Saturday, November 20, 2010

ஐக்கிய முன்னணியின் பிதாமகன் மக்கள்தோழர் பத்மநாபாவின் 59 வது பிறந்த தினம் இன்று ஆகும்:

Friday, November 19, 2010
ஐக்கிய முன்னணியின் பிதாமகன் மக்கள் போராளி பத்மநாபா.
தோழர் பத்மநாபாவின் 59 வது பிறந்த தினம் இன்று ஆகும்.
இலங்கைத் தீவில் வாழுகின்ற தமிழ்பேசும் மக்களின் வரலாற்றில் தோழர் என்ற சொல்லை மக்கள் மயப்படுத்திய பெருமை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியையே சாரும்

தோழர் எஸ்.ஜி. அவர்கள் தோழர் என்ற சொல்லுக்கும் தோழமை என்ற உறவுக்கும் சரியான அர்த்தபுஷ்டியை தனது வாழும் முறையாலும் நடைமுறையாலும் வழங்கினார். தோழர் என்ற சொல்லை வரட்டுத்தனமாக உருப்போடும் சூத்திரங்களின் ஒரு பகுதியாகவோ அல்லாமல் தோழர் என்பதை ஸ்தாபன உறுப்பினர்களுக்கிடையேயான உளப்பூர்வமான உறவு முறையாக அதற்குரிய வகையில் தானே முன்னுதாரணமாக நடந்து நடைமுறைப்படுத்திக் காட்டினார்.

உயர்ந்த மனிதர்

தோழர் நாபாவின் தனிமனித குணாம்சங்கள் மிகச் சிறப்பு வாய்ந்தவை ஆகும். உயரமான மனிதனான தோழர் அவர்கள் உடல் ரீதியிலும் உள்ளத்தாலும் உணர்வாலும் குணத்தாலும் பண்பாலும் உயர்ந்த மனிதராக வாழ்ந்தார். ஒரு மனிதனின் சிறந்த வாழ்வுக்கு உதாரணபுருஷராக அவர் வாழ்ந்து காட்டியுள்ளார். ஆஜானுபாகுவான அவரது தோற்றம் அவரது உயர்ந்த மனித அம்சங்களையே பிரதிபலித்தது.

பத்மநாபா EPRLF சர்வதேச கிளைகளின் ஒன்றியம்


மக்களை நேசித்த மாமனிதர் தோழர் பத்மநாபா
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக சாத்வீக வழிகளில் நடந்த போராட்டங்களில் பங்காளனாகவும் பின்னர் ஆயுதந் தாங்கிய போராட்டத்திற்கு தலைமை ஏற்றிருந்தவர்களில் ஒருவராகவும் விளங்கியவர் அமரர் தோழர் பத்மநாபா. அவர் 1951 ம் ஆண்டு நவம்பர் 19 ம் திகதி காங்கேசன்துறையில் பிறந்தார். அவரது வாழ்க்கை காலத்தின் பெரும் பகுதி இயக்க முகாம்களிலும், காடு, மேடுகளிலும், ஏழை, பாளைகளின் குடிசை வீடுகளிலுமே களிந்தது.

தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் கல்வி பயிலும் காலத்தில் 1970 இல் ஒரு மாணவனாக அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். தமிழ் மாணவர் பேரவை, தமிழ் இளைஞர் பேரவை, ஈழ விடுதலை இயக்கம், ஈழப்புரட்சி அமைப்பு என தனது அரசியல் வாழ்வை தொடர்ந்த தோழர் பத்மநாபா 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சியின் அமைப்பாளர்கள் மாநாட்டில் ஈபிஆர்எல்எவ் இன் தலைமை பொறுப்பை ஏற்றார். 1984ம் ஆண்டு ஈபிஆர்எல்எவ் இன் முதலாவது காங்கிரசில் செயலாளர் நாயகமாக தெரிவுசெய்யப்பட்ட அவர் இறக்கும் வரை கட்சியின் செயலாளர் நாயகமாக பணியாற்றினார்.

காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி, தெல்லிப்பளை யூனியன் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆகிய கல்லூரிகளில் அவரது பாடசாலைக் கல்வியை கற்றார். 1972 ஆம் ஆண்டு அவரது பாடசாலைக் கற்றல் முடிவுக்கு வந்தது. அரசியல் நடவடிக்கைகள் காரணமாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சில நாட்களின் பின் விடுதலை செய்யப்பட பத்மநாபாவை அவரது பெற்றோர் கணக்கியல் துறையில் கல்வி பயில்வதற்காக 1976 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், அவர் பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஒன்றிடம் ஆயுதப் பயிற்சியைப் பெற்றுக்கொண்டு ஒரு போராளியாக அங்கிருந்து நாடு திரும்பினார்.

தமிழர்களின் ஆயுதந் தாங்கிய போராட்டம் எங்கள் மத்தியில் ஜனநாயக விழுமியங்களை புறந்தள்ளி உதாசீனப்படுத்தும் போக்கு தலையெடுத்திருந்த போதும் தோழர் பத்மநாபா எப்போதும் ஜனநாயக பாரம்பரியங்களுக்கு மதிப்பளித்து வந்தவர். கட்சிக்குள் ஜனநாயகத்தையும், தமிழ் இயக்கங்களிடையே ஐக்கியத்தையும் இடையறாது வலியுறுத்தி வந்தவர். கட்சிக்குள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அவர் துப்பாக்கிகளுக்குப் பதிலாக விமர்சனம் சுயவிமர்சனம் என்ற ஆயுதத்தையே நம்பினார். இயக்கங்களிடையே தோன்றிய பிணக்குகளை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக்கொள்ளவதற்கே முக்கியத்துவமளித்தார். அவர் இறக்கும் வரையும், இறந்த பின்னரும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களாலும் மரியாதை செலுத்தப்படும் ஒருவராக தோழர் பத்மநாபா விளங்குவதற்கு அவரது இந்த அணுகுமுறையும் ஒரு காரணம்.

தோழர் பத்மநாபாவின் மறைவின் பின் வெளியிடப்பட்ட நினைவு மலரில் அவரது நீண்டகால நண்பனும், கட்சித் தோழனுமான தோழர் வரதராஜப்பெருமாள் குறிப்பிட்டிருப்பவற்றை இங்கு குறிப்பிடுதல் பொருத்தமாகும்.

“அவர் கொள்கைப் பிடிவாதமுடைய ஒரு சமதர்மப் புரட்சிவாதி. மாக்சிசம், வர்க்கம், புரட்சி, போராட்டம் என்ற வார்த்தைப் பிரயோகங்களை உருப்போடும் வரட்டுத் தனமோ அல்லது தனது சுயநல நோக்கங்களுக்காக புரட்சிக் கோட்பாட்டை பயன்படுத்தும் பாசாங்குத் தனமோ அவரது புரட்சிவாழ்;க்கையில எள்ளளவும் இருந்ததில்லை.

அவர் சமூகப் புரட்சிக்காக உணர்வு பூர்வமாக உழைத்தார் சமூகப் புரட்சியாளர்களை உள்ளத்தால் நேசித்தார். நேர்மையான சமூகப் புரட்சியாளர்கள் மீது – அவர்கள் தன்னை விமர்சிப்பவர்களாயினும் சரி, எதிர்ப்பவர்களாயினும் சரி – உளமார அன்பு செலுத்தினார். அவ்வாறானவர்களோடு பழகுவதிலும், நட்பு கொள்வதிலும் பெருமிதமும் மகிழ்ச்சியும் கொண்டார்.

தோழர் நாபாவிடம் கர்வம், தலைக்கனம், அதிகார வெறி என்பவற்றை இம்மியளவேனும் யாரும் கண்டிருக்க முடியாது. பல்லாயிரக்கணக்கான இளம் தோழர்கள் அவர் சுட்டு விரலுக்கு கட்டுப்பட்டு எதையும் செய்யத் தயாரான நிலையில் இருந்த போதிலும் அவர் எந்தக் கட்டத்திலும் அதிகார மமதையோடு நடந்ததில்லை. ஸ்தாபனத்தின் ஜனநாயக பூர்வமான பொது முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் ஒரு கட்டுப்பாடுடைய உறுப்பினனுக்கு முன்னுதாரணமாக அவரே திகழ்ந்தார்.”

இவ்வாறு தோழர் பத்மநாபாவின் மறைவின் பின் வெளியிடப்பட்ட நினைவு மலரில் அவரது நீண்ட கால நண்பனும் கட்சித் தோழனுமான தோழர் வரதராஜப்பெருமாள் குறிப்பிட்டிருப்பது அவரது குணநலன்களை மிகவும் நேர்த்தியாய் பிரதிபலிப்பதாகும்.

தோழர் பத்மநாபா எப்போதும் மனித நேயத்துக்கு முக்கியத்துவம் தந்தவர்.
உழைக்கும் மக்களின் துன்ப, துயரங்களுக்கு தீர்வு காண உழைப்பதில் தனது இலட்சியமாக கொண்டிருந்தார். அவரது தாராள மனப்பான்மையும், தயாள குணமும் தான் அவரது எதிரிகளுக்கும் வாய்ப்பாய் அமைந்தது.

“மக்களுக்காகவே மண்ணை நேசிக்கின்றோம்” என்ற அவரது புகழ்பெற்ற வாக்கியம் அவர் எந்தளவிற்கு மக்களை நேசித்தார் என்பதை எடுத்துக்காட்டுவதாகும்.

சிங்கள மக்களின் ஆதரவு எமக்கு அவசியம் என்பது பற்றி பலர் இன்று பேசுகின்றார்கள் ஆனால், எமது போராட்டத்தின் ஆரம்ப காலத்திலேயே சிங்கள மக்கள் எமது நண்பர்கள் என்பதை நன்குணர்ந்து செயற்பட்டவர் தோழர் பத்மநாபா.

அவர் தனது சொல்லாலும் செயலாலும் மட்டுமல்ல தனது வாழ்க்கை நடைமுறை மூலமும் எங்களுக்கு வழிகாட்டிய, கற்றுத்தந்த ஒருவர்.

ஏறத்தாள 10 ஆண்டுகளாக பழகி வந்த ஆனந்தி என்ற இந்தியப் பெண்ணை 10.04.1989 இல் திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி சுமார் ஒருவருடத்தில் 19.06.1990 இல் சென்னை, கோடம்பாக்கத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இதனால் அவருக்கு குடும்ப வாரிசு இல்லை. ஆனால், அமரர் தோழர் பத்மநாபாவின் அரசியல் வாரிசுகள் பல ஆயிரக்கணக்கானவர்கள், இலங்கையில் மட்டுமல்ல இன்று உலகெங்கும் உள்ளார்கள். அவர்கள், தோழர் பத்மநாபாவின் கொள்கைகளையும், இலட்சியங்களையும் முன்கொண்டு செல்வார்கள். தங்கள் சொல்லாலும், செயலாலும் அவரது நாமம் நின்று, நிலைக்கச் செய்வார்கள். மக்களை நேசித்து, மக்களின் உரிமைகளுக்காக போராடி, மக்களின் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுவதற்காகவே தனது உயிரையும் அர்ப்பணித்த தோழர் பத்மநாபா என்னென்றும் மக்களால் நேசிக்கப்படுவார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive