் இழுபறி நிலையில் உள்ளன.

தமிழ்க் கட்சிகள் ஓரணியாக இணைந்து போட்டியிடுவதற்காக மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது.

இதனால், தமிழ்க் கட்சிகள் தனித்துக் களமிறங்குவதற்காக வேட்பாளர்களைத் தெரிவுசெய்யும் பொருட்டு கூட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில் ஆளுந் தரப்புடன் இணைந்து போட்டி யிடுவதற்கும் பெரும்பாலான கட்சிகள் ஆர்வமாக உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

ஜனாதிபதி, பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை, மாகாண சபை நிர்வாகம் இவை அனைத்து விடயங்களையும் சிந்தித்து சில தமிழ்க் கட்சிகள் அரசாங்கக் கட்சியுடன் இணைந்து போட்டியிடு வதெனத் தீர்மானித்துள்ளன.

சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் கொழும்பில் ஒன்று கூடல்.

Sunday, January 9, 2011
சர்வதேச தமிழ் எழுத்தாளர்களின் மாநாடு கொழும்பில் கடந்த வியாழன் முதல் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இலங்கையில் முதன்முதலாக நடைபெறும் இம்மாநாட்டின் நிகழ்வுகள் அனைத்தும் மிகவும் கோலாகலமாக கண்கவரும் வண்ணமும், ஆழமான தமிழாற்றல் கொண்டதாகவும் அமைந்துள்ளன.

இம்மாநாட்டில் உலக நாடுகள் பலவற்றிலுமிருந்தும் புகழ்பெற்ற தமிழ் இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் எனப் பலரும் கலந்து நம்நாட்டு ஆர்வலர்களுடன் ஒன்றிணைந்துள்ளமை எம்மவரை நிச்சயம் உற்சாகமூட்டும் என்பதில் ஐயமில்லை.

இயந்திரமயமாகிவரும் உலகில் இலக்கியத்திற்கும் இடமளித்து அதனை எழுத்து வடிவில் எதிர்காலச் சந்ததியினருக்காகப் பாதுகாத்து ஆவணப்படுத்த உதவி புரியும் இந்த மாநாட்டுக் குழுவினர் பாராட்டப்பட வேண்டியவர்கள். இலங்கையில் இம்மாநாட்டினை நடத்த அவர்கள் தீர்மானித்தமை எமக்குப் பெருமையளிக்கிறது.

மூன்று தசாப்த காலமாக இலங்கையில் இடம்பெற்று வந்த யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இத்தகைய முக்கியமான மாநாடு இங்கு நடைபெறுவது பாதிக்கப்பட்டிருந்த தமிழ்பேசும் சமூகத்திற்குப் பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது என்றால் அது உண்மை.

அதிலும் இதுபோன்ற மாநாடுகள் யாழ்ப்பாணத்தில் அல்லது கிளிநொச்சியில் நடைபெற்றால் அந்தப் பலன் தமிழ் மக்களை முழுமையாகச் சென்றடையும். யுத்த வடுக்கள் தற்போதுதான் அப்பகுதிகளில் ஆற்றுப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே எதிர்காலத்தில் இந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு இடம்பெறும்போது அது நிச்சயம் கிளிநொச்சியில் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது கருத்தாகும்.

இத்தகைய சிறந்த மாநாடுகள் எங்கு நடந்தாலும் அவற்றில் எடுக்கப்படும் தீர்மானங்கள் உரியவாறு நிறைவேற்றப்பட வேண்டும். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தில் உதித்த செம்மொழிகளில் ஒன்றான எமது தாய்மொழியாம் தமிழ் மொழியை வளர்க்கும் எவரையும் நாம் எங்கிருந்தாலும் உற்சாகப்படுத்த வேண்டும். நாமும் எமது பங்களிப்பை நல்கி அவர்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும். வாழ்க தமிழ், வளர்க தமிழ்.

Tuesday, December 28, 2010

235 பிக்பொக்கட் திருடர்கள் பொலிஸாரால் மடக்கிப்பிடிப்பு சார்க் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றவர் உட்பட முக்கிய கேடிகள் கைது!

Tuesday, December 28, 2010
பண்டிகைக் காலத்தில் திருடர்களின் கைவரிசையும் அதிகரித்துள்ளது. இக்காலப் பகுதியில் 235 ‘பிக்பொக்கட்’ திருடர்கள் கொழும்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்திருட்டுச் சம்பவங்களை வழிநடத்தும் 6 பேரும், திருட்டில் ஈடுபடும் 229 பேரும் கொழும்பு குற்றப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டிகைக் காலத்தில் இவ்வாறு பெருந்தொகையான ‘பிக்பொக்கட்’ திருடர்கள் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதற்தடவையெனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சார்க் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற ஒருவரும் உள்ளடங்குவதாகவும், ஹெரோயின் போதைவஸ்துக்கு அடிமையான அவர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக கொழும்பு குற்றப் பிரிவுப் பொலிஸார் கூறுகின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 20 நாடோடி (ஜிப்சீஸ்) ஆண், பெண்களும் ‘உள்ளடங்குகின்றனர். இவர்கள் தமது பிள்ளைகளையும் திருட்டுச் சம்பவங்களுக்குப் பழக்கியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

‘பிக்பொக்கட்’ திருடர்களை அவர்களின் உடைநடை, பாவனைகளைக் கொண்டு அடையாளம் காணமுடியாது. மக்களுடன் மக்களாக இணைந்து சென்றே திருட்டுக்களில் ஈடுபடுகின்றனர். சில தனியார் பஸ் நடத்துனர்களும் இவ்வாறான திருட்டுகளுக்கு உதவுகின்றனர். இதில் அவர்களுக்கும் பங்குகள் வழங்கப்படுவதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருட்டுக் கும்பல்களின் தலைவர்களான வையா, சுதா, கிரா, மெகா, சாமீ, யுந்தா ஆகியோரே டிசம்பர் 3ம் திகதி முதல் நடத்தப்பட்ட விசேட தேடுதல்களில் பொலிஸா¡ல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய அவர்களின் பணிப்புரைக்கமைய இத்தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.

Thursday, December 23, 2010

53 வது பிறந்த நாள் நினைவு தினம் அமரர் றொபேட் தம்பிராசா சுபத்திரன் மத்திய குழு உறுப்பினர்- பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எப்.முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினர்

Thursday, December 24, 2010
அமரர் தோழர் றொபேட்
தம்பிராசா சுபத்திரன்
(ஈ.பிஆர்.எல்.எவ் மத்திய குழு உறுப்பினர்
முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினர்)

தேச விடுதலையை நேசித்து

மானிட தர்மத்தை மதித்து நின்றதால்
ஏக பிரதிநிதித்துவத்தின் எதிரியானாய் -

இடர்களின் நடுவேயும்
தஞ்சமென மண்டியிடாது

தலைநிமிர்ந்து நின்று வீர காவியமானாய்
காற்றில் கலந்த போதும்

சாய்ந்துவிட்ட வல்லாதிக்கம் - உன்
கருத்தின் வலிமையை பறைசாற்றி நிற்கின்றது.
இனி நிமிர்ந்தெழும்

நீ உயர்த்திப் பிடித்த மானிட தர்மம்.

கண்டி இந்திய துணை தூதரக அலுவல்களை இலகுபடுத்த நடவடிக்கை.

Thursday, December 23, 2010
கண்டியிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் பணிகளை இலகுவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோபியோ’ (வெளிநாடு வாழ் இந்திய வம்சாவளியினருக் கான அமைப்பு) பிரதிநிதிகள் குழு இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தாவுடன் கொழும்பில் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கண்டி துணைத் தூதரகத்திற்கு அலுவல்களுக்காகச் செல்லும் பொது மக்கள் பெரும் அசெளகரியத்திற்கு உள்ளாகுவதாக ‘கோபியோ’ பிரதிநிதிகள் இந்திய உயர்ஸ்தானிகரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.

இதனையடுத்து துணைத் தூதரகத்தின் செயல்பாடுகளை வினைதிறன்மிக்கதாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் உறுதியளித்ததாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் ‘தினகரனு’க்குத் தெரிவித்தார். வீசா பெற்றுக்கொள்ள முடியாமலும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் சந்தர்ப்பங்களிலும் நெருக்கடிகளை எதிர்நோக்குவோரின் பிரச்சினையை ‘கோபியோ’ அமைப்பின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம் காணப்பட்டு ள்ளது.

வீசாவைப் பெறுவதற்கான நியாயமாக காரணம் உள்ளதாக ‘கோபியோ’ பரிந்துரைக்கும் பட்சத்தில் அதனைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

Friday, December 17, 2010

அரச அதிகாரிகளின் தீர்மானங்களில் அரசாங்கம் பக்கபலமாக இருக்கும்-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

Friday, December 17, 2010
அரச அதிகாரிகள் மேற்கொள்ளும் நியாயமான தீர்மானங்களில் அரசாங்கம் எப்போதும் பக்க பலமாக இருக்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்றைய தினம் அரச நிர்வாக அதிகாரிகளின் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, சரியோ பிழையோ நியாயபூர்வமாக அதிகாரிகள் எடுக்கும் முடிவுகளின் பின்புலத்தில் முழு அரசாங்கமும் துணை நிற்கும் எனவும் தெரிவித்தார்.

“மக்கள் சேவை மகேசன் சேவை” என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி; வரலாற்றில் பதிவு செய்யப்படும் வகையில் அர்ப்பணிப்புள்ள சேவையை அரச அதிகாரிகள் வழங்க வேண்டும் எனவும் அதுவே நாட்டுக்கும் மக்களுக்குமான சேவையாகும் எனவும் தெரிவித்தார்.
அரச நிர்வாக சேவைக்கு புதிதாக 135 உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு நேற்று அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில், புதிய நிர்வாக சேவை அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களைக் கையளித்து உரை நிகழ்த்திய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் உயர் பதவிகளுக்குச் செல்வதற்கான முதற்படியாக நிர்வாக சேவை உத்தியோகத்தர் பதவி அமைகிறது.

புதிதாக நியமனம் பெறுவோர் பருத்தித்துறையிலிருந்து தேவேந்திர முனைவரை சுதந்திரமாக சென்று பணிபுரியும் வகையில் நாட்டில் சிறந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

இனம், மதம் என்ற பேதங்களைக் கடந்து நாட்டின் சகல மக்களுக்கும் அர்ப்பணிப்புள்ள சேவையை வழங்குவது புதிய உத்தியோகத்தர்களின் பொறுப்பாகும்.

பல்வேறு பிரச்சினைகளுடன் கண்ணீரோடு வரும் மக்களை மகிழ்ச்சியோடு செல்லும் வகையில் உங்கள் சேவை அமைய வேண்டும். எனது தந்தையார் அரசியலில் இருந்த காலத்தில் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. அரசியல் தலைவர்கள், அரச உயரதிகாரிகள் மக்களை தமது காரில் ஏற்றிச் சென்று சம்பந்தப்பட்டோரை நேரில் பார்த்து உடனடியாகவே பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக் கொடுத்தனர்.
அன்றைய அதிகாரிகள், தலைவர்கள் மக்களுக்கு நெருக்கமாக இருந்து செயற்பட்டனர். மக்கள் சேவைக்கு இது மிக முக்கியமாகும். நீங்களும் மக்களை நெருங்கி அவர்களின் பிரச்சினைகளுக்குக் காலங்கடத்தாமல் தீர்வு பெற்றுக் கொடுப்பது அவசியம். மக்கள் மனதில் பதியக்கூடிய வகையில் உங்கள் சேவை அமைய வேண்டும்.

ஒரு கணிப்பீட்டின் படி 7 மணியும் 45 நிமிடங்களையும் கொண்ட நாளொன்றுக்கான சேவை நேரத்தில் 3 மணி 20 நிமிட சேவைதான் அரச அலுவலகங்களில் இப்போது நடைபெறுகிறது. இது நியாயமானதா என்பதை அரச உத்தியோகத்தர்களே மனதில் கையை வைத்துச் சொல்லட்டும்.

24 மணி நேரமும் மக்கள் சேவையில் தம்மைப் பிணைத்துக் கொண்டு உழைத்த பல அதிகாரிகளையும் இங்கு குறிப்பிட முடியும். சுனாமி வேளையில் மாத்தறை பகுதியில் ‘சோர்ட்ஸ்’ அணிந்து கொண்டு அரச அதிபர்கள் நேர காலம் பாராது நள்ளிரவிலும் செயற்பட்டதை குறிப்பிட விரும்புகிறேன்.

நீங்களும் வரலாற்றுப் பதிவுகளில் இடம் பிடிக்கும் வகையில் சேவை செய்ய வேண்டும். நீங்கள் ஓய்வுபெற்ற பின்னரும் உங்கள் பெயர் மக்கள் மத்தியில் பேசப்பட வேண்டும்.

மக்களுக்காக நீங்கள் எடுக்கும் நியாயமான தீர்மானங்களுக்கு முழு அரசாங்கமும் பக்க பலமாக இருக்கும். உங்களைப் பாதுகாப்பதில் நாம் கடமைப்பட்டுள்ளோம். நாட்டுக்கு உங்களால் கிடைக்க வேண்டிய சேவையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.

தேசிய உணர்வு, கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும், தேசிய கீதத்துக்கு கெளரவமளிக்கும் வகையில் செயற்பட வேண்டும். அதற்கு மதிப்பளிக்கத் தெரியாத ஒரு சமூகம் உருவாக இடமளிக்கக் கூடாது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

தேசத்துரோக சக்திகளுக்கு இனிமேல் இடமில்லை-தரைப்படைத் தளபதி!


Friday, December 17, 2010
இலங்கையில் இனிமேல் எந்தவொரு தேசத்துரோக சக்திகளுக்கும் இடமளிக்கப் போவதில்லை எனவும் சர்வதேச ரீதியில் அவை செயற்பட்டாலும் அவைகள் முறியடிக்கப்படும் எனவும் தரைப்படைத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய நேற்று(டிச15) தெரிவித்தார்.

இராணுவ கவச வாகன படையணியின் 55ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு மோதரையிலுள்ள இராணுவ கவச வாகன தலைமையகமான ரொக் ஹவுஸ் முகாமில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

சர்வதேச ரீதியில் எழுப்பப்படும் சவால்களுக்கு முகம் கொடுக்க இலங்கை தயார் நிலையில் இருப்பதாகவும், இராணுவத்தை மேலும் பலப்படுத்தும் முகமாக ரஷ்யாவில் இருந்து நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கவச வாகனங்கள் இராணுவ கவச வாகன படையணிக்கென இறக்குமதி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

இராணுவத்தினர் மனிதாபிமான நடவடிக்கைகள் மூலம், பயங்கரவாத கெடுபிடியில் இருந்து மக்களை மீட்டெடுத்ததை போன்று, தேசத்தின் அபிவிருத்தியிலும் மிக முக்கிய பங்காற்றுவார்கள் என்ற நம்பிக்கையை மக்கள் கொண்டுள்ள அதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் இலக்கான ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக இலங்கையை மாற்ற இராணுவத்தினர் சிறந்த முறையில் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

பாதுகாப்பு செயலாளர் கோடாபய ராஜபக்‌ஷ அவர்களின் சிறந்த வழிகாட்டலின் கீழ் எந்தவொரு சவால்களுக்கும் முகம்கொடுக்க இலங்கை இராணுவம் தயார் நிலையில் இருப்பதாகவும், பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்காமல் இருப்பதற்காக வழி காட்டல்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இராணுவத்தை பலப்படுத்துவதன் மூலம் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையில் சேவையாற்றுவதற்கு கவச படை பிரிவைச் சேர்ந்த படை வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் ஏற்படும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாக தெரிவித்துக் கொண்டார்.

Saturday, December 11, 2010

தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன இன்றையதினம் சந்திப்பினை மேற்கொண்டன--அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு தமிழ் கட்சிகளுடன் இணையத் தயார் –TNA.!

Saturday, December 11, 2010
தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கம் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேசியுள்ளனர். இச்சந்திப்பு இன்று கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இச்சந்திப்பு சுமுகமாக இடம்பெற்றதாக சந்திப்பில் கலந்துகொண்ட எமது கட்சியின் பொதுச்செயலாளர் தி.ஸ்ரீதரன் தெரிவித்தார். இன்றைய சந்திப்பில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் கூட்டாக செயற்படுவது எனவும் தீர்வு திட்டம் ஒன்றை ஒருமித்து முன்வைப்பதற்கு ஏற்றவகையில் குழு ஒன்றை அமைப்பதற்கும் இன்றைய சந்திப்பின் போது இணக்கம் காணப்பட்டுள்ளது. தொடர்ந்து சந்திப்பதெனவும், பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதெனவும் இன்று உடன்பாடு காணப்பட்டுள்ளது.

தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன இன்றையதினம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பினை மேற்கொண்டன.

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை ஒரே குரலில் வெளிப்படுத்தும் முகமாக அமைக்கப்பட்ட தமிழ்க் கட்சிகளின் அரங்கமானது கடந்த ஜூன் மாதம் 24ம் திகதி இடம்பெற்ற தமது முதலாவது சந்திப்பிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இதுதொடர்பாக அழைப்பினை விடுத்திருந்தன. இந்த நிலையில் அவ்வழைப்பினை ஏற்றுக்கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அழைப்பிற்கிணங்க கொழும்பு பம்பலப்பிட்டியிலுள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் இன்றைய சந்திப்பு இடம்பெற்றது.

இரு அமைப்புக்களிலும் அங்கம் வகிக்கும் சகல கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பங்குகொண்ட நிலையில் இன்றைய சந்திப்பானது ஆக்கபூர்வமாக இடம்பெற்றது. குறிப்பாக தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படவேண்டியதன் அவசியம் கலந்துரையாடப்பட்டதுடன் வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இதனடிப்படையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுகுறித்து அடுத்தடுத்த கட்டங்களில் இணைந்த கலந்துரையாடல்களை மேற்கொள்வதென்று தீர்மானிக்கப்பட்டதுடன் அரசியல் தீர்வு தொடர்பிலான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு இலகுவாக அதற்கான வரைபினை தயாரிப்பதற்கு ஒரு குழுவினை எதிர்வரும் திங்கட்கிழமை (13) அமைப்பதென்றும் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.

பலத்த எதிர்பார்ப்புக்களுடன் இன்றையதினம் மாலை 3.30 மணியிலிருந்து 5.30 மணி வரை இடம்பெற்ற இம்முதல் சந்திப்பானது மிகவும் சிநேக பூர்வமானதாகவும் அடுத்தகட்ட சந்திப்புக்களுக்கான ஓர் ஆரம்பமாகவும் அமைந்தமை குறித்து பங்குகொண்ட கட்சித் தலைவர்கள் தமது திருப்தியை வெளியிட்டனர்.

இன்றைய கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (ரி.சிறிதரன் பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எப்.)
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் எம்.சந்திரகுமார் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா சுரேஷ் பிரேமச்சந்திரன் அப்பாத்துரை விநாயகமூர்த்தி சிவசக்தி ஆனந்தன் பா.அரியநேத்திரன் எம்.சுமந்திரன் பொன்.செல்வராசா எஸ்.வினோநோதாரலிங்கம் மேல்மாகாண சபை உறுப்பினர் குமரகுருபரன் மற்றும் வீ.ஆனந்தசங்கரி எம்.கே.சிவாஜிலிங்கம் த.சித்தார்த்தன் செ.சந்திரஹாசன் அ.இராசமாணிக்கம் ப.உதயராசா ஜீ.சுரேந்திரன் கோபாலகிருஷ்ணன் ஆர்.ராகவன் எஸ்.சதானந்தம் டி.மாணிக்கவாசகர் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு தமிழ் கட்சிகளுடன் இணையத் தயார் –TNA.!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பும் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்டுவதற்காக தமிழ் அரசியல் கட்சிகளுடன் கைகோர்த்துக் கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளது!
தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜனநயாக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் நல்லய்யா குமாரகுருபரன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் இன்று விசேட உயர் மட்ட கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.

தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் நாளாந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிபப்pட்டுள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அசரியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்காக ஆறு பேர் அடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஈ.பி.டி.பி. தமிழர் விடுதலைக் கூட்டணி, (ரி.சிறிதரன் பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எப்.)
,புளொட், போன்ற 11 கட்சிகள் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் அங்கம் வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முதல் தடவையாக வடக்கு கிழக்கைச் சேர்ந்த முக்கிய தமிழ் அரசியல் கட்சிகள் தமிழர் பிரச்சினைக்காக ஒன்று சேர்வதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wednesday, December 8, 2010

சார்க் நடவடிக்கைகளுக்கு இலங்கை தொடர்ந்து ஆதரவு - ஜனாதிபதி.

Wednesday, December 8, 2010
சார்க் அமைப்பிற்கும் அதன் நடவடிக்கைகளுக்கும் இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் ஆதரவு வழங்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டு 25 ஆண்டுகள் பூர்த்தியடைவதை முன்னிட்டு வெளியிட்டிருக்கும் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தெற்காசிய நாடுகள் இணைந்து ஆரம்பித்த சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டு 25 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. இத்தருணத்தில் தெற்காசிய நாடுகளில் வாழும் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் சார்பிலும், நாட்டு மக்கள் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமையடைகிறேன்.

ஏப்ரல் மாதம் திம்புவில் நடைபெற்ற சார்க் அமைப்பின் வெள்ளிவிழாவில் நான் குறிப்பிட்டதைப் போன்று கடந்த இரண்டு தசாப்தங்களாக சார்க் நாடுகளுக்கிடையிலான பிராந்திய ஒத்துழைப்பு, இணைந்த அடையாளம் என்பனவே தனித்துவமான குறியீடுகள். இது தொடர்ந்தும் வலுப்படுத்தப்படுவது மிகவும் முக்கியமானது.

இதன் மூலம் சார்க் அமைப்பிலுள்ள நாடுகளுக்கிடையிலும், நாட்டு மக்களுக்கிடையிலும் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்த முடியும்.

சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டு 25 ஆண்டுகள் முடிவடைந்துள்ளதெனில், 1985 ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பை அனைவரும் இணைந்து சிறப்பாகக் கட்டிக்காத்து வந்துள்ளோம் என்பதில் நாம் அனைவரும் பெருமிதமடைய வேண்டும்.

இதனைத் தொடர்ந்தும் முன்னெடுத்தாலே அடுத்த சந்ததிக்கும் இணைந்த ஒத்துழைப்பைப் பெற்றுக்கொடுக்க முடியும்.

தீர்மானங்களை நிறைவேற்றுதல், ஒப்பந்தங்களை நடைமுறைக்குக் கொண்டுவருதல், மக்களின் சுதந்திரமான நடமாட்டம் போன்ற விடயங்களில் எம் முன்னால் காணப்படும் சவால்களை வெற்றி பெறுவதாயின் சில தீர்க்கமான முடிவுகளை நாம் எடுக்கவேண்டும். இவ்வாறான நிலையில் சார்க் அமைப்பிற்கும் அதன் நடவடிக்கைகளுக்கும் இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் ஆதரவு வழங்கும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லண்டன் ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்ப்பு ஜனாதிபதிக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் மாபெரும் கண்டனப் பேரணி.

Wednesday, December 8, 2010
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் நேற்று மாபெரும் கண்டனப் பேரணியொன்று நடைபெற்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை அமைப்பாளர் வேல்முருகு தங்கராசா மற்றும் இணைப்பா ளர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் யாழ். மாவட்டத்தின் பதினொரு தொகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், கல்வியாளர்கள், சமூக சேவையாளர்கள், இளைஞர்கள், யுவதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக த்தில் உரையாற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமை மற்றும் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களால் ஜனாதிபதிக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களைக் கண்டித்தே இப்பேரணி நடைபெற்றது.

நேற்றுக் காலை 10 மணிக்கு யாழ் துரையப்பா விளையாட்டரங்கிலிருந்தும், காலை 9 மணிக்கு பாஷையூர் அந்தோனியார் கோவில் முன்றலிலிருந்தும் ஆரம்பமான இருவேறு பேரணிகள் யாழ். மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்தன.

ஜனாதிபதியின் உருவப் படங்களைத் தாங்கியவாறும், தேசியக் கொடியைத் தாங்கியவாறும், ஜனாதிபதிக்கு எதிராக நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களைக் கண்டிக்கும் வாசகங்களை உள்ளடக்கிய சுலோக அட்டைகளைத் தாங்கியவாறு பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஊர்வலமாக வந்தனர்.

நாட்டை மீட்ட ஜனாதிபதிக்கு நன்றி” நாடு ஒன்றுபட்டு விட்டது, “பயங்கரவாத புலிகளை முழுமையாக ஒழியுங்கள்”, “ஜனாதிபதியின் துணிச்சலான முடிவும் மக்களின் நல்லாசியால் நாட்டில் பயங்கரவாதம் ஒழிந்தது”, “ஜனாதிபதியின் மக்கள் சேவையைப் பாராட்டுகிறோம்” போன்ற கோஷங்களை எழுப்பியவாறு பேரணியில் சென்றவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இப்பேரணியால் யாழ் நகரில் சிறிதுநேரம் வாகன நெரிசல்கள் ஏற்பட்டிருந்தன.

ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த வாரம் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருந்த நிலையில் நேற்று யாழ்ப்பாணத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

Wednesday, November 24, 2010

தமிழ் கட்சிகளின் அரங்கம் அமர்வை கொழும்பில் நடத்தியது.

Wednesday, November 24, 2010
கூட்டத்தில் மீள்குடியேற்றம் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்பன குறித்து ஆராயப்பட்டது. இலங்கை அரசின் சமீபத்திய நடவடிக்கைகள் தொடர்பாகவும் இந்தியாவின் அனுசரணை தொடர்பாகவும் முரண்பட்ட அபிப்பிராயங்கள் நிலவிய போதும் நீண்ட நேர கருத்துப்பரிமாற்றத்தின் பின்னர் முடிவுகள் எட்டப்பட்டன.

ஏற்கனவே தமிழ் கட்சிகளின் அரங்க கூட்டத்தில் பேசப்பட்டதற்கிணங்க இரண்டாவது தடவையாக பதவியேற்றுள்ள ஜனாதிபதியிடம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க கோருவதெனவும், மீள்குடியேறிய மக்கள் அனைவருக்கும் ஒரேசீராக அரசின் உதவிகள் கிடைக்க செய்வது தொடர்பாகவும், இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் கொண்டு சென்று விடுவதுடன் மீள் குடியேற்றம் முற்றுப்பெற்றதாக கருதாமல் அவர்களின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஏற்ற வழிவகைகளை தொடர்சியாக மேற்கொள்ள வேண்டியிருப்பது தொடர்பாகவும் ஜனாதிபதியை சந்தித்து எடுத்துக் கூறுவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அவர்களை சந்தித்து மீள்குடியேற்றம், இனப்பிரச்சினை தீர்வு போன்ற விடயங்களில் இந்தியாவின் ஒத்துழைப்பை கோருவதெனவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், பத்மநாபா ஈபிஆர்எல்எவ், ஈபிடிபி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சிறி ரெலோ, ஈரோஸ், ஆகிய கட்சிகளினதும் ஈழ எதிலியர் மறுவாழ்வு கழகம், மனித உரிமைகள் இல்லம் ஆகிய தொண்டு நிறுவனங்களினதும் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு கிட்ட வேண்டும், இதற்கு தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமை வேண்டும் என்ற அக்கறையுள்ள பொதுமக்களும் இதில கலந்து கொண்டு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைத்தனர்.

இதனிடையே, தமிழ் கட்சிகளின் அரங்கமானது, எதிர்வரும் 28 ஆம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பத்திரிகை அறிக்கை-இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டு சரித்திரத்தின் செழுமைமிகு பக்கங்களில் இடம்பெற வேண்டும்-தி.ஸ்ரீதரன்-பொதுச்செயலாளர்-பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எப்.
Wednesday, November 24, 2010
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் மீண்டும் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக பதவியேற்றதற்கு பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

பொருளாதார அபிவிருத்தியின் சிகரங்களை தொடுவதற்கான வாக்குறுதியை அவர் மக்களுக்கு அளித்துள்ளார். விமான போக்குவரத்து, சமுத்திரம், மின்சாரம், வர்த்தகம், அறிவு ஆகிய ஐந்து துறைகளிலும் இலங்கை எதிர்காலத்தில் பிரகாசிப்பதற்கான வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

சமாதானம் நிலைநாட்டப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இந்த இலக்குகள் மகிழ்ச்சிகரமானவை. இலங்கையின் சகல இன மக்களுக்கும் தெம்பூட்டுபவை.

எனினும் இலங்கையின் இன சமூகங்களிடையே நிலவும் அரசியல் அதிகாரப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதனூடாகவே இந்த இலக்குகளை எய்த முடியும்.

உலக வரலாற்றில் ஜனநாயகமும், சமூகங்களிடையே சமுத்துவமும் நிலைநாட்டப்பட்ட நாடுகளிலேயே வெற்றிகரமான சமூக பொருளாதார சாதனைகள் நிகழ்ந்துள்ளன.

எனவே இலங்கை அனைத்து இன மக்களினதும் நாடு, பல்லினங்களின் நாடு என்பது உறுதிப்படுத்தப்படுவதும் தனி மனித ஜனநாயக உரிமைகள் உறுதிப்படுத்தப்படுவதும் நாம் முன்னேற்றப்பாதையில் செல்வதற்கான அடிப்படை நிபந்தனைகளாகும்.

தேசிய வாழ்வினுள் தமிழ், முஸ்லீம் மக்கள் உள்வாங்கப்படும் விதமாக அரசியல் அதிகாரப் பகிர்வு நிகழ வேண்டும்.

இதனை ஜனாதிபதி தனது பதவி காலத்தில் உறுதிப்படுத்தி சரித்திரத்தின் செழுமைமிகு பக்கங்களில் தனது பெயரை பொறிக்க வேண்டுமென நாம் எதிர்பார்க்கிறோம். அதனை மேற்கொள்வதற்குரிய ஆற்றலும், பலமும் அவருக்கு இருக்கிறது.

இலங்கையில் 30 வருடமாக நிலவிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தது போல் இனப்பபிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை எட்டுவதிலும் ஜனாதிபதி அவர்கள் ஆற்றலுடன் செயற்பட முடியும் என நாம் நம்புகிறோம்.

தி. ஸ்ரீதரன்
பொதுச்செயலாளர்
பத்மநாபா- ஈ.பி.ஆர்.எல்.எப்.

பதவியை இருக்கைகளோடு மட்டுப்படுத்தாதீர்! - செயலர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை!

Wednesday, November 24, 2010
தமது பதவியினை இருக்கைகளோடு மட்டுப்படுத்தாது மக்களுக்குப் பணியாற்றுமாறு ஜனாதிபதி புதிய அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, தமது பதவியினை இருக்கைகளுடன் மட்டுப்படுத்தாது நடைமுறை ரீதியிலும் இதய சுத்தியுடன் மக்களுக்கு பணியாற்றுமாறும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற அர்ப்பணிக்குமாறும் அறிவுரை வழங்கினார்.

அந்தந்த அமைச்சுக்களுக்கு பொதுமக்கள் அனுப்பும் பிரச்சினைகள் பற்றிய கடிதங்களுக்குக் கட்டாயம் பதிலளிக்க வேண்டுமென வலியுறுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனை குறித்த அமைச்சின் செயலாளர் தனிப்பட்ட முறையில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண் டார்.

அதேபோன்று இந்த நாட்டின் அரச சேவைகள் பற்றித் தமக்குப் போதியளவு புரிந்துணர்வு இருப்பதாகக் கூறிய ஜனாதிபதி தம்மை எந்தவொரு அதிகாரியாலும் ஏமாற்ற முடியாதெனத் தெரிவித்தார்.

Monday, November 22, 2010

இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு உதவும் வகையில் நடமாடும் சேவை 115 அகதி முகாம்களில் துணைத் தூதரகம் ஏற்பாடு.

Monday, November 22, 2010
தமிழக அகதி முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு ஏதுவான ஆவணங்களை வழங்கும் நோக்கில் சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதுவர் வீ. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடமாடும் சேவையொன்று நடத்தப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக மதுரையில் அப்பகுதி மாவட்ட ஆட்சியர் ஊடாக இம்மாதம் 20ஆம் 21ஆம் திகதிகளில் இந்நடமாடும் சேவை நடைபெற்றதாகத் துணைத்தூதுவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

இதேபோல் இலங்கைத் தமிழர்கள் தங்கியிருக்கும் 115 அகதி முகாம்களில் அந்தந்தப் பகுதி மாவட்ட ஆட்சியாளர்கள் ஊடாக நடமாடும் சேவை முன்னெடுக்கப் படும்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்; ‘வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதை விட நாட்டுக்குத் திரும்ப வேண்டும்’ என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ‘மஹிந்த சிந்தனை’க்கு அமைய 115 முகாம்களிலும் இந்த நடமாடும் சேவை நடத்தப்படவுள்ளது.

அகதி முகாம்களிலுள்ள இலங்கையர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பிறப்புகள், திருமணங்கள் சட்ட ரீதியான பதிவுகள் இல்லாமல் உள்ளன. அகதிகளுக்கான சலுகைகளைப் பெறுவதாயினும், நாடு திரும்பி மீள்குடியேறுவதாயினும் ஆவணங்கள் அவசியம்.

இதற்காகவே, மதுரையில் நாம் நடமாடும் சேவையை ஆரம்பித்துள்ளோம். ஏனைய பகுதிகளிலும் இச்சேவை விஸ்தரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியினால் இன்று சமர்ப்பிப்பு 2011

Monday, November 22, 2010
2011ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பிற்பகல் 1.35 மணிக்கு வரவு - செலவுத் திட்டத்தைப் பாராளு மன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார்.

நீண்டகால மற்றும் குறுகிய கால அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டே இவ் வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக நிதிய மைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டி ருப்பதற்கு அமைவாகக் கிராமங்களை அபிவிருத்தி செய்து ஏழை, பணக்காரன் என்ற வர்க்க ஏற்றத்தாழ்வுகளை நீக்கி அனைவருக்கும் சமமாகப் பகிரக்கூடிய வகையிலேயே இவ் வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கையை மாற்றுவதற்குக் காணப்படும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், பாதுகாப்பு, நலன்புரி, கல்வி மற்றும் பொருளாதாரம் போன்ற முக்கிய துறைகள் குறித்து இவ்வரவு - செலவுத் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பட்டுள்ளது.

வறுமை மற்றும் வேலையில்லாப் பிரச்சினையை ஒழிப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும். நகரத்தின் பொது வசதிகளை மேம்படுத்தும் செயற்பாடுகளுக்கு அதிக நிதியை ஒதுக்குவதற்கும் தீர்மானிக்க ப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.

ஜனாதிபதி பதவியின் இரண்டாவது பதவிப் பிரமாணத்தின் பின்னர் அவர் சமர்ப்பிக்கும் முதலாவது வரவு - செலவுத் திட்டம் இதுவாகும். அத்துடன் மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு கொள்கைப் பிரகடனத்தின் கீழ் இடம்பெறும் முதலாவது வரவு - செலவுத் திட்டம் இதுவாகும்.

நாட்டின் அனைத்து மக்களும் பொரு ளாதார அபிவிருத்தியின் பங்குதாரர்களாகும் மற்றும் அபிவிருத்தியின் பெறுபேறுகள் அனைவருக்கும் சென்றடைவதை உறுதி செய்வதும் இம்முறை வரவு - செலவு திட்டத்தின் முக்கிய அம்சமாகும். அதிவேக நெடுஞ்சாலைகள், மாகாண சபை வீதி மற்றும் கிராமப்புர பாதைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்கப்படும் அதேவேளை, சிறிய நடுத்தர முதலீட்டாளர்களுக்கு அதிக பெறுபேறுகளை பெற்றுத் தரும். அவர்களை ஊக்குவிக்கும் யோசனைகளும் வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்க ப்பட்டுள்ளன.

எமது நாட்டின் வரி முறையை இலகுபடுத்தும் வகையிலான முறையொன்று வரவு - செலவுத் திட்ட த்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிய வருகிறது.

விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைகள் பிரிவுகள் மேம்படுத்தப் படுவதுடன் கடற் படை, விமானப் படை ஆகியவற்றை பலப்படுத்தி ஆசியாவின் உன்னதமான நாடாக இலங்கையை மாற்றும் நோக்கத்தை ஸ்திரப்படுத்தும் யோசனைகளும் இம்முறை வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

வரவு - செலவுத் திட்ட அறிக்கையில் இடம்பெறும் அரச வருமானம், செலவு மற்றும் வரவு - செலவுத் திட்ட பற்றாக்குறையை 2011 ஆம் ஆண்டின் இறுதியில் அதேபோன்று வைத்திருப்பதில் அரசாங்கம் இம்முறை அதிக அவதானம் செலுத்தியுள்ளது.

2010ஆம் ஆண்டில் வரவு - செலவுத் திட்ட பற்றாக்குறை தேசிய வளர்ச்சி விகிதத்தில் நூற்றுக்கு 9.8 சதவீதமாகும். அதனை நூற்றுக்கு 7 சதவீதம் என்ற மட்டத்தில் பேணுவதற்கே எதிர்பார்க் கப்பட்டது. அதிக நிதியை நாட்டின் அபிவிருத்திக்காக முதலீடு செய்ய வேண்டியுள்ளதன் காரணமாக இந்த விகிதம் அதிகரித்துள்ளது.

இம்முறை வரவு - செலவுத் திட்ட பற்றாக்குறையை நூற்றுக்கு 7 சத வீத மட்டத்தில் வைத்திருப்பதே இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு கிடைக்கும் வெளிநாட்டு கடன், உள்ளூர் மொத்த உற்பத்தியில் நூற்றுக்கு 80 என்ற மட்டத்தில் தொடர்ந்து வைத்திருப்பது இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.

2005 இல் நாட்டின் கடன் உள்ளூர் மொத்த உற்பத்தி விகிதத்தில் நூற்றுக்கு 105 சதவீதமாக இருந்தது. அது படிப் படியாக நூற்றுக்கு 84 சதவீதம் வரை குறைந்தது.

நாட்டை அபிவிருத்தி செய்யும் யோசனைகளை வெறும் வார்த்தைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தாமல் அவற்றை செயலுருப்படுத்தும் வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதன் மூலம் நாட்டு மக்களுக்கு முக்கிய செய்தியொன்றை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

பாராளுமன்றத்துக்கு அரசாங்கம் அண்மையில் சமர்ப்பித்த குறைநிரப்பு பிரேரணைக்கு ஏற்ப 2011ஆம் ஆண்டில் மீண்டுவரும் செலவு 1080.9 பில்லியன் ரூபாவாகவும் மூலதனச் செலவு 458.1 பில்லியன் ரூபாவாகவும் மதிப்பிடப் பட்டுள்ளது.

Saturday, November 20, 2010

சமாதானமில்லாத இடத்தில், அபிவிருத்தியினை எதிர்பார்க்க முடியாது – ஜனாதிபதி:

Saturday, November 20, 2010
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முற்பகல் 10.16 அளவில், தமது இரண்டாம் தவணைக்கான பதவிப் பிரமானத்தை கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள பழைய நாடாளுமன்ற முன்றலில் செய்துக் கெணர்டார்.

இந்த சத்தியப் பிரமாணம் பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா முன்னிலையில் இடம்பெற்றது.

இதனை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக விசேட மேடை ஒன்று அமைக்கப்பட்டிருந்ததுடன், இதில் வெளிநாட்டு ராஜதந்திரிகள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட பெருந்திரளான பிரமுகர்களும் மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

ஜனாதிபதியை கௌரவிக்கும் வகையில் 21 மரியாதை வேட்டுக்களும், அதனைத் தொடர்ந்து கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

பதவிப் பிரமாணத்தை மேற்கொண்டதன் பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி, சமாதானம் இல்லாத இடத்தில், அபிவிருத்தியினையும், அபிவிருத்தி இல்லாத இடத்தில், சமாதானத்தையும், எதிர்பார்க்க முடியாது என தெரிவித்தார்.

இது தவிர, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் என்பன, அரசியல் தீர்வின் ஒரு கட்டமாகவே தாம் பார்ப்பதாக குறிப்பிட்டார்.

வன்முறைகளில் இருந்து வடக்கு மற்றும் கிழக்கு விடுவிக்கப்பட்டு, தற்போது சமதானம் நிறைந்த பிரதேசமாக மாற்றப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் விரைவில் வடக்கு மக்களுக்கான பிரதேச சபை, நகரசபை மற்றும் மாகாண சபை உறுப்பினர்களை தமது விருப்பத்தின் அடிப்படையில் தெரிவு செய்துக் கொள்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில், சுதந்திரமானதும், நீதியானதுமான நாடு ஒன்றை கட்டியெழுப்ப அனைத்து தரப்பினரும் ஒரே கொடியின் கீழ் ஐக்கியப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதே வேளை, ஜனாதிபதியின் இரண்டாவது பதவிப்பிரமாணத்தை முன்னிட்டு பல வெளிநாட்டு ராஜதந்திரிகள் தமது வாழ்த்தை தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கு மக்கள் அடக்கு முறைகளுக்கு உட்பட்டிருந்தனர் - சவேந்திர சில்வா:

Saturday, November 20, 2010
புலிகள் இறுதிப்போரின் போது பெரும்பாலும் சிவில் உடையுடனேயே தாக்குதல்களை நடத்தினர் என ஸ்ரீலங்கா 58 வது படையணியின் முன்னாள் தளபதியும் தற்போது ஐக்கிய நாடுகளின் பிரதி நிரந்தர பிரதிநிதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் நேற்று சாட்சியமளித்த போதே அவர் இதனை தெரிவித்தார்

போர் நிறுத்த காலத்தின் போது டி சேர்ட்டையும் சாரத்தையும் உடுத்திக்கொண்டு படையினர் மீது தாக்குதல் நடத்தினால் அவர்களை பயங்கரவாதிகள்,என்றே அழைக்கமுடியும் என அவர் குறிப்பிட்டார் புலிகளின் யாழ்ப்பாண தாக்குதல் படைத்தலைவராக இருந்த தீபன், போரின் போது கொல்லப்பட்ட பின்னர், தாம் சென்று பார்த்தபோது, அவர் சாதாரண உடையிலேயே காணப்பட்டார் என சவேந்திர சில்வா குறிப்பிட்டார் தமது படைப்பிரிவினர்,
புலிகளின் சடலங்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக ஒப்படைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண உடைகளில் இருந்தபோதும் கொல்லப்பட்டவர்கள் தமது உறுப்பினர்கள் என அடையாளம் கண்டு அந்த சடலங்களை புலிகள் ஏற்றுக்கொண்டனர். எனினும் சில செய்தி நிறுவனங்கள், இந்த சடலங்களை தமிழ் பொதுமக்கள் என காட்ட முயற்சித்தன. பெண் போராளிகளின் ஆட்டிலறி பொறுப்பாளர் விதுஷா, பிரபாகரனின் மகன் சார்ல்ஸ் அந்தனி ஆகியோர் சிவிலியன் உடையிலேயே போரின் போது தாக்குதல்களில் ஈடுபட்டு மரணம் அடைந்தனர்

புலிகளின் திருகோணமலை அரசியல் பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவி, தமது கணவரை தேடித்தருமாக இந்த ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியமளித்துள்ளார். எழிலன் திருகோணமலை மாவில் ஆறு நீர் விடயத்தில் முன்னிலை வகித்தார். அவரே புலிகளின் வரி சேகரிப்புக்கு பொறுப்பாகவும் இருந்தார் அவர் பயங்கரவாதியாவார் அவர் படையினருக்கு எதிராக போராடியவராவார் அவர் படையினருடனான போரின் போது காணாமல் போயிருக்கலாம் ஆனால் இன்று அவரின் மனைவி, தமது கணவரை காணவில்லை என புதிய கோணத்தில் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளார் என்றும் சவேந்திர சில்வா குறிப்பிட்டார் வடக்குகிழக்கு மக்கள் அவர்களின் பிரிவினராலேயே 30 வருடங்களாக அடக்குமுறைகளுக்கு உட்பட்டிருந்தனர். இதன் போது மக்கள்படை மற்றும் போராளிகள் என கூறப்படுவோரின் புகைப்படங்களை ஆணைக்குழுவின் முன்னிலையில் காட்டிய சவேந்திர சில்வா: அவர்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதால்,அவர்களை பயங்கரவாதிகள் என்றே எடுத்துக்கொள்ளவேண்டும் என குறிப்பிட்டார்.

எனினும் புலம்பெயர்ந்தோரும் இணையத்தளங்களும் செய்தி நிறுவனங்களும் இவர்களை பொதுமக்களாக காட்ட முனைகின்றனர் என அவர் குற்றம் சுமத்தினர். சுதந்திரபுரம் என்ற இடமே அரசாங்கத்தினால், பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்யப்பட்டது. இந்தநிலையில் ஆளில்லா விமானம் மூலம் கண்டறியப்பட்ட தகவலின்படி, பொதுமக்கள் இருந்த புதுமாத்தளன் பகுதியை நோக்கி புலிகளின் ஆட்டிலறி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 200 கிலோ மீற்றர் பிரதேசத்தை கைப்பற்றிய தமது படையினருக்கு சுமார் 7 கிலோமீற்றர் பிரதேசத்தை கைப்பற்றுவதற்காக பொதுமக்களை கொலை செய்யவேண்டிய அவசியம் இருக்கவில்லை என்றும் சவேந்திர சில்வா குறிப்பிட்டார். இறுதிப்போரின் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதேசத்துக்குள் படையினரின் ஊடுருவல் படையினர் சென்று தமது தாக்குதல்களை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

Followers

Blog Archive