Sunday, March 20, 2011

அகற்றப்படும் உயர் பாதுகாப்பு வலயங்கள்!

Sunday, March 20, 2011
யுத்த காலத்தின் பொழுது பல்வேறு துன்பதுயரங்களையும் அழிவுகளையும் தாங்கிக்கொண்ட யாழ். மக்கள் இன்று சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கியுள்ளனர். யுத்த காலத்தின் பொழுது நாட்டின் பாதுகாப்பிற்காக அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட பிரதேசத்திலிருந்து படிப்படியாக இராணுவத்தினர் விலக்கிக் கொள்ளப்பட்டு பொது மக்களுடைய நிலங்கள் அவர்களிடமே கையளிக்கப்படுகின்றன.

1995ஆம் ஆண்டு முதல் இராணுவப் பயன்பாட்டில் வைக்கப்பட்டிருந்த சுபாஸ் ஹோட்டல் 16 வருடங்களின் பின்பு அதன் உரிமையாளரிடம் கடந்த 17ஆம் திகதியன்று கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு அதியுயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டதால், தமது காணி பூமிகளை இழந்து நீண்டகாலமாக அவதிப்படும் மக்களுக்கு எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையை ஊட்டியுள்ளது.

“நாட்டின் பாதுகாப்பிற்காக 1995ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்திற்குப் பின்னர் நேற்று வரை சுபாஸ் ஹோட்டல் இராணுவத்தினரின் வசமிருந்தது. ஆனால் இன்று எமது ஹோட்டல் எம்மிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இது எனக்குச் சந்தோசமளிப்பதாகவுள்ளது” என யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதியிடம் சுபாஸ் ஹோட்டலைப் பெற்றுக்கொள்ளும் பொழுது சுபாஸ் ஹோட்டல் உரிமையாளர் எஸ். ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

சுபாஸ் ஹோட்டல் ஒப்படைக்கப்பட்டதுபோல் விக்டோறியா வீதியும் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல் குடாநாட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு யுத்த காலத்தின் பொழுது தடைசெய்யப்பட்டிருந்த பல வீதிகளும் திறந்துவிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் வீடுகளும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு பொது மக்களின் இயல்பான நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீண்ட கால யுத்தம், பொருளாதாரத் தடை, பல்வேறு வகையான தடைச் சட்டங்கள், அப்பொழுது குடாநாட்டின் அதிகாரத்தினைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த புலிகளின் அடக்கு முறைகள், எதிர்பாராத யுத்த அவலங்கள் போன்ற பல்வேறு துன்ப துயரங்களால் அவல வாழ்க்கை வாழ்ந்த இவர்கள் தமது பூர்வீக நிலங்களைவிட்டு இடம்பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

பாதுகாப்பு வலயங்கள் அறிவிக்கப்பட்டு மக்களை இடம்பெயர் செய்த பொழுதும், அவர்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்து கொடுக்கப்படவில்லை என்பது கடந்த யுத்த காலத்தின் பொழுது சுட்டிக்காட்டப்பட்ட விடயமாகவிருந்தது. இதனைத் தற்பொழுதுள்ள அரசாங்கம் உடனடியாகவே நிறைவு செய்து வருவது பொதுமக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதுள்ள நம்பிக்கையை வலுவடையச் செய்துள்ளது.

வலிகாமத்திலும், வடமராட்சி கிழக்குப் பகுதியிலும் பல்வேறு கிராமங்களில் மக்கள் மீள்குடியமர அனும திக்கப்பட்டுள்ளனர். ஏனைய பகுதிகளிலும் மக்கள் மீள்குடியமர உடனடியாக அனுமதியளிப்பதற்கு கண்ணிவெடிகள் தடையாகவுள்ளன. இதனை விரைவாக அகற்றிவரும் இராணுவத்தினர் அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் மக்கள் மீள்குடியமரக் கூடிய அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்து வருகின்றனர். இதன் முன்னேற்பாட்டு நடிவடிக்கையாக மின்சாரமற்ற பல பகுதிகளுக்கு மின்சாரம் வழங்குவதற்கான இணைப்புகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இதேபோல் இராணுவப் பயன்பாட்டிலுள்ள எந்த ஒரு பாதுகாப்பு வலயப்பகுதிகளிலும் பொதுமக்கள் ஆலய வழிபாடுகளில் ஈடுபட அநுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்விடயம் இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்திற்குட்பட்ட மதச் சுதந்திரம் சகல மக்களுக்கும் கிடைக்கக்கூடியதான ஏற்பாடுகளை இராணுவத்தினர் செய்து வருகின்றமையைக் காட்டுகிறது. தமது பகுதிகளுக்கு குடியிருக்கச் செல்ல முடியாத இம்மக்கள் ஆலய வழிபாடுகளுக்காக இப்பகுதிகளுக்குச் சென்று தமது குல தெய்வங்களினை வழிபட்டு வருகின்றபொழுது யுத்த அவலங்களால் ஏற்பட்ட பாதிப்புக்களை மறந்து இயல்பு வாழ்வுக்குத் திரும்புகின்றனர். இம்மக்களின் ஆன்மீக வாழ்வுக்கு வழிவகை செய்து கொடுக்கப்பட்டது போன்று சொந்த இடங்களில் மீள் குடியமரவும் அநுமதிக்கப்படவேண்டும் என்பது வடபுலத்திலுள்ள அனைத்து மக்களினதும் வேண்டுகோளாகவுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் அவர்களின் அழிவோடு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டாலும் நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இலங்கை இராணுவத்தினரிடமிருப்பதை மறந்து தமிழ் இனவாதக் கட்சிகள் குடாநாட்டின் உண்மை நிலையினை திரிவுபடுத்தித் தகவல்களை வெளியிட்டு வருகின்றன. பாதுகாப்பு வலயங்கள் தளர்த்தப்பட்டு பொது மக்களிடம் அவ்விடங்கள் ஒப்படைக்கப்படுவதால், இந்தக் கட்சிகளைச் சேர்ந்தோரும் நலன்களை அநுபவித்து வருகின்ற பொழுதும் இராணுவத்திற்கெதிரான பரப்புரைகளினைச் செய்வதில் தீவிர ஆர்வமுடையவர்களாக செயற்பட்டு தமது கட்சி நலன்களைப் பாதுகாப்பதில் குறியாகவுள்ளனர்.

குடாநாட்டைப் பொறுத்தவரையும் மொத்த நிலப்பரப்பில் 30%மான நிலப்பகுதி அதியுயர் பாதுகாப்புவலயமாக அறிவிக்கப்பட்டுள்ள பொழுதும், இந்த நிலப்பரப்பிலிருந்து படிப்படியாக இராணுவத்தினர் வெளியேறி பொது இடங்களில் முகாமமைத்து வருகின்றனர். இது குறித்து தவராகப் பிரசாரம் செய்ய வேண்டாம் என இராணுவத் தளபதியே அறிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு என்பதும், கடந்த 30 வருடங்களாக யுத்தத்துடன் வாழ்ந்த சமூகத்தில் உள்ள விஷமிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்பதும் முக்கியமான ஒரு விடயமாகவே பார்க்கப்படவேண்டும்.

பயங்கரவாதத்தினை முற்றாக ஒழிப்பதற்காக நன்கு திட்டமிடப்பட்ட நிலையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களை உடனடியாக அகற்றி எம்மை மீள் குடியமர்த்துமாறு கேட்பது எமக்கே ஆபத்தாக முடியும் என்பதே பொதுமக்கள் நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும். வெடி பொருட்கள் அகற்றப்பட்டால்தான் மனித நடமாட்டம் சாத்தியம் என்பதையும், யுத்தம் நடைபெற்ற பகுதிகளில் வெடி பொருட்களை அகற்றுவது இலகுவான காரியமில்லை என்பதையும் பொதுமக்கள் நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும்.

பாதுகாப்பு வலயங்களாக இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்ட பகுதிகளும் பொது மக்களின் நடமாட்டத்திற்குத் தடை செய்யப்பட்ட பகுதிகளும் குடாநாட்டுக்கே மட்டும் உரியவை அல்ல. யுத்த காலத்தின் பொழுது இவை நாடுபூராகவும் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றிலிருந்து இராணுவத்தினர் விலகுவது பொது மக்களுக்கு நன்மைதரும் விடயமாகவே அமைகிறது.

குடாநாட்டினைப் பொறுத்தவரையும் பலர் இந்த பாதுகாப்பு வலயங்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டாண்டு 8!ளிதி!8 வாழ்ந்து வந்த பூர்வீக நிலங்கள் அதியுயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டதால் கடந்த 20 வருடங்களாக இடம்பெயர்ந்து வாழ்ந்துவரும் இம்மக்களின் அடிப்படை வாழ்வியல் உரிமைகளுக்கு மதிப்புக்கொடுத்து சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படவேண்டும் என்பது இம்மக்களின் நீண்டகாலக் கனவாகவுள்ளது. இதனையே இங்குள்ள சமூக நலன் விரும்பிகளும் புத்திஜீவிகளும் விரும்புகின்றனர்.

மக்களின் மன உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுப்பதுபோன்று இராணுவத்தினரும் இம் மக்களின் பூர்வீக நிலங்களை அவர்களிடமே ஒப்படைத்துவருகின்றனர். கைக்குழந்தையாக இடம்பெயர்ந்த ஒருவர் தனது கைக்குழந்தையுடன் சொந்த நிலத்திற்குச் சென்று முதல் முதலாக தமது ஊரைப் பார்க்கும் நிகழ்வு ஆழ் மனதை உறைய வைக்கும் ஒன்றாக உள்ள பொழுதும், இப்பொழுதாவது இந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு, மக்களைச் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவது மகிழ்வுதரும் ஒரு நிகழ்வாகவே அனைவராலும் பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Followers

Blog Archive