

எமது நாடு யுத்தத்தினால் அன்றி பயங்கரவாதத்தினாலேயே அழிவடைந்தது. யுத்தத்தினால் அழிந்த நாடு என்று எமது நாட்டை அடையாளப்படுத்துவது நாட்டிற்கு செய்யும் அவமதிப்பாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
பயங்கரவாதத்தினால் அழிக்கப்பட்ட நாட்டை கட்டியெழுப்பவே இன்று முப்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மனிதாபிமான நடவடிக்கை மூலம் பெற்ற வெற்றியை விற்றுப் பிழைக்க நாம் ஒரு போதும் தயாராக இல்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.
இலங்கை விமானப் படையின் 60ஆவது ஆண்டு பூர்த் தியை முன் னிட்டு கோலா கலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரதான வைபவம் இரத்மலானை விமானப் படைத் தளத்தில் நேற்றுக் காலை இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்:-
அதிசக்தி வாய்ந்த தொழில்நுட்ப வசதிகள், திறமையான விமானிகளைக் கொண்ட எமது விமானப்படை மிக சக்தி வாய்ந்ததாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. 1983ஆம் ஆண்டு உலகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த பயங்கரவாதத்திற்கு எதிராக போராட ஆரம்பித்தது. தாய்நாட்டுக்காக பாரிய பங்களிப்புக்களை செய்துள்ளது.
மனிதாபிமான நடவடிக்கையின் போது பயங்கரவாதிகள் மக்கள் மத்தியில் முகாமிட்டு இருந்தனர். இந்நிலையில் மக்களுக்கு எந்தவித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் தாக்குதல் நடத்தும் பொறுப்பு விமானப் படையினரிடம் இருந்தது.
இந்த சந்தர்ப்பத்தில் தான் மனித உரிமைகள் மீறல் தொடர்பாக உலகம் முழுவதும் பிரசாரம் செய்யப் பட்டது. அந்த நிலையில் தான் விமானப்படையினர் தமது நடவடிக்கைகளை பொது மக்களுக்கு பாதிப்புக்கள் இன்றி வெற்றிகரமாக முடித்தனர் என்றார்.“நான் நினைக்கின்றேன் உலகிலேயே எந்த ஒரு விமானப்படையினருக்கும் ஏற்பட்டிராத ஒரு இக்கட்டான நிலை எமது விமானப் படையினருக்கு ஏற்பட்டிருந்தது.
விமானப்படையின் இலக்கு தவறுதலாக பொதுமக்கள் வாழும் பிரதேசத்தில் விழுந்து அவர்கள் கொல்லப்பட்டிருந்தால் இப்போதைய நிலைமையை விட எமது நாட்டின் வரலாறு வேறாக எழுதப்பட்டிருக்கும். இவ்வாறான கஷ்டமான சூழநிலையை வெற்றிகொள்ள முடியாமல் இருந்திருந்தால் நாட்டை மீட்பதற்கான யுத்தத்தில் பாரிய தடை ஏற்பட்டிருக்கும்.
உலகிலேயே பாரதூரமான நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலகத்தில் சிறந்த விமானப்படை என்று சொல்லும் படையினரால் ஏற்படும் அழிவுகள் எதனையும் எமது விமானப் படையினர் தமது மனிதாபிமான நடவடிக்கையின் போது செய்யவில்லை என்பதை நான் பெருமையுடன் சொல்லிக்கொள்கின்றேன். யாழ். கோட்டையை மீட்டுக்கொண்டது முதல் உணவு எடுத்துச் செல்லல், படையினரை ஏற்றிச் செல்லல், படையினரை மீட்டெடுத்தல், உயிர் பாதுகாப்பு வழங்குதல் போன்ற விமானப் படையின் பல்வேறு நடவடிக்கைகள் பாராட்டத் தக்கன.
கடலில், தரையில் செல்ல முடியாத சந்தர்ப்பங்களில் எல்லாம் சென்று முப்படையினருக்கு தொடர்புகளை ஏற்படுத்தி நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்கு, பயங்கரவாதிகளை கட்டுப்படுத்தி செய்ய முடியாத பல வீரதீர செயல்களை விமானப்படை செய்தது. இதன் பெருமை அதனை சாரும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் கெளரவமாக நினைவு கூரத்தக்க ஒரு படையாக விமானப் படை கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. அதேவேளை, இலங்கைக்கு ஏற்ற வகையில் ஆளில்லா விமானங்களை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சுதந்திரமான இலங்கையில் மனிதாபிமானத்தை எப்போதும் வலுப்படுத்தும் விதத்திலேயே செயல்பட வேண்டும் என்று நான் இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.
60 ஆண்டு காலத்தில் உங்களுக்கு ஒரு சிறந்த தலைமைத்துவங்கள் கிடைத்துள்ளன. நாம் பெற்ற வெற்றிகளை நினைவு கூர வேண்டாம் என்றும், இவ்வாறான வெற்றிகளை கொண்டாடுவதற்கான நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என்றும் சிலர் கூறிக்கொண்டு இருக்கின்றார்கள்.
நாம் யுத்தத்தை விலை பேசிக்கொண்டிரு க்கின்றோம் என்றும் அவர்கள் கூறிக்கொண்டிருக்கின்றார்கள். சிலர் இவை தொடர்பாக நினைவு கூர வேண்டாம் என்றும் கூறுகிறார்கள் அன்று நாட்டை மீட்பதற்காக போராடிய போது அதற்கு எதிராக செயற்பட்டவர்கள் தான் இவ்வாறு கூறுகிறார்கள்.
உலகிலேயே மிகவும் மோசமான, பலம் வாய்ந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும்போது அதனை குழப்ப முயற்சித்தார்கள். உலகம் முழுவதும் தவறான பிரசாரங்களை கொண்டு சென்றார்கள் என்பதை நாம் நன்கு அறிவோம். இவ்வாறான நடவடிக்கைகள் இன்றும் இப்போதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
எனவே நாம் ஒருபோதும் இந்த மனிதாபிமான நடவடிக்கையை விலை பேச ஆயத்தமாக இல்லை. இந்த வெற்றியை எப்போதும் எந்நேரத்திலும் மறந்துவிட முடியாது.
சரித்திரத்திலிருந்து துடைத்தெறிய முடியாது. மக்களின் மனதிலிருந்து அதனை நீக்கிவிட முடியாது. நன்றி உணர்வு கொண்ட மக்கள் இதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்பதை நான் மிகவும் பெருமையுடன் கூறிக்கொள்கின்றேன்
No comments:
Post a Comment