

இலங்கையில் இனிமேல் எந்தவொரு தேசத்துரோக சக்திகளுக்கும் இடமளிக்கப் போவதில்லை எனவும் சர்வதேச ரீதியில் அவை செயற்பட்டாலும் அவைகள் முறியடிக்கப்படும் எனவும் தரைப்படைத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய நேற்று(டிச15) தெரிவித்தார்.
இராணுவ கவச வாகன படையணியின் 55ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு மோதரையிலுள்ள இராணுவ கவச வாகன தலைமையகமான ரொக் ஹவுஸ் முகாமில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
சர்வதேச ரீதியில் எழுப்பப்படும் சவால்களுக்கு முகம் கொடுக்க இலங்கை தயார் நிலையில் இருப்பதாகவும், இராணுவத்தை மேலும் பலப்படுத்தும் முகமாக ரஷ்யாவில் இருந்து நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கவச வாகனங்கள் இராணுவ கவச வாகன படையணிக்கென இறக்குமதி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
இராணுவத்தினர் மனிதாபிமான நடவடிக்கைகள் மூலம், பயங்கரவாத கெடுபிடியில் இருந்து மக்களை மீட்டெடுத்ததை போன்று, தேசத்தின் அபிவிருத்தியிலும் மிக முக்கிய பங்காற்றுவார்கள் என்ற நம்பிக்கையை மக்கள் கொண்டுள்ள அதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இலக்கான ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக இலங்கையை மாற்ற இராணுவத்தினர் சிறந்த முறையில் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
பாதுகாப்பு செயலாளர் கோடாபய ராஜபக்ஷ அவர்களின் சிறந்த வழிகாட்டலின் கீழ் எந்தவொரு சவால்களுக்கும் முகம்கொடுக்க இலங்கை இராணுவம் தயார் நிலையில் இருப்பதாகவும், பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்காமல் இருப்பதற்காக வழி காட்டல்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இராணுவத்தை பலப்படுத்துவதன் மூலம் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையில் சேவையாற்றுவதற்கு கவச படை பிரிவைச் சேர்ந்த படை வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் ஏற்படும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாக தெரிவித்துக் கொண்டார்.
No comments:
Post a Comment