
இலங்கைக்கு எதிராக அனைத்துலக விசாரணைகளை நடத்த வேண்டும் என்ற சில வெளிநாடுகளின் கோரிக்கைக்கு இந்தியா ஆதரவளிக்கவில்லை. அது எமக்கு மிகப்பெரிய மனோபலத்தைக் கொடுத்திருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கடந்த மே 16ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்திய-இலங்கை கூட்டறிக்கை தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கை மீது இந்தியா அழுத்தங்களை கொடுப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களையும் அவர் நிராகரித்தார். அத்துடன், தருஸ்மன் குழு அறிக்கை குறித்து இராஜதந்திர ரீதியாக இந்தியத் தலைவர்களுக்குத் தெளிவுபடுத்தும் நடவடிக்கையை மட்டுமே அரசாங்கம் எடுத்துள்ளது.
இந்த அறிக்கையைக் கண்டித்து இந்தியா அறிக்கை வெளியிட வேண்டும் என்ற தேவை எமக்கில்லை.
இந்த அறிக்கையை நாம் ஏற்கனவே நிராகரித்து விட்டோம். இந்த அறிக்கைக்கு கண்டனம் தெரிவிக்குமாறு மேலும் மேலும் வெளிநாடுகளிடம் கேட்டுக்கொண்டிருந்தால் அதற்கு நாமே அதிக பெறுமானத்தைக் கொடுத்ததாகிவிடும். எனது இந்தியப் பயணத்தின் அடிப்படை நோக்கம் நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக ஆதரவு தேடுவதல்ல. அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதற்கு அது ஒன்றும் ஐ.நாவின் அதிகாரபூர்வ அறிக்கையல்ல.
சில வெளிநாடுகள் இலங்கைக்கு எதிரான விசாரணை நடத்தக் கோருகின்றன. ஆனால் இந்தியா அதற்கு ஆதரவளிக்கவில்லை. இது எமக்கு திருப்தி தரக்கூடியதொன்று.
எனது இந்தியப் பயணத்தின் போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேசினேன். ஆனால் நிபுணர் குழு அறிக்கை பற்றி இந்தியா கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்று அவரிடம் நான் கேட்கவில்லை. தேவையேற்படும் போதெல்லாம் இந்தியாவின் ஆதரவு இலங்கைக்குக் கிடைக்கும்.
நியூயோர்க்கிலும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையிலும் இலங்கைக்கு எதிராக இந்த விவகாரம் கிளம்பும் போது இந்தியாவின் ஆதரவை நாம் வேண்டிக்கொள்வோம்.
இலங்கையின் அரசியலமைப்பை மாற்றுவது தொடர்பாக இந்தியாவுடன் எந்த உடன்பாடும் செய்துகொள்ளப்படவில்லை. சக்தி, மின்சக்தி, மீன்பிடி மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்காலத்தில் தொடர்ந்து பேசிக்கொள்ளலாம் என்றே வாய்மூல இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவுக்கான பயணத்தின் போது அணிசேரா நாடுகள் அமைப்பிலுள்ள 22 நாடுகளின் பிரதிநிதிகளுடன் சந்தித்துப் பேசினேன். அவர்களுக்கு நிபுணர் குழு அறிக்கை மற்றும் அதுதொடர்பான எமது நிலைப்பாடு குறித்து விளக்கமளித்திருந்தேன்.
ஆனால் அவர்களிடம் கண்டன அறிக்கை வெளியிடுமாறு நான் கேட்டுக்கொள்ளவில்லை என்று அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment