
இந்தியாவின் அரச உயர் அதிகாரி ஒருவர் அடுத்த மாத ஆரம்பத்தில் இலங்கை வருகின்றார் என்று இந்திய வெளியுறவு அமைச்சுச் செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார். அவர் இன்று சென்னையில் தமிழ் நாடு முதல்வர் மு.கருணாநிதியைச் சந்தித்தார். இச்சந்திப்பைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களுடன் பேசியபோதே அவர் இத்தகவலை வெளியிட்டார்.
இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை அவர் நேரில் பார்வை இடுவார். ஈழத் தமிழர் விவகாரம் குறித்தும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல் குறித்தும் இலங்கைத் தரப்பினருடன் அவர் பேச்சு நடத்துவார். யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு இந்தியா உதவி செய்ய தயாராகவே உள்ளது.
மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு அப்பால் அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும்.அவர்களின் வாழ்வாதாரங்களையும் முன்னேற்ற வேண்டும். எப்படி எல்லாம் வடக்கு, கிழக்கு மாகாண மக்களை முன்னேற்ற முடியுமோ அப்படியெல்லாம் முன்னேற்ற வேண்டும்.
வடக்கு கிழக்கில் 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுப்போம் என்று உறுதிமொழி வழங்கி உள்ளோம். 1000 வீடுகளுடன் எமது திட்டத்தை விரைவில் ஆரம்பிப்போம். யாழ்ப்பாண மக்களின் நலனை உத்தேசித்து யாழ்.குடா நாட்டில் இவ்வருட இறுதிக்குள் துணைத் தூதரகம் ஒன்றையும் அமைக்க உள்ளோம்.
No comments:
Post a Comment