
பொருளாதார, சமூக மற்றும் கலாசாரப் பிரிவுகளில் சர்வதேச சாசனங்களின் பிரகாரம் இலங்கை செயற்பட்டுள்ளதா என்பது தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளுக்கான குழு ஆராய்ந்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் ஜெனிவாவிலுள்ள தலைமையகத்தில் நடைபெற்றுவரும் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளுக்கான குழுவின் 45 ஆவது கூட்டத் தொடரின்போதே இது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கென நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கைகளின் முன்னேற்றம் குறித்து நிபுணர்கள் குழு முன்னிலையில் இலங்கையின் பிரதி சொலிசிட்டர் நாயகம் ஷவேந்திர சில்வா விளக்கமளித்துள்ளார்.
இலங்கை கடந்த 30 வருட கால ஆயுதப் போராட்டத்தைக் கடந்து வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர் பயங்கரவாதச் செயற்பாடுகள் காரணமாக சுகாதாரம், கல்வி மற்றும் சமூகப் பொருளாதார அபிவிருத்தி ஆகிய துறைகளில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைவதில் தடங்கல்கள் ஏற்பட்டிருந்ததாகச் சுட்டிக்காட்டினார்.
கடந்த மே மாதம் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது உள்ளக ரீதியில் 3 லட்சம் பேர் இடம்பெயர்ந்திருந்ததாகக் கூறிய அவர் இந்த எண்ணிக்கை தற்போது 18 ஆயிரம் பேராகக் குறைந்துள்ளதெனச் சுட்டிக் காட்டினார்.
இடம்பெயர்ந்தோரை மீள்குடியேற்றுவதற்காக அரசாங்கம் அளப்பரிய அர்ப்பணிப்பை மேற்கொண்டுள்ளதுடன் இடம்பெயர்ந்த மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான உதவிகளையும் செய்து வருவதாக அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.
எஞ்சியுள்ள இடம்பெயர்ந்த மக்களையும் மீளக் குடியேற்றும் பொருட்டு மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகள் சர்வதேச மனிதாபிமான நிறுவனங்களின் உதவியுடன் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும் இலங்கையின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 28 பக்கங்களைக் கொண்ட அறிக்கையானது விரிவாக ஆராயக்கூடிய அளவிற்குப் போதுமான தகவல்களைக் கொண்டிருக்கவில்லையென ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
No comments:
Post a Comment